எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்பேன் என்று கூறும் நிலையில், தற்போது வரை பாஜக மட்டுமே கூட்டணியில் உள்ளது. எனவே பாதி கட்சிகளையாவது கூட்டணியில் இணைத்து அவர் சுற்றுபயணம் மேற்கொண்டால் தான் அது பலனளிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகம், அதிமுக தரப்பில் எடப்பாடி சுற்றுப் பயணம் என அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியினர் உடன் வீடியோ கால் மூலம் பேசி உற்சாகப்படுத்தி வருகிறார். 30 சதவீத வாக்குகளை பெற்றால் ஆளுங்கட்சி ஆகிவிட முடியும். இந்நிலையில், 30 சதவீத வாக்காளர்களை கட்சியில் சேர்ப்பது என்பது நல்ல திட்டம் என்று திமுக பொதுக்குழுவில் அறிவித்த போதே நான் சொன்னோன்.
எந்த ஒரு கட்சித்தலைவரும் இந்த கோணத்தில் யோசிக்கவில்லை. நல்ல இலக்கு அது. அது நடந்து, உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் நிஜமாகவே திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்றால், வாக்கு வங்கியின் அடித்தளம் வலுவடையும். திமுக உறுப்பினர் ஆகிறேன் என்று ஆவணங்களை வழங்கிய ஒருவன், மாற்றி வாக்களிக்க மாட்டான் என்பது உண்மையானால் திமுக மிக வலுவான அடித்தளத்தை அமைக்கும். 30 சதவீதம் வாக்காளர்களை இலக்கு வைத்து, 10 சதவீதம் புதிய ஆட்களை உறுப்பினர்களாக சேர்த்தாலே, தற்போதை சூழலில் திமுகவுக்கு அது சாதகம்தான்.
இதுபோன்ற ஒரு ஆக்ரோஷமான மனநிலையுடன் அதிமுக களமிறங்கி இருக்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. சுமார் 22 சதவீத வாக்குகளை தான் அவர்களால் பெற முடிந்தது. 30 ஆக இருந்த அதிமுகவின் வாக்கு சதவீதம் 23 ஆக குறைந்துவிட்டதே என்று எடப்பாடி பழனிசாமி கலைப்படவே இல்லை. அதைதான் நாம் விமர்சித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அது நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 22 சதவீத வாக்குகளை தக்க வைப்பதற்காக மேற்கொள்வதாகும். வாக்கு சதவீதத்தை 22-லிருந்து 30 சதவீமாக ஆக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அது குறித்து எடப்பாடி துளியும் கவலைப்படவில்லை. இது மிகவும் ஆபத்தான அரசியலாகும்.
பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டிய நேரத்தில் அமைக்காமல், அமைக்கக் கூடாத நேரத்தில் கூட்டணியை அமைத்துள்ளார். அதிமுகவுக்கு வாக்களிக்கலாம் என்று நினைக்கும் இஸ்லாமியர்களையும், இல்லை நீங்க அங்கேயே போடுங்கள் என்று சொல்லி நிற்க வைத்துவிட்டீர்கள். 5000 வாக்கு வித்தியாசம் என்பதும் சட்டமன்றத் தேர்தலில் தான் பாதிக்கும். மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு கிடைக்காவிட்டால், மற்றொரு தொகுதியில் வாக்குகளை வாங்கி சமாளிக்க முடியும். தேவர் சமுதாய வாக்குகள் இல்லாவிட்டால், மற்ற சமுதாய வாக்குகளை வாங்கி நிரவ முடியும். ஆனால் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை வெற்றி, தோல்வி இரண்டும் அங்கேதான். அந்த ஆபத்து உள்ளதால்தான் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சுமை என்று சொல்கிறேன்.
தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்கிற பெயரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்குவது 100 சதவீதம் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமையும். ஆனால் அது வாக்கு வங்கியை அதிகரிக்குமா? நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மெகா கூட்டணி அமைக்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் தலைமை கழகத்தில் சொல்லி அனுப்புகிறோம். ஆனால் அதை நோக்கிய பயணத்தில் எடப்பாடி சுற்றுப்பயணத்தை தொடங்குகிற இந்த நாளில் கூட கூட்டணி அமைந்திருக்கவில்லை. நம்மை அவமதிப்பு செய்கிற பாஜக உடன்தான் கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அது சுற்றுப்பயணத்தின் ஒரு பின்னடைவாக அமைய காரணமாக இருக்குமே தவிர, அந்த அணி பலமாக இருக்காது.
குறைந்தபட்சம் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, பாமக இந்த அணிக்கு வந்துவிட்டது என்று சொன்னால் அது உற்சாகத்தை ஏற்படுத்தும். இல்லா விட்டால் அது சோர்வான மனநிலையை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிசாமி வருகிறார் என்றால் நிச்சயமாக ஆயிரம் பேர் வருவார்கள். அது ஒரு வகையில் உற்சாகம் தான். எடப்பாடி வருகிறார், தேர்தலை நோக்கிய பயணம் என்கிறபோது தொண்டர்களிடம் கூடுதல் உற்சாகம் அதிகரிக்கும். ஆனால் அது மட்டும் போதாது. எடப்பாடி சொன்னதில் பாதி அளவிலாவது கூட்டணியை உருவாக்கிவிட்டு போகா விட்டால் சுற்றுப் பயணத்தால் பயன் இருக்காது.
தவெக செயற்குழு கூட்டத்தில் தெருவுக்கு 2 நிர்வாகிகள், குடும்பத்திற்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் உறப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அது நல்ல திட்டம். அதை செயல்படுத்துவதில் பெரிய சவால் உள்ளது. அதிமுக இன்றைக்கும் பெரிய கட்சி என்று சொல்கிறோம் என்றால், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைக்கும் வேலையை 30 சதவீதம் தான் செய்திருக்கிறீர்கள் என்று சத்தம் போட்டிருக்கிறார். ஆனால் திமுகவில் உறுப்பினர் சேர்க்கைக்கு போய்விட்டார்கள். தேர்தலுக்கான முதல் பணியே பூத் கமிட்டிதான். அதை இன்னும் அதிமுக முடிக்கவில்லை.
இந்நிலையில் தவெகவினர் இதுபோன்று உறுப்பினர் சேர்க்கைக்கு 50 சதவீதம் செயல்வடிவம் கொடுத்தாலே வளர்கிற கட்சிக்கு நல்லதாகும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது அடுத்த விஷயம். முதலில் கட்சியை கட்டமைக்க வேண்டும். விஜய் பிரச்சாரத்திற்கு செல்வது கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் உறுப்பினர் சேர்க்கை தான் வாக்குகளை பெற்றுத்தரும். கூட்டத்திற்கு திரள்பவர்களை கண்டு விஜய் ஏமாந்துவிடக் கூடாது. அதில் 5000 பேரையாவது வாக்காளராக மாற்ற வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.