தமிழகத்தில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும், ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை சம்பவங்களும் போதைப்பொருள் நடமாட்டமும் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகியின் வீட்டில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக டிஜிபியே அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க வேண்டிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பதற்கு அறிக்கைகள் வெளியிடுவது மட்டும் போதாது. போதைப்பொருள் விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். போதைக்கு அடிமையானவர்களால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டும் அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மட்டுமின்றி, ராணிப்பேட்டை அமைச்சரும் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை இருப்பதாகக் கூறினார்.
இத்தனை பிரச்சினைகள் குறித்தும் முதலமைச்சர் எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன, என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதையும் தெரிவிக்கவில்லை என விமர்சித்தார்.
மேட்டூரில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறப்பதால் சம்பா சாகுபடியை எவ்வாறு மேற்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காத நிலையில், தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேச வேண்டிய விஷயங்கள் குறித்துப் பேசாமல் திரும்பிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. எங்களிடம் 41 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர். ஆனால், இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்றார்.
மேலும், 2011ஆம் ஆண்டு புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை மின்வெட்டில்லாத மாநிலமாக உருவாக்கிக் காட்டினார். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது மின் உற்பத்தி அதிகரித்ததுடன், விலைவாசியும் குறைந்தது எனத் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து யாரும் கட்சியை விட்டு விலகவில்லை என்றும், இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவர்தான் எஸ்.பி. வேலுமணி என்றும் கூறிய எடப்பாடி பழனிசாமி, கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளதாகத் தெரிவித்தார்.
