காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 147-வது கூட்டம் இன்று (நவம்பர் 20) டெல்லியில் நடைபெறுகிறது.
குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேகதாது அணை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ள சூழலில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
