சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவரை விட மேலதிகாரி ஒருவர் தான் டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்திருக்க முடியும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் மரணம் தொடர்புடைய உயர் அதிகாரி யார் என்பது குறித்தும், இந்த விவகாரத்தில் அரசு மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில், காவல்துறை அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து போன் செய்து அழுத்தம் தரப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி.க்கு அவர் பேசவில்லை. டி.எஸ்.பிக்குதான் அவர்கள் பேசியதாகவும், அதன் பேரில் டிஎஸ்பி உடனடியாக தனிப்படையை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அஜித்குமாரிடம் காட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கின்றனர். எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாத விஷயத்தில் நீங்களாகவே ஒருவரை குற்றவாளி என நினைத்துக் கொண்டு இதுபோன்று அடிக்கலாமா? என கேள்வி எழுகிறது.
அவர்கள் அடித்தார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. இவர்கள் இந்த அளவுக்கு தாக்குதல் நடத்துவதற்கான காரணம் என்ன? அஜித்குமார் மீது நிகிதா வாய்மொழியாக புகார் அளித்தார் என்றால் அது குறித்து விசாரிக்க வேண்டும். நிகிதா 2 வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவரது தகவலை நம்பி போய், அஜித்குமார் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றால், காவலர்கள் நிச்சயமாக இதை தன்னிச்சையாக செய்திருக்க மாட்டார்கள். டிஎஸ்பி மேலிடத்தில் இருந்து பெரிய சப்போர்ட் இருக்கும் தைரியத்தில் தான் இதுபோன்று செய்துள்ளார். காவல்துறை அதிகாரி சொன்னாரோ, அல்லது ஐஏஎஸ் அதிகாரி சொன்னாரோ… இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள் யார் என்கிற உண்மைகள் வெளியே கொண்டுவர வேண்டும்.
இதுபோன்ற குற்றங்கள் காவல்துறையில் இன்று அல்லது நேற்று நடைபெறவில்லை. வெள்ளைக்காரர்கள் காலத்தில் சொல்லிக்கொடுத்ததை தான் இன்னும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நம்முடைய காவல்துறையை இன்னும் சீர்திருத்தம் மேற்கொள்ளவில்லை. அறிவியல்பூர்வமான விசாரணைகள் குறித்து இன்னும் சொல்லித் தரவில்லை. லத்தியை வைத்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம் என்று சொல்லிக் கொடுத்தால் போலீசார், லத்தியை தான் கையில் எடுப்பார்கள். இதுபோன்ற ஒன்றிரண்டு விஷயங்கள் இவ்வளவு தூரத்துக்கு வெளியே வருகிறபோது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தயவு தாட்சண்யம் இன்றி தண்டனை கொடுத்தால் ஒழிய இதனை தடுக்க முடியாது. அஜித்குமார் விவகாரத்தில் யாரோ ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு தொடர்பு உள்ளதாக சொல்கிறார்கள். அவரை கண்டுபிடித்து குறைந்தபட்சம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி இந்த கொலைக்கும் அவர்தான் காரணம். அவரை தப்பிக்க விடக்கூடாது. அப்படி அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்தால் இனி எந்த ஒரு ஐஏஎஸ்அதிகாரியோ, காவல்துறை அதிகாரியோ இதுபோன்று சொல்ல மாட்டார். அப்படி சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியும்.
அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் அனைத்து சரியானது. முதலமைச்சராக இருந்துகொண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு வருந்துகிறேன் என்று சொல்லியது அவருடைய பெருந்தன்மையாகும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுதான் இறுதி முடிவாகும். அதை முதல்வர் செய்து விட்டார் என்றால் அவருக்கும் நல்லது. இந்த ஆட்சிக்கும் நல்லது. நம்முடைய மாநிலத்திற்கும் நல்லது. அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு காரணம் காவல்துறை, சிபிசிஐடி ஆகிய முதலமைச்சரின் கீழ் உள்ள துறையாகும்.
ஏற்கனவே காவல்துறை அதிகாரி ஒருவர் சென்று கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை அழிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது மாநில காவல்துறை வழக்கை விசாரித்தால் தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் எழுந்துகொண்டே இருக்கும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியதன் மூலம் அஜீத் வழக்கில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களை கண்டுபிடியுங்கள் என்று சொல்லியுள்ளார். என்னை பொருத்தவரை சிபிசிஐடி இந்த வழக்கை சரியாக விசாரிக்க முடியும். ஆனால் இன்றைய சூழலில் ஏதாவது ஒன்றை போட்டு குழப்பிக்கொண்டே இருப்பார்கள். சிபிஐ விசாரணை என்றால் தமிழக அரசு மீது விமர்சனங்கள் வராது.
பொள்ளாச்சி வழக்கை சிபிஐ தாமதமாகத்தான் விசாரணைக்கு எடுத்தது ஆனால் முடிந்துவிட்டது. ஆனால் பொள்ளாச்சி வழக்கில் கிடைத்த நீதி இங்கு கிடைக்குமா? என சந்தேகம் உள்ளது. காரணம் அங்கே காவல்துறை அதிகாரிகள் அத்துமீறவில்லை. சில தனிநபர்கள் அத்துமீறினார்கள். அவர்கள் மீது வழக்கு நடைபெற்றது. தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும், இந்த வழக்கில் இறுதியாக நீதி கிடைக்கும். ஆனால் அஜித்குமார் மரண வழக்கில் குற்றத்தை செய்தது காவல்துறை சேர்ந்தவர்கள் தான். அப்போது காவல்துறையை சேர்ந்த சக ஊழியர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். இந்த விவகாரத்தில் காவல்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதுதான் சரியான விஷயமாகும். இது நீண்டகால நடவடிக்கையாகும். குறுகிய கால நடவடிக்கை என்பது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பது ஆகும்.
காவல்துறை சீர்திருத்தம் என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அஜித்குமார் மரணத்தில் முதலமைச்சரால் என்ன என்ன நடடிவக்கைகள் எடுக்க முடியுமோ, அதில் முதல் பகுதியை சரியாக செய்திருக்கிறார். இன்னும் செய்ய வேண்டிய மிகச் சிறப்பான காரியங்கள் உள்ளன. அதை முதலமைச்சர் செய்ய வேண்டும். அஜிக்குமார் மரணத்தில் மேலிடத்தில் இருந்து உத்தரவிட்ட நபர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் இந்த விவகாரத்தில் எஸ்.பி. தலையிட வில்லை. அப்போது மேல் அதிகாரிதான் சொல்லி இருக்க வேண்டும். அப்படிதான் அனுமானிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.