spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து

ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து

-

- Advertisement -
kadalkanni

என்.கே.மூர்த்தி

வரலாறு எப்போதும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, ஆட்சி அதிகாரத்திற்கு அடிப்பணிந்து செல்வது, அதிகாரத்திற்கு பணிந்து அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. மற்றொன்று அதிகாரத்திற்கு அடிப்பணியாமல் உரிமைகளுக்காக தொடர்ந்து துணிந்து போராடுவது. ஆட்சி அதிகாரத்தின் அடக்கு முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து நிற்பது. இந்த இரண்டு பிரிவினர் வரலாறு முழுவதும் காணப்படுவார்கள்.

தமிழர்களின் நலன்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தொடங்கப்பட்ட இயக்கம் தான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும். அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தப் பின்னர் தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்க்கை தரம் என்று தமிழகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருமொழி கொள்கையினால் தமிழர்கள் உலக அளவில் சாதித்து வருகிறோம். சீர்திருத்த திருமணம், கலப்புத் திருமணம், காதல் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியதால் சமூகத்தில் சாதி பாகுபாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி இந்தியாவில் தமிழர்களின் அடையாளங்களை பாதுகாத்து வருகிறோம். இது திமுக செய்த சாதனை. மேலும் சமூக பண்பாட்டு தளங்களிலும், கலாச்சாரத்திலும் மாறுதல் அடைந்துள்ளோம்.

இந்த மாற்றத்தை, இந்த வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத மத்தியில் ஆண்டுவந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், தற்போது ஆண்டுக்கொண்டிருக்கும் பாஜகவும் தொடர்ந்து தமிழர்களின் கல்வியையும், உரிமைகளையும் பறிப்பதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம் என்று மாநிலங்களின் ஒட்டு மொத்த அதிகாரங்களையும் ஒன்றிய அரசு வைத்துக்கொண்டு மாநில அரசுகளை செயல்படாமல் முடக்கி வருகிறது.

இந்தியாவிலேயே மாநில உரிமைகளுக்காகவும், மாநில சுயாட்சியை கேட்டும் போராடி வரும் கட்சி திமுக மட்டும் தான். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அதுபோன்ற எவ்வித சிந்தனையும் இல்லை. இந்தியாவில் பாஜகவும் – திமுகவும் நேரடியாக கொள்கை முரண்பாடு உள்ள கட்சிகள். ஆனால் திமுகவை வீழ்த்தும் அளவிற்கு தமிழகத்தில் பாஜகவிற்கு போதிய பலம் இல்லை. அதனால் குறுக்கு வழியில் பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

2026ல் திமுகவை வீழ்த்த பாஜக பயன்படுத்தும் முதல் ஆயுதம் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை. அந்த துறைகள் மூலமாக திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சோதனை செய்வது, அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து வழக்கு பதிவு செய்வது, இறுதியில் கைது செய்து தேர்தல் முடியும் வரை சிறையில் வைத்திருப்பது. அதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் சிறிய கலகத்தையும் மக்கள் மத்தியில் அதிர்ப்தியையும் ஏற்படுத்தும். இது தேர்தல் காலத்தில் பாஜக பயன்படுத்தும் ஜனநாயக விரோத செயல்முறைகள். இப்போது அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இருந்து தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு மக்கள் நலனை விட அதிகாரத்தில் உள்ள பாஜகவை பகைத்துக் கொள்ளாமல் அதிகாரத்துடன் சமரசம் செய்து கொள்வது என்ற கொள்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மக்கள் நலன், மாநில உரிமையை விட திமுகவை எதிர்ப்பது, திமுகவை வீழ்த்துவது என்கிற ஒற்றை புள்ளியில் நிற்கிறார்கள். அதனால் பாஜக சொல்லும் ஆலோசனையை கேட்டு செயல்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் திட்டமிட்டு நடந்த விவகாரம் அல்ல. அது ஏதேச்சையாக நடந்து விட்ட ஒரு விபத்து. அதற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? அப்படியே குற்றம்சாட்ட வேண்டும் என்றாலும் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கின்ற ஆளுநரை நோக்கி தான் போராட வேண்டும். ஆளுநர் தான் துணை வேந்தரை நியமனம் செய்ய விடாமல் தொடர்ந்து மாநில அரசுக்கு இடையூறு செய்து வருகிறார். அதனால்தான் பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது எதிர் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால் திட்டமிட்டு திமுக அரசு மீது பழியை போடுகிறார்கள்.

அதிமுக நிலைபாடு

தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இரட்டை இலை சின்னம் பிரச்சினை, பிரிந்திருக்கும் அணிகள், கொடநாடு கொலை வழக்கு என்று அந்த கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கும் ஏராளமான சிக்கல்கள் இருக்கிறது. அந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றால் பாஜகவுடன் இணைந்து பயணம் செய்தே ஆகவேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வர வேண்டும். அந்த ஒற்றை கோரிக்கையை ஏற்றுக் கொண்டு யார் வந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் அதிமுக இருக்கிறது. அதற்கு இடையூறாக அண்ணாமலை இருப்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் விரைவில் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் கொள்கைக்கும் பாஜகவின் கொள்கைக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. பாஜக பேசுவது இந்திய தேசியம், நாம் தமிழர் பேசுவது தமிழ் தேசியம். அவர்கள் பேசுவது இந்தியா இந்து, இவர்கள் தமிழ் இந்து. அவர்கள் பேசுவதும் வெறுப்பு அரசியல் தான், இவர்கள் பேசுவதும் வெறுப்பு அரசியல் தான். இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. பாஜக வின் கொள்கை திட்டத்தில் ஒன்றான திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும்.

திமுகவிற்கு எதிராகவும், திமுகவின் அடிப்படை கொள்கை பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதை சீமான் சிறப்பாக செய்கிறார். அதற்கு பரிசாக சீமான் மீது பாலியல் வழக்கு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமரியாதை செய்த வழக்கு என்று எவ்வளவு வழக்கு போட்டாலும் அவரை கைது செய்ய விடாமல் மோடி அரசு பாதுகாத்து வருகிறது. நாம் தமிழர் கட்சிக்கும், அந்த கட்சியின் தலைவர் சீமானுக்கும் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பது இலக்கு அல்ல என்பதை அவர்களின் செயல்பாட்டில் இருந்து புரிந்துக் கொள்ளலாம். மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும். அவ்வளவு தான் அவர்களின் கொள்கை.

பாமக நிலைபாடு

பாமக தொடங்கப்பட்ட காலத்தில் தமிழ் மொழி, இன உணர்வு, மாநில உரிமை, இட ஒதுக்கீடு என்று பேசி, அதற்காக பல போராட்டங்களை கட்டமைத்த கட்சி. தற்போது வன்னியர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கேட்கின்ற கட்சியாக சுருங்கி விட்டது. தற்போது டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே பெரும் யுத்தம் நடந்து வருகிறது.

டாக்டர் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு பாஜக நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம் என்பது அன்புமணிக்கு தெரியும். அதனால் அதிகார மையத்துடன் சமரசம் செய்து கொண்டு பாஜக கூட்டணியில் நீடிக்கலாம் என்பது டாக்டர் அன்புமணியின் நிலைபாடு.

டாக்டர் ராம்தாஸ் மூத்த அரசியல்வாதி, அவர் வேறு மாதிரியாக சிந்திக்க கூடியவர். மற்ற மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து காணாமல் போன கட்சிகள் நிறைய இருக்கிறது. அந்த பட்டியலில் பாமகவும் வந்து விடக்கூடாது என்று சிந்திக்கிறார். பயப்படுகிறார். அதனால் தான் இது நான் தொடங்கிய கட்சி, நான் சொல்வதை கேட்டு இருந்தால் இருக்கலாம், விருப்பம் இல்லை என்றால் வெளியே போகலாம் என்று துணிந்து சொந்த மகனையே மிரட்டி சொல்கிறார் என்றால் அதன் வீரியத்தை உணர்ந்து பேசியிருக்கிறார். ஆனால் அன்புமணி அப்பாவின் பேச்சை கேட்பவராக தெரியவில்லை. பனையூர் அலுவலகத்தில் பாமக நிர்வாகிகளை சந்தித்து, கட்சியை தன் கட்டுப் பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார். பாஜக கூட்டணியில் உறுதியாக நீடிப்பார்.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய வரவு தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்ற எந்த கட்சியும் சரியில்லை. இவர்கள் எல்லோரும் ஊழல்வாதிகள் என்று கூறி இவர்களுக்கு மாற்றாக தொடங்கப்பட்டது தான் தவெக. அந்த கட்சி நடத்திய முதல் மாநாட்டில் ஆளுநர் பதவி தேவையற்றது என்று விமர்சனம் செய்தனர். பாஜக கொள்கை எதிரி என்றனர். ஆனால் கடந்த வாரம் தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்திருப்பது, அந்த கட்சியின் எதிர் காலப் பயணத்தை தெளிவு படுத்தி இருக்கிறது.

திமுகவிற்கு எதிராக இயங்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஒன்று ஆளுநரை சந்திக்கிறார்கள் அல்லது நடிகர் ரஜினியை சந்திக்கிறார்கள். எதிர்கட்சிகளின் பேச்சு, முழக்கங்கள், செயல்பாடுகளின் அடிப்படையில் தான் இவர்கள் அனைவரும் பாஜக நிழலில் ஒதுங்குகிறார்கள் என்று முடிவிற்கு வருகிறோம்.

MUST READ