இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் – நடைமுறைகள் என்ற வழிகாட்டு நூலின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற எதிர்கட்சி தலைவர் நிழல் பிரதமராக செயல்படுவார். எனவே எதிர்கட்சி தலைவருக்கு கூடுதல் பொறுப்பும் கடமையும் இருக்கிறது.
கடந்த 2014 முதல் 2024 வரை பத்தாண்டுகள் நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற எதிர்கட்சி தலைவர் என்று யாரும் இல்லை. 2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து 99 தொகுதிகளிலும் கூட்டணியுடன் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி அமர்ந்துள்ளார்.
நேரு குடும்பத்தில் 1989-90 வரை ராஜீவ்காந்தியும், 1999 முதல் 2004 வரை சோனியாகாந்தியும் எதிர்கட்சி தலைவராக இருந்தார்கள். அதன் பின்னர் அந்த குடும்பத்தில் இருந்து ராகுல்காந்தி மூன்றாவது எதிர்கட்சி தலைவர்.
எதிர்கட்சி தலைவருக்கு என்று சில அதிகாரங்களும், பொறுப்புகளும் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமரும் வரிசையில் முதல் வரிசை இருக்கை ஒதுக்கப்படும். அவருக்கென்று தனி அறையும், அதன் செயலகமும் கேபினெட் அமைச்சருக்கு இணையானதாக இருக்கும். அதேபோன்று தேர்தல் ஆணையர் நியமனம், அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு இயக்குநர், ஊழல் தடுப்பு ஆணையர் நியமனம் என்று எதிர்கட்சி தலைவர் ஒப்புதல் இல்லாமல் நியமனம் செய்ய முடியாது. பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாததால் முக்கிய பதவிகளுக்கான தேர்வுகளில், நியமனங்களில் மற்றும் இதர நடைமுறைகளில் ராகுல்காந்திக்கு முக்கிய பங்கு இருக்கும். ஆளும்கட்சியின் அத்துமீறல்களை அவரால் கட்டுப்படுத்த முடியும்.
அதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை கூடிய மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி நிகழ்த்திய முதல் உரையை கேட்டு பாஜக தலைவர்கள் அதிர்ந்து போனார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் வரை ராகுல்காந்தி பேசிய முதல் உரையில், நாட்டின் ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாஜக பிரதிநிதி அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்முறைகளை தூண்டும் பேச்சுகளை பேசமாட்டார்கள். குறிப்பாக இந்துக்கள் பொய்களை விரும்பமாட்டார்கள் என்று ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். இந்து – முஸ்லீம் பிரிவினையை பேசி இதுவரை வாக்குகளை அறுவடை செய்து வந்த பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய ராகுல் காந்தியின் பேச்சு பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இடைமறித்து ராகுலுக்கு பதில் கொடுத்ததால் விவாதம் அனல் பறந்தது.
ராகுல் காந்தியின் உரையில் நேர்த்தியும், நிதானமும் தெரிந்தது. ஆளும் கட்சியினர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கும் விதத்தில் இருந்தது.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற விதியை பின்பற்றும் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஆளும் கட்சி சார்பில் பிரதமர், அமைச்சர்களை நியமனம் செய்வதைப் போன்று எதிர்கட்சி தலைவரும் நிழல் அமைச்சரவையை நியமனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருக்கும் முக்கிய பொறுப்புகளை ஒதுக்கி அந்தந்த துறைகளில் என்ன நடைபெறுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். துறை ரீதியாக ஊழல், அத்துமீறல் நடந்தால் அதை மக்களிடத்திலும், நாடாளுமன்றத்திலும் அம்பலப்படுத்தலாம். நிழல் நிதிநிலை அறிக்கை, திட்டங்களுக்கு மாற்றுத் திட்டம் என்று கூடுதல் கவனத்துடன் எதிர்கட்சி தலைவர் செயல்பட வேண்டும்.