தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெல்லும் என்று இந்தியா டுடே – சீ ஓட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.


இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- இந்தியா டுடே – சி ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 48 சதவீத வாக்குகளையும், அதிமுக – பாஜக கூட்டணி 37 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டிருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலின்போது என்டிஏ கூட்டணி 41 சதவீதம், இந்தியா கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. மோடி பிரதமராக பொறுப்பேற்ற அடுத்த 8 மாதங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் என்டிஏ கூட்டணியின் வாக்கு சதவீதம் 41லிருந்து 21ஆக குறைந்தது. அதற்கு மாறாக திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 47-லிருந்து 52 ஆக அதிகரித்தது. மோடி ஆட்சிக்கு வந்து 8 மாத காலத்தில் அவருடைய ஆட்சி மீதான அதிருப்தி பல மடங்கு அதிகரித்தது. அந்த கால கட்டத்திற்கு பிறகு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தார். அவர் அரசியல் ரீதியாக திமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்தநிலையில் கடைசியாக ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் என்டிஏ கூட்டணிக்கு 37 சதவீத வாக்குகள் கிடக்கும் என கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு 48 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் மூலம் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை தான் காட்டுகிறது.

பாஜக, அதிமுக உடனான கூட்டணியை புதுப்பித்துக் கொண்டபோதும், கருத்துக்கணிப்புகளில் அந்த கூட்டணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு காரணம் இரு கட்சிகளும் கீழ்மட்டத்தில் இன்னும் ஜெல் ஆகவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக அங்கீகரிக்க பாஜக மறுப்பது. அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க பாஜகவின் தேசிய தலைமை தயக்கம் காட்டுவது போன்றவை அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அவர்கள் சொல்வது அதிமுக – பாஜக கூட்டணியில் இணக்கம் இல்லாததையே காட்டுகிறது. இதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதை தான் இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன. வாக்கு திருட்டு புகார், பதவி பறிப்பு மசோதா, என பிரதமர் மோடி, பாஜக மீதான அதிருப்தி தமிழ்நாட்டில் இன்றும் எதிரொலிக்கிறது. திமுக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிற நிலையில் அரசுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இருக்கும். அப்படி இருந்தும் பாஜக – அதிமுக கூட்டணியால் அதிக வாக்கு சதவீதத்தை பெற முடியாததற்கு காரணம் தேசிய அளவில் பாஜக அரசின் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அதிருப்தி ஆகும்.

அதேவேளையில் தேசிய அளவிலான மக்களின் மனநிலை என்பது என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளதாக இந்தியா டுடே – சீஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 300 இடங்களுக்கு மேலாக என்டிஏ கூட்டணி வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் சொல்லி உள்ளனர். ஆனால் பாஜகவுக்கு குறைவான இடங்கே உள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்த்து பார்க்கும்போது 300 இடங்களுக்கு மேலாக வருகிறது. முன்பு 275 இடங்கள் வென்றிருந்தநிலையில், தற்போது 300 பிளஸ் இடங்கள் என்பது, சற்றே கூடுதல் இடங்கள்தான். ஆனால் பெரிய அளவில் பாஜவுக்கு செல்வாக்கு வளரவில்லை. வாக்காளர் பட்டியல் மோசடி, தேர்தல் ஆணைய விவகாரம் போன்றவை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது இந்த கருத்துக் கணிப்பில் வெளியாகவில்லை. அதற்கு காரணம் கணக்கெடுப்பு நடத்தப் பட்ட காலத்திற்கு பிறகு இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. எப்படி இருப்பினும் பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் முடிவுற்றபோதும் வடஇந்தியாவில் மோடியின் செல்வாக்கு பெரிய அளவில் வளர்ந்துவிடவில்லை.

மோடியை, பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களான நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் கட்டுப்படுத்துவதாக சொல்கிறார்கள். ஆனால் முக்கியமான விஷயங்களில் அவர்கள் வாய் மூடி மௌனமாகவே இருக்கின்றனர். நிதிஷ்குமார், ஒரு காலத்தில் சோசலிச பாதை, மக்கள் புரட்சி என்றெல்லாம் பேசி வந்தவர். ஆனால் தற்போது அரசியல் லாபத்திற்காக மாறி மாறி கூட்டணி வைக்கக்கூடிய நபராகவே பார்க்கப்படுகிறார். அவருக்கு அதிகாரம் தேவை. அதற்காக பாஜக கூட்டணியில் தொடர்கிறார். சந்திரபாபு நாயுடு, கடந்த 30 ஆண்டுகளாகவே அவருக்கு பாஜக உடன் கூட்டணி வைப்பதில் எந்த தயக்கும் கிடையாது. அவருக்கு சிறுபான்மையினருக்கு வாக்கு கணிசமாக இருந்தாலும், பாஜகவின் மதவாத போக்கிற்கு எதிராக கடுமையாக எதிர்வினை ஆற்றியது இல்லை. வக்பு விவகாரத்தில் மட்டுமே அவர் பின்வாங்கினார். முந்தைய ஜெகன் அரசில் போடப்பட்ட வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்கிற நிர்பந்தம் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


