spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகூட்டணி பேச்சுவார்த்தை... காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்காததால், திமுக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி கூறியுள்ளார்.

we-r-hiring

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் மோதல் போக்கின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டிருக்கும் காணொலி பதிவில் கூறியிருப்பதாவது :- காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று தமிழகம் வந்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு முதலமைச்சருடன் அவர் சந்திப்பதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் முதலமைச்சரிடம் நேரம் கேட்டார். ஆனால் நேரம் ஒதுக்கவில்லை. அதற்கு காரணம் திமுகவின் தயவில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சில எம்.பிக்கள் அந்த பதவியே வேண்டாம் என்று சொல்கிறபோது, அவர்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவோ, ராகுல்காந்தியோ கண்டிக்கவில்லை. மேலும் முதலமைச்சர் போன்ற பெரிய பதவியில் இருக்கும் நபரை காங்கிரஸ் தலைவரோ, அல்லது ராகுல்காந்தி போன்ற பெரிய தலைவர்கள் சந்திப்பதுதான் வழக்கம். ஆனால் கட்சி நிர்வாகியான கே.சி.வேணுகோபாலை சந்திப்பதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை. திமுக தரப்பில் கூட்டணியை விட்டு வெளியே போய்விடுங்கள் என்று நேரடியாகவே சொல்லப்பட்டு விட்டது. வெளியே சென்று நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி விட்டனர்.

அதிக இடங்களை கேட்பதோ, ஆட்சியில் பங்கு கேட்பதோ தவறு என்று திமுக கருதவில்லை. ஆனால் தவெக உடன் கூட்டணி செல்வோம் என்று மிரட்டிக்கொண்டு கூட்டணியை உடைக்கும் வேலையை பார்க்கிற நபர்கள் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்றுதான் திமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மாநில தலைவர்  செல்வப்பெருந்தகையிடம் எந்த பதிலும் இல்லை. ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? எனவே பேச்சுவார்த்தைக்கு யாரும் வர வேண்டாம் என்று திமுக தலைமை கூறிவிட்டது. முன்னதாக திமுக தரப்பில் காங்கிரசிடம் பேச்சுவார்த்தைக்கு கனிமொழி எம்.பியை அனுப்பி வைத்தனர். அவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசிவிட்டு வந்தார். அதற்குள் என்ன நடந்தது என்று இனிமேல்தான் தெரியும். அதற்குள் லேசான உரசல் உள்ளது. அதைதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

2026 தேர்தல்! ஆட்சி அமைக்கப் போவது யார்?

காங்கிரஸ் தரப்பில்  ஆட்சியில் பங்கு பெறுவதற்கு மூன்று விதமான திட்டங்களை வைத்துள்ளனர். முதலாவது 25 தொகுதிகள் மட்டுமே காங்கிரசுக்கு வழங்குவது. ஆனால் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும். இரண்டாவது திட்டத்தின் படி, திமுக தான் போட்டியிடும் இடங்களை குறைத்துக்கொண்டு, 40 முதல் 45 இடங்கள் வரை காங்கிரசுக்கு தர வேண்டும். அதன் காரணமாக திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால், அப்போது காங்கிரஸ் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்திட வேண்டும் என்பதாகும். மூன்றாவது திட்டம் என்பது, உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரசுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை தர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த திட்டங்களை எல்லாம் காங்கிரஸ் மேலிடம் தரவில்லை. மாறாக மாணிக்கம் தாகூர் கொடுக்கிறார். மாநிலத் தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்படும் மணிக்கம் தாகூரை தேசிய தலைமை கட்டுப்படுத்தாதபோது, அவர்களிடம் ஏன் பேச வேண்டும் என்று முதலமைச்சர் சந்திப்பை தவிர்த்து இருக்கிறார்.

திமுக தலைமை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறி செல்லட்டும். அவர்கள் கூட்டணிக்கு தேவையே இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டது. அது தொடர்பான தகவல்களையும் ஊடகங்களில் கசிய விடப்பட்டது. அதேவேளையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசி சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் ராகுல்காந்தி இதுவரை வாய் திறக்கவில்லை. ராகுல்காந்தியின் எண்ணம் என்பது கட்சியில் பல்வேறு எண்ணங்களுடன் செயல்படுபவர்களையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது. இதில் யாருடைய வியூகம் வெல்கிறதோ அதை ஏற்றுக்கொள்வது என்பது தான். ஒருவேளை தவெக ஆதரவாளர்களின் கைகள் ஓங்குகிற பட்சத்தில் திமுக ஆதரவாளர்களை விட்டிவிடுவது. இது மத்திய காங்கிரஸ் செய்கிற அரசியலாகும். தற்போது காங்கிரஸ் வேண்டாம் என்கிற முடிவுக்கு திமுகவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் செல்வதால் 5 சதவீதம் வாக்குகள் சரியும். ஆனால் அவர்கள் கூட்டணிக்குள் இருந்துகொண்டே பிரச்சினை செய்தால் பல மடங்கு வாக்குகள் போய்விடும். இந்த விவகாரம் ராகுல்காந்தி வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் முடிவுக்கு வரும். இல்லாவிட்டால் அது முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ