திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில் இருந்து வரும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவிதத்தார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தேமுதிகவை பொருத்தவரை நாங்கள் இருபக்கமும் பேசவில்லை என்று சொல்லி வந்தார். ஆனால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. உங்களிடம் இருவரும் பேசினார்கள் என்பது உண்மை. ஒருசில நேரம் அதிமுக பேசியது. சில நேரங்களில் நாங்களும் பார்க்கிறோம் என்று பாஜகவும் பேசியது. இரு அணிகளிலும் பிரேமலதா கேட்டதை கொடுக்கத் தயாராக இருந்தனர். அப்படியான சூழலில் எந்த அணியில் போட்டி இட்டால் அதிக இடங்களில் வெல்லலாம் என்று அவர் கணக்கு போட்டிருப்பார். அவருடைய பார்வையில் திமுகவுக்கு அட்வான்டேஜ் இருப்பதால், திமுக கூட்டணிக்கு வந்திருக்கலாம். தேமுதிகவின் நலன். தொடர்ந்து அந்த கட்சி இருக்க வேண்டிய கட்டாயம். கட்சியை நடத்திச்செல்வதில் உள்ள கஷ்டங்கள் என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான், பிரேமலதா இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் எத்தனை இடங்கள் தருவார்கள் என்பது இனிமேல்தான் தெரியும். காரணம் தேமுதிகவுக்கு இரட்டை இலக்கத்தில் கொடுத்தால், கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் கேட்பார்கள். எனவே ஒற்றை இலக்கத்திலேயே கூடுதல் இடங்களை வழங்க வாய்ப்பு உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். தேமுதிகவுக்கு குறைந்த அளவு வாக்குகள் இருந்தாலும், பரவலாக தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி இருப்பதால் தான் அவருக்கு டிமாண்ட் அதிகமாக இருந்தது.

தேமுதிக கூட்டணிக்கு வந்துள்ளதால், காங்கிரசுக்கான இடங்கள் குறையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசுக்க ஒரே அடியாக தொகுதிகளை குறைக்க முடியாது. முன்பு 40 தொகுதிகளுக்கு குறைந்து வரமாட்டோம் என்று சொன்னவர்கள் தற்போது கொஞ்சம் இறங்கி வருவார்கள். முடியாவிட்டால் நீங்கள் முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்கிற இடத்திற்கு திமுக வந்து நிற்கும். காரணம் காங்கிரசில் ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆடியது அழிச்சாட்டியம் என்றுதான் சொல்வேன். அதை காங்கிரஸ் மேலிடம் வேடிக்கை பார்த்தது.
காரணம் உண்மையான காங்கிரஸ்காரர்கள் என்றால், அதிக தொகுதிகள் வாங்கிட வேண்டும் என்று கட்சி தலைவருக்கு கடிதம் எழுதுவார்கள். ஆனால் பொதுவெளியில் நின்றுகொண்டு கூட்டணிக்கு தலைமை தாங்குகிற கட்சியை பார்த்து நீங்கள் சவால் விட முடியாயது. பிரேமலதா, கிருஷ்ணசாமி போன்று எந்த அணியிலும் இல்லாமல் அதிக இடங்கள் ஆட்சியில் பங்கு தருபவர்களுடன்தான் கூட்டணி என்று சொல்லலாம். ஆனால், திமுக கூட்டணியில் தொடர்வதாக சொல்லிவிட்டு, வெளியில் போய் பேசுவதை தான் சில்மிஷம் என்று சொல்கிறோம்.

உங்கள் அணியில் இல்லாத, உங்கள் அணியை வீழ்த்துவதற்கு அறைகூவல் விடுத்துக்கொண்டிருக்கிற விஜய்-க்கு தேர்தல் ஆணையம் ஒரு சின்னம் ஒதுக்குகிறது. விசில் ஊதியாகிவிட்டது என்று பிரவீன்சக்கரவர்த்தி ட்விட் போடுகிறார் என்றால் அவர் யார்? காங்கிரசின் நம்பர் ஒன் துரோகி என்றுதான் சொல்வேன். அதனால்தான் முதலமைச்சரின் கோபத்திற்கு ஆளானதாக கேள்விப்பட்டேன். இது நியாயமான கோபம். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், திமுக கூட்டணி உடைந்தது என்றுதான் செய்திகள் வரும்.
காங்கிரஸ் தவெக உடன் சென்று கூட்டணி அமைத்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தும். கணிசமான இஸ்லாமியர்களின் வாக்குகளும் போகும். அந்த தயக்கம் இருப்பதால் தான் திமுக வெளிப்படையாக சவால் விடாமல் அமைதியாக உள்ளது. இன்றைக்கு கிட்டத்தட்ட நான்கு முனை போட்டி உறுதியாகிவிட்டது. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு திமுகவுக்கு தான் இருக்கிறது. ஆனால் கூட்டணியில் இருப்பவர்கள் வெளியே போகலாம் என்று சொன்னால், இந்த வாய்ப்பு இருக்காது. அது வேறு இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.

திமுகவின் கோபமும், ஆக்ரோஷமும் கலந்த மௌனத்தை காங்கிரஸ் உணர்ந்து விட்டதாக நான் நினைக்கிறேன். சுயமரியாதை உள்ள, சொரணை உள் எந்த கட்சிக்கும் அந்த கோபம் வரும். இவ்வளவு தூரம் மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் பேசுகிறார். அதை ராகுல் வேடிக்கை பார்க்கிறார். ராகுலின் இமேஜ் கடந்த சில வாரங்களில் சுக்கு நூறாக உடைந்துவிட்டது. ராகுல்காந்தி டெல்லிக்கு அழைத்து பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூரை கண்டித்த பிறகும், இருவரும் தினந்தோறும் 2 ட்விட்களை போடுகிறார்கள். இதை கண்டிக்க ராகுலுக்கோ, வேறு யாருக்கோ துளியும் துணிவு கிடையாது.
அப்போது ராகுல்காந்தி தூண்டி விடுகிறாரோ என்கிற கேள்வி எழுகிறது. அதனால் தான் ராகுலின் இமேஜ் உடைந்துவிட்டது. கோயம்பத்தூரில் நடந்துகொண்ட விதத்திற்காக எப்படி ஒரேநாளில் மக்கள் மனதில் இடம்பிடித்தாரோ? அதே மக்கள் மனதில் ஒரு எரிச்சலை ஏற்படுத்திவிட்டார் ராகுல்காந்தி. அதை உணர்ந்து கொண்டதால்தான் வேணுகோபால் திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவிக்கும் நிலைப்பாட்டை எடுத்தார்.

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை அவர் செய்த தவறுகளுக்கான தண்டனையை தான் தற்போது அனுபவிக்கிறார் என்று நினைக்கிறேன். அந்த தவறை புரிந்துகொண்டு எந்த தியாகத்திற்கும் தயார் என்று சொன்னபோதும் எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடிப்பது நல்லது அல்ல. ஆனால் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்ததும் எடப்பாடி பழனிசாமி சிறிய நடுக்கத்திற்கு உள்ளாகி இருப்பார். தேமுதிக சென்றால் ஏற்பட்ட வாக்கு இழப்பை சரிசெய்ய, ஓபிஎஸ் குறித்து பரிசீலனை செய்வாரோ என்று தோன்றுகிறது. பாஜக அந்த முயற்சியை செய்துகொண்டிருக்கும் நிலையில், அவர்கள் குரல் ஓங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. சசிகலாவை பொறுத்தவரை என்ன நிலைப்பாடு எடுப்பார் என்று தெரியவில்லை. அவர் ஒருவேளை அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து 30 வேட்பாளர்களை நிறுத்தினால், பாதிக்கப்படப் போவது எடப்பாடி பழனிசாமிதான். அப்போது அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற அவருடைய நிலைப்பாட்டிலேயே முரண்படுகிறார்.
திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்துள்ள நிலையில், திமுக 175 இடங்களில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என்கிற முடிவில் இருந்து இறங்கி வந்தாக வேண்டி வரும். புதுக்கட்சிக்கு 7 முதல் 9 இடங்கள் கொடுக்க வேண்டி வரும். அந்த தொகுதிகளை மற்றவர்களிடம் இருந்து எடுக்க முடியாது. எனவே 170 இடங்கள் வரை இறங்கி வந்தாக வேண்டும். முதலில் கூட்டணி கட்சிகளோடு சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நின்றனர். தற்போது அந்த எண்ணிக்கை கணிசமாக குறையும்.


