எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் பாஜக உடன் கூட்டணி வைக்காவிட்டால் அவருடைய கட்சியை உடைத்துவிடும் அபாயம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் அதிமுக களத்திலேயே இல்லை என்று சொன்ன நிலையில், அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுவை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை இருவரும் காலியானால் சரி என்று நினைப்பார். தேர்தலில் ஆதவுக்கு எதிராகவே மார்ட்டின் மனைவியை நிறுத்தி, இருவரையும் திமுகவிடம் தோற்கடித்துவிடுவார். ஆதவ் அர்ஜுனா செய்கிற அட்டகாசத்திற்கு அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள். திடீரென மார்ட்டின் குடும்பத்திற்குள் நுழைந்து, அவரது மகளை திருமணம் செய்து, பணத்தையும் சூறையாடி, பெயரை கெடுத்துவிட்டார். மார்ட்டினின் உடல் நலன் பாதிக்கப்பட்டதற்கு ஆதவ்தான் காரணம். ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நடவடிக்கைகளை கண்டித்து, அவரது மனைவியே அறிக்கையே வெளியிட்டிருக்கிறார்.

அந்த அளவுக்கு ஆதவ் அர்ஜுனாவால் மார்ட்டின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆதவை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட குடும்பத்தினரே களமிறங்கி விட்டனர். எப்படியாக இருந்தாலும் டார்கெட் போட்டு ஆதவ் அர்ஜுனாவை காலி செய்து விடுவார்கள். மார்ட்டின் குடும்பம் ஒருபக்கம், திமுக ஒரு பக்கம், சொந்த கட்சியினரே மற்றொரு பக்கம் உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், சிபிஐயிடம் சென்று ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கிய சாமி ஆகியோருக்கு எதிராக வாக்கு மூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். கடைசியாக முதல் சிபிஐ விசாரணையின்போது காரில் அழைத்துச் சென்றார். இரண்டாம் முறை விசாரணையின்போது அவர் தலைமறைவாக தான் இருந்தார். நிர்மல் குமார் தான் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் என்று ஒட்டுமொத்தமாக பாஜக அனைவரையும் கூட்டணிக்கு தூக்கி சென்றுவிட்டது. இதனால் விஜய் யாருடனும் கூட்டணி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அதற்காக தான் விஜயை சிபிஐ விசாரணைக்கு அழைக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்துவிட்டால், விட்டுவிடுவார்கள். சேராவிட்டால் பீஸ் பீஸ் ஆக உடைத்துவிடுவார்கள். ஆதவ் அர்ஜுனாவால் எந்த பிரயோஜனமும் இல்லாததால் பாஜகவினர் விட்டுவைத்துள்ளனர். இல்லாவிட்டால் அவர்கள் கூப்பிட்ட உடன் ஆதவ் அர்ஜுனா ஓடிவிடுவார். ஆதவ் அர்ஜுனா தொழில் தொடங்குவதாக சொல்வதெல்லாம் பொய். அவர் மாமனார் சொத்தை அழிப்பதற்காக பல நிறுவனங்களை தொடங்கி மூடிவிடுவார். டிஎம்டி கம்பி நிறுவனம் தொடங்கினார்கள். அதை ஒட்டுமொத்தமாக முடித்துக்கட்டியதில் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டது. கடைசியில் அவரை திகார் சிறையில் சென்றுதான் மீட்டு வருவார்கள் என்று தான் நினைக்கிறேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தவெகவில் இணைந்து பெரிய பதவியை அடைந்ததன் மூலம் தன்னுடைய லட்சியத்தை அடைந்துவிட்டார். ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால், அவர்கள் எடப்பாடியிடம் இருந்துதான் சீட்டு வாங்க வேண்டும். ஆனால் அவர் வாங்க மாட்டார். அதற்கு பதிலாக அதிமுகவிடம் இருந்து சீட்டுகளை வாங்கி, பாஜக தங்களுக்கு பிரித்து கொடுக்கும்படி கூறுவார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக விஜய் போட்டியிட மாட்டார் என்று நாம் அவர் கட்சி தொடங்கிய காலம் முதலே சொல்லிக் கொண்டிருக்கிறோம். விஜய் நேரடியாக தேர்தல் களத்திற்கு வர மட்டார். தான் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக சொல்லி கட்சியினரை உசிப்பிவிட்டு, கடைசியில் கைவிட்டு போய்விடுவார். விஜய் தேர்தலுக்கு போனால் எதிர்க்கட்சிகள் தடுத்துவிடுவார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் கட்சியினரை மட்டும் நிற்க வைப்பார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ரஜினிகாந்த் ஏன் அரசியலுக்கு வராமல் போனார். அது நல்ல முடிவு என்பது தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
