வங்கக்கடலில் உருவான அக்வான் புயல், ஆந்திரா – ஒடிசா இடையே கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீவிர புயலாக வலுப்பெற்றது!
வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த 15-ந்தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான வானிலைச் சுழற்சி, 18-ந்தேதி தீவிர புயலாக வலுப்பெற்று அக்வான் எனப் பெயரிடப்பட்டது.
மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த இந்தப் புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளை நெருங்கியது.
மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று!
இந்த நிலையில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே கோபால்பூர் பகுதியில் அக்வான் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு சுமார் 2 மணி நேரம் நீடிக்கும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
கஞ்சம், கஜபதி, பூரி, கேந்திரபாரா, கந்தமால், ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் ஏற்கனவே மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள 5 மலைப்பகுதி மாவட்டங்களில் 941 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
புயலால் அதிகம் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ஒடிசா மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் மற்றும் இலவச உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 1,098 கர்ப்பிணிப் பெண்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட 300 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் களமிறக்கப்பட்டுள்ளன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 19 முதல் 21 வரை பள்ளிகள் மூடல் – ஒடிசா அரசு அதிரடி உத்தரவு!
