இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது போல, பாஜக – தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கு எதிரான போராட்டம் பீகாரில் இருந்தே தொடங்கும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல்காந்தி முன்னெடுத்துள்ள போராட்டம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சம் கள்ளஓட்டுகள் பதிவாகியுள்ளது என்றால்? இந்த நாட்டில் தேர்தல் நடத்தி என்ன பயன் உள்ளது. உங்களுடைய வாக்குரிமைக்கு என்ன மரியாதை உள்ளது? ஜனநாயகத்தை மீட்பதற்கான ஒரு வழி தறபோது ஏற்பட்டிருக்கும் சாதக சூழல்தான். இதை வைத்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி, மின்னணு வாக்குப்பதிவு முறையை ஒழித்துக்கட்ட வேண்டும். இந்த தேர்தல் ஆணையம் போன்ற ஒரு மோசடி அமைப்பு, உலகிலேயே இருக்க முடியாது. இந்த நாட்டின் அதிகார வர்க்கத்திற்கு என்று ஒரு செயல்திட்டம் இருக்கிறது. அது ஆட்சிக்கு வருபவர்கள் மீது அந்த செயல்திட்டத்தை திணிக்கும். ஆட்சிக்கு வரும் ஒரு கட்சி மீண்டும் ஆட்சியை இழக்காமல் இருப்பதற்கான ஒரு கருவி மின்னணு வாக்குபதிவு இயந்திரமாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் அளித்த வாக்கு, குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான் செல்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
இப்படி ஒரு கருவியை ஐஐடியில் உள்ள பார்ப்பனர் உருவாக்கினார். முதல் தேர்தலிலேயே மோசடி அரங்கேறியது. 1999ல் மதுரையில் சுப்பிரமணிய சுவாமி போட்டியிட்டபோது பல வாக்குச்சாவடிகளில் அவருக்கு ஒரு வாக்குகூட இல்லை. இதனை எதிர்த்து அவர் தான் முதன் முதலில் வழக்கு தொடர்ந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி குறித்து பெரிய ஆய்வு செய்தவர் சுப்பிரமணிய சுவாமி. அவருக்கு பிறகு தான் ஐ.டி. பொறியாளர் ஹரிகே பிரசாத். பின்னர் வாக்கு மோசடி தொடர்பாக அத்வானி, உச்சநீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நாங்கள் 2019ஆம் ஆண்டில் வாக்குப்பதிவில் மோசடி நடைபெற்றது தொடர்பாக ஆதாரப்பூர்வமாக புத்தம் எழுதி வெளியிட்டோம். இந்திய மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமக்கான ஒரு அரசு இந்த நாட்டில் அமையவே அமையாது.
ராகுல்காந்தி, வாக்காளர் பட்டியலில் போலியாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார். ஆனால் அவர்களை எப்படி சேர்த்தார்கள் என்று அவர் குறிப்பிடவில்லை. நான் 2019ஆம் ஆண்டிலேயே போலியான வாக்காளர்களை சேர்க்கிற வசதி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருப்பதை எனது நூலில் குறிப்பிட்டுள்ளேன். இதை செய்தவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆட்கள். 2019 மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் 12 கோடியே 70 லட்சம் வாக்குகளை நீக்கியுள்ளனர். கன்னியாகுமரியில் 49 கிராமங்களை சேர்ந்த 52 ஆயிரம் வாக்குகள் காலியானது. அனைவரும் கிறிஸ்தவர்கள். மத்திய சென்னை, வடசென்னை தொகுதிகளில் இஸ்லாமியர்களின் வாக்குகள் நீக்கப்பட்டன. பெரிய அளவில் நடைபெறுகிற இந்த மோசடியில் நாமும் ஒரு அங்கமாக உள்ளோம். 10 பேரை நாம் கூட்டவே முடியாது. காரணம் இது முழுமையாக எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான விவகாரம். ராகுல்காந்தி, ஒரு சட்டப்பேரவை முழுமையாக 40 ஆட்களை நியமித்து ஆய்வுசெய்துவிட்டார். இதனை தேர்தல் ஆணையமும், பாஜகவும் எதிர்பார்க்க வில்லை. ஆய்வின் முடிவுகள் வெளியாகியபோது நாடே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
வாக்காளர் பட்டியலில் மோசடி நடைபெற்றது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் மத்தியில் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால் அதற்கு பதில் அளிக்காத தேர்தல் ஆணையம், ராகுலை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொல்கிறது. நீங்கள் ஏன் ராகுல்காந்தி மீது மோசடி வழக்கை பதிவு செய்யவில்லை? அப்படி வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் கேள்வி கேட்பார்கள். அதனால் தான் ராகுல்காந்தி அப்படி செய்கிறார்.. இப்படி செய்கிறார்… என்று பாஜகவினரை தூண்டிவிட்டு, அவதூறுகளை பரப்புகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல்காந்தி மோசடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம் வழக்கு தொடரவில்லை. ஒரே நபரின் வாக்கு கர்நாடகா, அலகாபாத், வாரணாசி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளது எப்படி? எப்படி அவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். இதை யார் செய்தது? வாக்காளர்களுக்கு ஏன் முகவரி இல்லை என்று கேட்கிறபோது, அவர்கள் பாலங்களுக்கு கீழே வசிப்பவர்கள் என்கிறார். சரி அவர்களுக்கு தந்தை பெயர்கூட இருக்காதா? ராகுல்காந்தி சுட்டிக்காட்டிய 40 ஆயிரம் பேர் யார்? அவர்களுக்கு தந்தை பெயர் ஏ,பி,சி,டி,யா? பாலத்திற்கு கீழ் உள்ளவர்கள் இந்த நாட்டில் வாக்களிக்க வேண்டும். ஆனால் பீகாரில் ஏழைகளிடம் ஆதாரத்தை கொண்டுவர சொன்னீர்கள். அவர்கள் எப்படி கொண்டு வருவார்கள்? இதிலேயே தேர்தல் ஆணையத்தின் இரட்டை நிலைப்பாடு தெரிகிறது.
வாக்காளர் பட்டியலில் நடைபெறும் மோசடிகள் தொடர்பாக அதிமுக, தெலுங்கு தேசம், பாஜக தரப்பிலும், பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்பதால், அதன் அதிகார வரம்புக்குள் தலையிட முடியாது என்று சொல்லிவிட்டது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்பதால் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். அவ்வப்போது சில மாறுதல்கள் ஏற்படுகிறது. ஆனால் அது ஒரு பக்கமாக போய்க்கொண்டிருக்கிறது. பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல்காந்தி யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். பீகாரில் இருந்துதான் எல்லா மாற்றங்களும் உருவாகும். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது மாற்றம் என்கிற புயல் பீகாரை மையம் கொண்டுதான் உருவாகியது. தற்போதும் பீகாரில் இருந்துதான் வரும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாருக்கு சென்று பேரணியில் பங்கேற்க உள்ளது சரியான முடிவாகும். முதலில் தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு முடிவுகட்டிவிட்டு, வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.