மருத்துவர் ராமதாஸ், தனது இரண்டாவது மனைவியுடன் இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இனி பாமகவில் அன்புமணியின் கைஓங்கும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

ராமதாசின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் வெளியாகி விவாதத்தை கிளப்பி இருக்கும் நிலையில், இது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் தனது இரண்டாவது மனைவி சுசிலா உடன் 50வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த மருத்துவர் ராமதாஸ், 2வது திருமணம் செய்தால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் சொல்வதில் தவறு இல்லை. ஆனால் இந்திய சட்டத்தில் அதற்கு இடமில்லை. பாமக, ராமதாசின் 2வது மனைவி சுசீலாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும் என்பதால்தான் அன்புமணி கட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார் என்று விளக்கம் அளிக்கின்றனர். ராமதாசின் 2வது திருமண புகைப்படம் வெளியாகும் முன்பாக நாம் ராமதாசை ஆதரித்துக் கொண்டிருந்தோம். இந்த விவகாரம் வெளியான பின்னர் நாம் அன்புமணியை தான் ஆதரிக்க வேண்டும்.
சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது. அதனால் அன்புமணியும் வெளியில் சொல்லவில்லை. ராமதாசும் பெரிய அளவில் அன்புமணியை பேசிவிடவில்லை. ஆனால் கட்சியின் தலைவர் நான்தான் என்று சொல்லிவந்தார். தற்போது தான் தெரிகிறது, ராமதாஸ் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை. சித்தி தலைவராகி விடக்கூடாது என்பதற்காகவே அவர் கட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார் என்று. கட்சியில் சுசீலாவின் நடவடிக்கைகள் அதிகரித்ததால்தான், ராமதாசுக்கு எதிராக அன்மணி போர்க்கொடி தூக்கியுள்ளார். ஆனால் ராமதாஸ் கட்சியை அவரிடம் தர மாட்டேன். உனக்கு பதிலாக உன் அக்காவிடம் கொடுத்து விடுகிறேன் என்கிறார். இது குடும்ப பிரச்சினையாகும். அன்புமணிக்கு கட்சி பறிபோய்விடும் என்கிற அச்சம் இருப்பது நியாயமானது தான்.
பாமக என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுடைய கட்சியாக இருக்கிற சூழலில், மாற்று சமூகத்தை சேர்ந்த சுசீலாவை ராமதாஸ் இரண்டாவது திருமணம் செய்திருப்பது அன்புமணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்துவிட்டு, காதல் திருமணங்களுக்கு எதிராக பேசினீர்களே என கேள்வி எழுந்துள்ளது. மாற்று சமுதாய பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கும் ராமதாஸ் எப்படி வன்னிய சமுதாய மக்களின் தலைவராக இருக்க முடியும்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சிறு வயதில் இருக்கும்போது சுசிலாவல் பிரச்சினை ஏற்படும் என்று அன்புமணிக்கு விவரம் தெரிந்திருக்காது. ஆனால் தற்போது கட்சி தன்னைவிட்டு போய்விடும் என்று விவரம் தெரிவதால் அவர் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பாமகவில் நிர்வாகிகளாக உள்ள ஜி.கே.மணி, அருள் போன்றவர்கள், சுசிலாவுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறார்கள். நிர்வாகிகளை அவர் கட்டுப் படுத்தினாரா என்கிற விவரம் யாருக்கும் தெரியாது. அப்படி இருந்தால் அந்த விவரங்கள் இனிதான் வெளியாகும். ராமதாஸ் செய்தது தவறு கிடையாது. 50 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். தற்போது திருமண நாளையும் கொண்டாடி உள்ளனர். இவை அனைத்தும் ராமதாசின் குடும்ப பிரச்சினை. ஆனால் ராமதாசின் இரண்டாவது திருமண விவகாரம் வெளியில் வந்துவிட்ட நிலையில், இனி பாமகவில் அன்புமணியின் கைகள் ஓங்க தொடங்கியுள்ளது. எப்படி இருந்தாலும் பாமகவின் வாக்குகள் இரண்டாக உடைவது உறுதி, இவ்வாறு அவர் தெரிவித்தார்.