மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பிரச்சாரத்தை முன்னெடுக்க உதவுவதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் ஒரு நிலைப்பாட்டை எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்தியுடன் நெருக்கமாக இருப்பவர்கள், பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், திருச்சி வேலுசாமி போன்றவர்கள் திமுக கூட்டணி வேண்டாம். இந்த கூட்டணி இல்லாவிட்டால் ஒன்றும் ஆகாது. காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது என்று பேசினார்கள். தற்போது அதை தீவிரப்படுத்தி உள்ளனர். திமுக பெண்களுக்கு ரூ.5000 வழங்கும் திட்டத்தை ஏதோ ஒன்றுக்காக யோசித்து தான் வழங்குகிறார்கள். இதில் அரசியல் கணக்கு உள்ளது எல்லோருக்கும் தெரியும்.
இதை திமுக அரசு செய்கிறபோது, கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினரே விமர்சிக்கிறார்கள். அவர்களில் முன்னிலையில் இருப்பவர் மாணிக்கம் தாகூர். அவருக்கு என்று நிலைப்பாடு உள்ளதா? ஒருவேளை விஜயுடன் சேர்ந்தால் அவரையும் பலப்படுத்தலாம். காங்கிரசையும் பலப்படுத்தலாம் என்று நினைக்கிறாரா? என்று கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலானோர் திமுக உடன் சுமூகமாக செல்கிறார்கள்.

முதலமைச்சர் கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்கிறபோது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உடனுக்கு உடன் பதில் சொல்கிறார். தமிழ்நாட்டில் கூட்டணியின் தலைவராக இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் பேசுகிறபோதே, நேர் எதிர் விமர்சனம் வருகிறது. மாணிக்கம் தாகூர் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி வருகிறது. கூட்டணி, ஆட்சி அதிகாரம் என்பதை தாண்டி திமுக கூட்டணி தோற்றாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ்காரர்கள் இப்படி செய்கிறார்களா? அல்லது தவெக உடன் போய் சேர்ந்தால் தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைக்கிறார்களா? என தெரியவில்லை.
அவர்கள் தவெக உடன் சென்றால் கன்னியாகுமரி மாவட்டத்தை தாண்டி எங்கும் வெற்றி பெறுவதற்கான செல்வாக்கு கிடையாது. எதிர்க்கட்சிகளை விட மோசன வகையில், உடனிருக்கும் காங்கிரஸ் கட்சியினரே விமர்சிப்பது திமுகவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. கூடுதல் இடங்களோ, ஆட்சியில் பங்கோ கொடுக்கிற இடத்தில் திமுக தான் உள்ளது. கேட்டு வாங்குகிற இடத்தில் தான் காங்கிரஸ் உள்ளது. அப்படி இருக்கும்போது பிரச்சினைக்குரிய இடத்தில் போய் கட்சியினரை கூப்பிட்டு கூட்டம் போடுகிறார்கள். திமுகவை கடுமையாக விமர்சிக்க காரணம் மாணிக்கம் தாகூர், 2029ல் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையாக கூட இருக்கலாம்.

தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே மோதல் வலுத்துள்ளது என்பது ராகுல்காந்தியின் தோல்வியாகும். பாஜகவை பொறுத்தவரை அக்கட்சியின் தலைவர்கள் திமுக தோற்க வேண்டும். அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று வரை எதிரியாக இருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்றைக்கு அவருக்கு எதிராக நிற்கும் ஓபிஎஸ், சசிகலாவை மிரட்டும் தொனியில் பேசுகிறார். ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமைய அமமுக 100 சதவீதம் பாடுபடும் என்றும், நீங்கள் வராவிட்டால் அதிமுக அரசு அமைய எதிராக செயல்படுவதாக உங்களை தொண்டர்களிடம் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறார். இதைவிட நாசூக்காக யாராலும் எச்சரிக்கை விடுக்க முடியாது.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை அனைவரும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று ஒரே முடிவில் உள்ளனர். அதேவேளையில் திமுக கூட்டணியில் முதலமைச்சராக ஸ்டாலின் வரட்டும். ஆனால், எங்களுக்கு ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று சொல்கிறார்கள். எல்லா கட்சிகளும் கூடுதல் இடங்களை கேட்கிறார்கள். கூடுதல் இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் போடுகிறது. அதை பார்த்து மனிதநேய மக்கள் கட்சியும் தீர்மானம் போடுகிறது.

விசிக, இடதுசாரிகள், மதிமுக, மநீம உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு குறைந்தபட்சமாக தலா 10 இடங்களை கொடுத்தோம் என்றாலும், 50 இடங்கள் ஆகிவிடும். காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 30 இடங்கள் தர வேண்டும். இவை தவிர்த்து கூட்டணியில் ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன் போன்ற பல்வேறு சிறிய கட்சிகள் உள்ளன. அவர்களுக்கு 10 இடங்கள் என்று வைத்தால் 90 இடங்கள் ஆகிவிடும். கூட்டணி கட்சிகளுக்கு இவ்வளவு இடங்களை கொடுத்தால், எத்தனை இடங்களில் திமுக போட்டியிடும்? இப்படியான பிரச்சினை வருகிறபோது தான் ராஜகண்ணப்பன் உள்ளே வருகிறார். 160 முதல் 170 இடங்கள் நிற்க வேண்டும் என்று சொல்கிறார்.
அப்படி 170 இடங்களில் நின்றால் தான், அவர்கள் 125 இடங்களாவது வருவார்கள். அப்போதுதான் பிரச்சினை இல்லாமல் ஆட்சியை நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 30 முதல் 40 இடங்கள் வரை தோல்வி ஏற்படும். அதேவேளையில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவார்கள் என்றால், அதை நம்ப திமுக தயாராக இல்லை. கடந்த காலங்களில் காங்கிரசில் வெற்றி பெற்றுவிட்டு பாஜகவில் போய் சேர்ந்த வரலாறு உள்ளது. அந்த பயமும் திமுகவுக்கு உள்ளது. இவற்றை எல்லாம் தெரிந்து இருந்தும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் இப்படி பேசுகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


