விஜய் பொதுக்குழு பேச்சின் அடிப்படையில் அவர் இனி அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரித்துள்ளார்.


தவெக பொதுக்குழுவில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரது பேச்சு விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா என்ன பேச்சு பேசியுள்ளார்? அவர் ஏற்கனவே ஒரு ட்வீட் போட்டு பின்னர் அதை அழித்தது சர்ச்சையாகியது. இந்நிலையில் தவெக பொதுக்குழு கூட்டத்தின்போது, இதுதொடர்பான வழக்கில் அபிஷேக் சிங் வாதங்களை வைத்தார். அப்போது தெரியாமல் செய்துவிட்டோம், அல்லது தவறு என்பதால் நீக்கிவிட்டோம் என்கிற வாதத்தை மறைமுகமாக வைத்தார். அப்படி வாதங்களை வைத்துக் கொண்டிருக்கும் போதே எல்லை மீறி பேசுகிறார். மாற்றத்தை கொடுக்க வந்திருக்கிறோம் என்று சொல்கிற ஆதவ் அர்ஜுனா, இளைஞர்கள் முன்பு பேசுகிறபோது சுயக்கட்டுப் பாட்டோடு பேச வேண்டும். கூட்டத்தை பார்த்துவிட்டோம் என்பதற்காகவோ, பேசுகிற இடத்தில் நாம் மேடையில் நிற்கிறோம் என்பதற்காக வார்த்தைகளை எல்லை மீறி வீசக் கூடாது. அவருக்கு உள்நோக்கம் இருக்குமா? நிஜமாகவே அவர் ரவுடியாக மாறிவிடுவாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால் இதற்காகவா அவர் அரசியலுக்கு வந்தார்? இதை சொல்லித்தரவா இளைஞர்களை அழைத்து உட்கார வைத்திருக்கிறீர்கள்? வாக்கு வங்கியை வைத்திருக்கும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்பதால், அவரிடம் இந்த பொறுப்புணர்வை எதிர்பார்க்கிறோம்.

ஆதவ் அர்ஜுனாவின், 45 நிமிட பேச்சு என்பது திமுக மீதான விமர்சனம் என்பதை தாண்டி தனிப்பட்ட தாக்குதலாக அமைந்துவிட்டது. அவர் ஏற்கனவே, அரண்மனைக்குள் அரண்மனைவாசியாகவே இருந்தவர். ஒவ்வொருவர் குறித்த பிளஸ், மைனஸ் அவருக்கு தெரியும். இது தருமப்படி பார்த்தால் சரியா என்று கேள்வி எழும். அரசியல் ரீதியாக பார்த்தால் சரியான பதிலடி என்று தோன்றும். ஆனால் ஆதவ் அர்ஜுனாவுக்கு சுயக்கட்டுப்பாடு தேவை. காலம் ஒருநாள் போல் ஒருநாள் இருக்காது. அன்றைக்கு அரண்மனைக்குள் இருந்தீர்கள். இன்றைக்கு அந்த அரண்மனைக்குள் எது எங்கே இருக்கிறது என்று எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்கிறார். ஒருபுறம் இது சாகசம், துணிச்சல் போன்று தெரியலாம். மறுபுறம் அது வேறு வார்த்தைகளால் விமர்சிக்கப்படும். இவற்றை எல்லாம் மனதில் வைத்துதான் ஆதவ் செயல்பட வேண்டும். விஜயை நம்பி வந்துள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நல்ல பாதையை காட்ட வேண்டிய கடமை தவெக நிர்வாகி என்கிற அடிப்படையில் ஆதவ்க்கு உள்ளது.

அரசியலில் எதிரி யார் என்று தீர்மானம் செய்வது முதற்படி. அதை மிகவும் தெளிவாக விஜய் செய்திருக்கிறார். ஏற்கனவே மதுரை மாநாட்டிலேயே அதை எடுத்துவிட்டார். தவெக பொதுக்குழுவில் அதை இன்னும் கூர்மைப்படுத்தி இருக்கிறார். விஜய் திமுகவா? தவெகவா? என்று கேள்வி எழுப்புவதன் மூலம் பிரதான இடத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்கிற நம்பிக்கையை கட்சியினருக்கு கடத்துவது தான். அதை விஜய் தொடர்ந்து செய்கிறார். அப்படி ஒரு நிலைமை வரவிடாமல் பார்த்துக்கொள்வது எடப்பாடியின் கடமையாகும். கூட்டணிக்கு பெரிய கட்சி வரப்போகிறது என்று இன்னும் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருக்க கூடாது. எதார்த்தத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும். வாக்கு வங்கியை தக்க வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு அழைக்க பவன் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் முயற்சிகள் நடைபெற்றிருக்கும். விஜயும் அனைத்து கணக்குகளையும் போட்டிருப்பார். தற்போதும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் பொதுக்குழுவில் ஒரு தலைவராக விஜய் பேசுகிறார் என்றால்? அந்த வார்த்தையை மதிக்க வேண்டும். எனவே அவர் இனி அதிமுக கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

திமுகவுக்கு பிரதான எதிரி எடப்பாடி பழனிசாமிதான். விஜய் ஒரு அச்சுறுத்தலாக வந்து நிற்கிறார். அவர் யாரை காலி செய்யப் போகிறார் என்று தான் எல்லா முகாம்களிலும் பதற்றம் கூடிக் கொண்டிருக்கிறது. 8 சதவீதம் வாக்குகளை பெற்று கட்சிக்கு அங்கீகாரம் வாங்கியுள்ள சீமான் அதை தக்க வைக்க வேண்டும். அதே போல், எடப்பாடி பழனிசாமிக்கும் தங்களுடைய வாக்குகளை தக்கவைக்க வேண்டும். என்னை பொருத்தவரை கரூர் சம்பவத்திற்கான சட்ட நடவடிக்கை என்பது சம்பிரதாயமாக தான் முடியும். அதில் கண்டிபிடிக்க எதுவும் இல்லை. அதற்கு பொறுப்பு என்று 4 பேர் மீது நடவடிக்கையும் எடுக்க முடியாது. நடந்தது ஒரு விபத்து விஜய் தரப்பிலே நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. சதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அதில் இருந்து கடந்து வந்துவிட வேண்டும். விஜய் பொதுக்குழுவின் முக்கியமான செய்தி என்பது விஜயை முதலமைச்சர் வேட்பாளராக வைத்து நாங்கள் ஒரு அணியை அமைப்போம் என்பதுதான். மற்றொன்று தங்களுக்கு இத்தனை நாட்களாக கூட்டணிக்கு தூதுவிட்டவர்களுக்கு, நாங்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று சொல்லியுள்ளனர்.


