அதிமுகவை தொடர்ச்சியாக அவமானப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் செய்து பாஜகவின் நோக்கம் அல்ல என்பது தெளிவாகிறது. முடிந்த வரை அதிமுகவை சிதைப்பது தான் அமித்ஷாவின் பிரதான திட்டமாக உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அரசில் பாஜக பங்குபெறும் என்று அமித்ஷா தெரிவித்துள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கு. கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர் தொடக்கம் முதலே தெளிவாக உள்ளார். அதிமுக உடன் அமைக்கிற போது எடப்பாடி தலைமையில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி அரசு அமையும் என்று சொன்னார். அதன் பிறகு இருதரப்பும் கூட்டணி ஆட்சியை மறுத்து வந்தனர். அண்ணாமலை, ஒருபடி மேலேயே போய் பாஜக அரசு என்று சொன்னார். இதேபோல் மதுரையில் பேசிய அமித்ஷா, பாஜக – அதிமுக கூட்டணி என்று சொன்னார். இதற்கும் அதிமுக – பாஜக கூட்டணி என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர் மனதிற்குள் உள்ளதுதான் வெளியே வந்திருக்கிறது. இந்த நிலையில், தினத்தந்தி, தினமலர் மற்றும் தினமணி ஆகிய 3 தமிழ் நாளிதழ்களுக்கு அமித்ஷா அளித்துள்ள பேட்டியில் மிகவும் தெளிவாக உள்ளது. அவர்கள் கணக்குப்படி தான் காய்களை நகர்த்தி உள்ளனர்.
தனது பேட்டியில் அமித்ஷா மூன்று விஷயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறார். ஒன்று என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணி அரசில் பாஜக அங்கம் வகிக்கும். என்.டி.ஏ கூட்டணி அரசுக்கு, அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆவார். தனது பேட்டியின் மூலம் தமிழ்நாட்டில் கூட்டணி அரசுதான் அமைய போகிறது என்றும், கூட்டணி அரசில் பாஜக இருக்கும் என்றும் அமித்ஷா சொல்லிவிட்டார். மூன்றாவது அதிமுகவில் இருந்து ஒருவர் தலைமை தாங்குவார் என்கிறார். எடப்பாடி என்கிற பெயரை அவர் சொல்லவே கிடையாது. எடப்பாடி தலைமையில் கூட்டணி என்ற அறிவித்ததில் இருந்து, தங்களுடைய நிலைப்பாட்டை பாஜகவினர் மாற்றியுள்ளனர் என்பது தெளிவாகிறது. கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வனும், ராஜேந்திர பாலாஜியும் சொல்கிறார்கள். ஏன் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்? என்று அவர்கள் சொல்லவில்லை. முதலில் அதிமுகவின் நிலைப்பாட்டை சொல்லுங்கள். சீண்டிப் பார்ப்பது என்பதை தாண்டி அவர்கள் தெளிவாக ஸ்டராட்டஜிக்கலாக நகர்த்துகிறார்கள். அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சராக இருப்பார். அது எடப்பாடியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. என்று அவர்கள் சொல்கிற போதே எடப்பாடியின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு மேல் அவர்கள் பாஜகவிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு பதில் சொல்ல வேண்டியது எடப்பாடி பழனிசாமி. வைகைசெல்வனோ, ராஜேந்திர பாலாஜியோ கிடையாது.
அதிமுகவை எவ்வளவு தூரம் இழிவுபடுத்த வேண்டுமோ, எவ்வளவு தூரம் வாக்கு வங்கியை சிதைக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பாஜக செய்து கொண்டிருக்கிறார்கள். 1996ஆம் ஆண்டில் நரசிம்மராவ் – ஜெயலலிதா கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சிறுமைப்படுத்திக் கொள்ளவில்லை. பாஜக உடன் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளன. அவர்களை டெல்லியில் உள்ள பெரிய கட்சி இதுபோன்று அவதிப்பு செய்தது கிடையாது. பாஜகவுக்கு அதிகபட்சம் 8 சதவீத வாக்குகள் இருக்கலாம். எப்படி பார்த்தாலும் அதிமுகவில் மூன்றில் ஒரு பங்குதான் உங்களுடைய வாக்கு வங்கியாகும். ஒரு கவுன்சிலர் சீட்டு கூட உங்களால் ஜெயிக்க முடியாது. அப்படி இருக்கிறபோது தமிழ்நாட்டை 30 வருடங்கள் ஆண்ட கட்சியை தொடர்ச்சியாக அமதிக்கிறீர்கள். இதையும் மீறி அவர்கள் கூட்டணியில் தொடர்கிறார்கள் என்றால் அது எப்படி என்பது அதிர்ச்சியாக உள்ளது. அதிமுகவினர் மிகவும் அழுத்தத்தில் உள்ளனர். அமித்ஷாவின் இந்த பேட்டி கூட்டணியை மேலும் கீழ்நோக்கி தள்ளும்.
கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் பாஜக நம்புகிறது. தான் வளர்வதற்கு இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்று அழிய வேண்டும். ஆட்சியில் இருக்கும் வரை திமுகவை அழிக்க முடியாது. ஆனால் அதிமுக மிகவும் பலவீனமாக உள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு திராவிடக் கட்சி சிதைந்தால் தான் நமக்கான வாய்ப்புகள் இருக்கிறது எனறு பாஜக நினைக்கிறது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக வந்தபோது சொன்னார், தமிழ்நாட்டில் இதுவரை திமுக Vs அதிமுக என்று இருந்த அரசியல் இனி திமுக Vs பாஜக என்று மாறும் என சொன்னார். அண்ணாமலையின் பேச்சு, அமித்ஷாவின் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்தால் புரியும். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தாலும் பரவாயில்லை. அதிமுக எவ்வளவு தூரம் சிதைய முடியுதோ, அவ்வளவு தூரம் சிதைய வேண்டும். அந்த சிதைவுகளில் இருந்துதான் நமக்கான வளர்ச்சி இருப்பதா பாஜக கருதுகிறது. யோசித்து பாருங்கள் ஒரு கூட்டணி எடுபடவில்லை. ஆனால் தொடர்ச்சியாக, அதிமுகவுக்கு எதிராகவே செல்கின்றனர். தமிழ்நாட்டில் உண்மையிலேயே ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் இதை செய்ய மாட்டார்கள்.
இந்த விஷயங்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நன்றாகவ புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. இப்படி இருவரும் மாறி மாறி பேசினால் கூட்டணி உடைந்துவிடும் என்று தோன்றலாம். ஆனால் அப்படி நடக்காது. அப்படி கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினால், அந்த கட்சியை உடைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். இன்றைக்கு அமித்ஷாவின் பேட்டிக்கு எடப்பாடியிடம் இருந்து பதில் வந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் பதில் அளிக்காதது கோழைத்தனத்தை மறைக்கும் செயலாகும். உங்களுக்கு கையறு நிலை உள்ளது. அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய் உடன் கூட்டணி வைக்கும்பட்சத்தில், அதிமுகவை செங்குத்தாக பாஜக உடைக்கும். என்ன நடந்தாலும் பாஜக உடன் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று ஒரு பிரிவு முன்னாள் அமைச்சர்கள் தெளிவாக இருக்கின்றனர். எடப்பாடி இல்லாவிட்டால் வேலுமணி இருக்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, வேலுமணி வேல் பரிசளிக்கிறார். கடைசி நேரத்தில் அதிமுக, விஜய் கட்சிக்கு போனால் என்ன நடக்கும் என்றும் மோடி, அமித்ஷாவை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். தேசிய அளவில் இன்றைக்கு யாராவது பாஜகவை எதிர்க்க முடியாது. அப்படியே பாஜக கூட்டணியில் இருந்து வெளியே போனால் அதிமுக இரண்டாக உடையும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.