2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய ஸ்பாய்லராக இருப்பார் என்றும், அதானல் திமுக வெற்றி பெறுவதற்கான வாக்கு வித்தியாசம் குறையும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளது:- திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், கொள்கை ரீதியாக தாக்கம் ஏற்படுத்துமா? என்கிற கேள்வி எழுகிறது. திமுக, தேமுதிக இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துள்ளனர். அதேநேரம், தேமுதிக கூட்டணிக்குள் வரும் என்கிறபோது திமுக, காங்கிரஸ் கட்சியை கலந்தாசித்தது. பாமக கூட்டணிக்குள் வரும் என்கிற நிலை ஏற்பட்டபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கலந்தாலோசித்தது. அப்போது ராமதாஸ் உள்ளே வந்தால் நாங்கள் இருக்க மாட்டோம் என்று சொல்லி விட்டனர். விஜய் கூட்டணிக்கு ராமதாஸ் செல்கிற போதும், அவருக்கு தலித் வாக்குகள் வராது என்று தவெகவினர் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தி அணி, விஜய் அணி என்று இரண்டாக பிரிந்துவிட்டது. ராகுல் மற்ற மாநிலங்களில் பரிசோதனை செய்தது போன்று தமிழ்நாட்டில் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். பீகாரில் வெற்றி பெற வேண்டிய தேஜஸ்வி யாதவை பரிசோதனை செய்கிறேன் என்று தோற்கடித்துவிட்டார்.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணிக்கு போனார்கள். தற்போது அந்த கூட்டணியில் இருந்தும் விலகி தனியாக நிற்கிறார்கள். அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கிட்டக்கூட சேர்க்க மாட்டார். ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று முதன்முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின். தற்போது இங்கும் வந்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளையனையே விரட்டியவர்கள், நாங்கள் கொள்ளையனை விரட்ட மாட்டோமா? என்று கூறுகிறார்கள். அங்கே பிளாக் டிக்கெட் விற்று, கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். முதலில் அந்த கொள்ளையனை விரட்டச் சொல்லுங்கள். பிறகு இவர்களை விரட்டலாம். இன்றைக்கும் காங்கிரஸ் – திமுக உறவு சிக்கலில் தான் இருக்கிறது. நீங்கள் வந்தால் வாங்க. இல்லாவிட்டால் போங்க என்கிற மனநிலையில் திமுக உள்ளது. இத்தகைய சூழலில் மாணிக்கம் தாகூருக்கு, எதிராக தேமுதிக போட்டியிட்டதால் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சிலரிடம் கேட்டிருப்பார்கள். என்னை பொருத்தவரை ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வருவது இன்னும் உறுதியாகவில்லை. அவருடைய நோக்கம் என்பது எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும். அதிமுகவுக்குள் இணைய வேண்டும் என்பதுதான். ஒருவேளை இது நடக்காவிட்டால் ஓபிஎஸ், சசிகலா இணைந்து அதிமுகவை 40 தொகுதிகளில் தோற்கடித்து விடுவார்கள். அதுதான் அவர்களுடைய திட்டமாகும்.

எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு, பிரேமலதாவிடம் பேரம் பேசி, அவர்கள் கேட்கக்கூடிய தொகையை உயர்த்தி, அந்த விலையை திமுகவை கொடுக்க வைத்துவிட்டார் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியால் அந்த பேரத்தை கொடுக்க முடியும். ஆனால் ஏன் கொடுக்க வேண்டும்? என்று நினைத்தார். ஜக்கி வாசுதேவ் அழைத்து பேசியபோதும் எஸ்.பி.வேலுமணி பணம் கொடுப்பதற்கு தயாராக இல்லை. ஓபிஎஸ்க்கும், பாஷ்யம் பில்டர்ஸ் அபினேஷ்க்கும் இடையே ரூ.1000 கோடி பிரச்சினை இருந்தது. அமைச்சர் சேகர்பாபு தான் அந்த பிரச்சினையை முடித்துக்கொடுத்தார். திமுக தரப்பில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருகிறார்கள். இந்த முறை திமுக கூட்டணிக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதனால் திமுக தன்னுடைய தொகுதிகளை குறைத்துக்கொள்ளும். கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள தேமுதிக, கமல்ஹாசன் கட்சிக்கு திமுக தான் தன்னுடைய தொகுதிகளை விட்டுத்தரும். காங்கிரசை பொருத்தமட்டில் 28 தொகுதிகளை வழங்க வாய்ப்பு உள்ளது.

விஜய் காரணமாக திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டுத்தர வில்லை. விஜயை பொருத்தவரை, திமுக வெற்றி பெறுவதற்கான வாக்கு சதவீதத்தை குறைத்துள்ளது. அவ்வளவு தான். இதற்கு முன்பு இந்த வேலையை சீமான் செய்து கொண்டிருந்தார். மக்களவை தேர்தலில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் தான் அதிமுக முன்னிலைப் பெற்றது. மற்ற இடங்களில் திமுக தான் முன்னிலை பெற்றது. வாக்குகள் பிரிந்துதான் திமுக வெற்றி பெற்றது. தற்போது பாஜகவும், அதிமுகவும் இணைந்துள்ளதால் அது ஒரு வாக்குகளை பிரிக்கும். சசிகலா, 40 தொகுதிகளில் அதிமுக வாக்குகளில் பிளவை ஏற்படுத்துவார். முக்குலத்தோர் சமுதாய வாக்குகளில் ஒரு பிளவை சசிகலா ஏற்படுத்துவார். அதனை தினகரனை இணைத்ததால் சரிகட்ட முடியாது. கடந்த முறை 40 தொகுதிகளில் அமமுக, அதிமுகவை தோற்கடித்தது. அதற்கு காரணம் பின்னால் இருந்த சசிகலாவும், தினகரனும்தான். ஒருவரை மட்டும் உங்கள் அணியில் சேர்த்துவிட்டால், வாக்குகளை பெற்றுவிட முடியாது. இதேபோல், விஜயும் ஒரு ஸ்பாய்லர்தான்.

கரூர் விவகாரத்தில் விஜயிடம் நடத்திய விசாரணை அறிக்கையை சிபிஐ இன்னும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அப்போது விஜய்க்கும், பாஜகவுக்கு என்ன அன்டர்ஸ்டாண்டிங் உள்ளது. அருண்ராஜ், பாஜக எங்களுக்கு அழுத்தம் கொடுத்தது என்று சொல்கிறார். ஆனால் சிபிஐ ஏன்? விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. காரணம் விஜய்க்கும் பாஜகவுக்கும் அன்டர்ஸ்டாண்டிங் உள்ளது. தேர்தல் முடிவுகளை பொருத்து அவர்கள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார்கள். இன்று வரை விஜய், பாஜகவை எதிர்த்து பேசியுள்ளாரா? நாம் ஏற்கனவே சொன்னது போல பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தான் விஜய் போட்டியிட போகிறார். கிறிஸ்தவ வாக்குகள் அதிகம் உள்ளதால், அங்கு போட்டியிடுகிறார். அடுத்து வேலூரில் தவெக கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் உயிர்பலி ஏற்பட்டால், தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


