அரசின் வரிச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அதற்கேற்ப தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் ஏன் கவனம் செலுத்தவில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

“எவ்வளவு சலுகைகள் கொடுத்தாலும் பசி அடங்காதா?” என்ற அவரது விமர்சனம் தொழில்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) கூட்டத்தில் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய வரிச் சலுகைகளைச் சுட்டிக்காட்டிய அவர், “கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்துள்ளோம். ஆனால், இதனால் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளனவா? புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனவா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கினாலும், தொழிலாளர்களின் நலனில் போதிய அக்கறை காட்டப்படுவதில்லை என்ற தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். நிறுவனங்களின் லாப வளர்ச்சிக்கு இணையாக ஊழியர்களின் ஊதியமும் உயர வேண்டும் என்பதை அவரது பேச்சு வலியுறுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
லாபம் உயர்வு; ஊதிய உயர்வு குறைவு!:
தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ள நிலையில், பணியாளர்களுக்கான ஊதிய ஒதுக்கீடு அதே வேகத்தில் உயரவில்லை என்ற விவாதமும் இந்தச் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டில் நிறுவனங்களின் லாபம் 32 சதவீதம் அதிகரித்ததாகவும், அதே காலகட்டத்தில் ஊதியத்திற்கான நிதி ஒதுக்கீடு 12.5 சதவீதம் மட்டுமே உயர்ந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், 2025-26ஆம் நிதியாண்டில் 446 நிறுவனங்களின் லாபம் சராசரியாக 19 சதவீதம் அதிகரித்தபோதிலும், ஊதியத்திற்கான நிதி ஒதுக்கீடு 9 சதவீதம் மட்டுமே உயர்ந்ததாக அந்தத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
12.8 லட்சம் கோடி ரூபாயாக நிதி கையிருப்பு!:
மறுபுறம், இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிதி கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, நிறுவனங்களின் நிதி கையிருப்பு 12.8 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச அளவு என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனங்களின் லாபம் மற்றும் நிதி கையிருப்பு உயர்ந்து வரும் நிலையில், ஊழியர்களின் ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் அதற்கேற்ற முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் பேச்சின் முக்கியச் செய்தியாக அமைந்துள்ளது.
அரசின் சலுகைகள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற விவாதத்தை, பிரதமரின் இந்தக் கருத்துகள் மீண்டும் கிளப்பியுள்ளன.
“பிரதமர் மோடிக்கு இரும்பு மன உறுதி உள்ளது!” – பங்கஜ் சவுத்ரி புகழாரம்
