மசோதாக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளதன் நோக்கம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு பரிசீலனைக்கு உட்படுத்துவதே என்று ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பியுள்ளது குறித்து ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். இப்படி கேள்வி எழுப்புவது பல முறை நடைபெற்றுள்ளது. இதற்கு பின்னணியில் அரசியல் உள்ளதா? என்றால் ஆம் உள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக் கெடு நிர்ணயம் செய்துள்ளது. இந்த கேள்வியை, மேல்முறையீடு என்று சொல்ல முடியாது. இந்த விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறார்கள். குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்வியை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். அதுதான் அவர்களது நோக்கமும் ஆகும்.
161வது சட்டப் பிரிவு ஆளுநர், ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கிற அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடலாமா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அது ஏற்கனவே முடிந்து விட்டதாக கருதுகிறேன். ஆனால் இந்த விஷயத்திற்கு அவர்களுடைய அதிகாரம் பொருந்தாது. பேரறிவாளன் வழக்கு போன்ற வழக்குகளில் ஜனாதிபதிக்கு உத்தரவு போடலாம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்புகள் பல சொல்லி இருக்கிறது. சட்டப்பிரிவு 361ன் கீழ் ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்பது பொதுவான நீதியாகும். அது எல்லாவற்றுக்கும் பொருந்தாது என்று பல தீர்ப்புகளில் சொல்லியுள்ளனர். தமிழ்நாட்டில் 7 பேர் விடுதலை வழக்கில் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்ற வழக்குகளில் ஆளுநர் சம்பந்தப்பட்டுள்ளார். கருணை மனுக்கள் மீதான பல வழக்குகளில் குடியரசுத் தலைவர் சம்பந்தப்பட்டுள்ளார். பேரறிவாளன் வழக்கில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட போது நமது வழக்கு முதல் வழக்கு அல்ல. பஞ்சாபில் பலருடைய தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் குறைத்தது. அந்த வழக்குகளின் தீர்ப்பை தான் இதில் அமல்படுத்தினார்கள். கருணை மனுக்களை வருடக்கணக்கில் வைத்துள்ளதால் நாங்கள் தலையிடுகிறோம் என்று சொன்னார்கள்.
வழக்கமாக ஆளுநர், ஜனாதிபதி மீது நினைத்தது போல எல்லாம் வழக்கு தொடர முடியாது. போட்டாலும் அவ்வளவு சீக்கிரத்தில் தலையிட மாட்டார்கள். குறிப்பிட்ட நோக்கத்திற்காகவோ, அல்லது பிரச்சினை இருந்தால் மட்டும்தான் எடுத்துக் கொள்வார்கள். பேரறிவாளன் விவகாரத்தில் அமைச்சரவை முடிவு செய்கிறது. அதை ஆளுநர் வைத்துக் கொண்டிருக்கிறலாமா? என கேள்வி எழுகிறது. அதேபோல், சட்டமன்றம் நிறைவேற்றுகிற மசோதாவை கால வரையின்றி ஒப்புதல் அளிக்காமல் இருக்கலாமா? என்கிற கேள்விக்கு உச்சநீதிமன்றம் பதில் சொல்கிறது. இந்த தீர்ப்பு மசோதாக்கள் மீது பதில் அளிக்க கால வரையறையை நிர்ணயம் செய்கிறது. ஆளுநர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுத்தாக வேண்டும். அந்த மசோதா ஜனாதிபதிக்கு செல்கிறபோது அவர் நிராகரிக்கவும் செய்யலாம். பொதுப்பட்டியலில் உள்ளவற்றில் மத்திய அரசின் நிலைப்பாடே இறுதியானதாகும். அதனால்தான் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மறுக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் எழுப்பியிருக்கிற கேள்வி என்ன என்றால், உச்சநீதிமன்றம் மாநில அரசுகள் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்ய முடியுமா? என்பது தான். 415 பக்க தீர்ப்பை படித்து பார்த்தால், 3 மாத கால நிர்ணயம் செய்துள்ளது உள்துறை அமைச்சகம்தான். உள்துறை அமைச்சகம் கால நிர்ணயம் செய்தால் அது பிரச்சினை இல்லை. மத்திய அரசின் நோக்கம் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு பரிசீலனைக்கு உட்படுத்துவது ஆகும். ஏன் என்றால் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற இடங்களில் இதேபோன்ற வழக்குகள் உள்ளன. அவர்களை பொருத்தவரை காலத்தை தள்ளுவது தான். தற்போது நடைமுறையில் உள்ள தீர்ப்பை அவர்களால் மீற முடியவில்லை.
சட்டப்பிரிவு 142ல் ஆளுநர்தான் மசோதாக்களுக்கு ஒப்பதல் அளிக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளது. அப்போது, இந்த சட்டப்பிரிவை பயன்படுத்த முடியுமா? என்று குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்புகிறார். காலக்கெடு நிர்ணய விவகாரத்தில் வக்பு சட்டம் தொடர்பாகவும், தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக இயற்றப்படும் சட்டங்களுக்கு அன்றைய இரவே ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிறார். ஆனால் மாநிலத்தில் இருந்து சென்றால் கால வரையின்றி ஒப்புதல் அளிக்காமல் இருப்பார்களா? அப்போது அவர்கள் என்ன லண்டனில் இருந்து நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் என்று தம்மை நினைத்துக்கொள்கிறாரா? டெல்லி அரசு என்ன பிரிட்டானிய ஏகாதிபத்திய அரசா? இந்த கேள்விக்கு என்ன பதில்? நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அன்றைக்கு இரவே ஒப்புதல் அளிக்கிறபோது, சட்டமன்றம் இயற்றும் மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் முடிவு தான் எடுக்க சொல்கிறார்கள்.
ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகள், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றுதான் நினைக்கிறேன். தமிழ்நாடு அரசு பெற்ற தீர்ப்பை மிகவும் அதிகமாக புகழ்வதற்கு இல்லை. ஏனென்றால் மத்திய பட்டியலில் ஒப்புதல் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லலை. நிராகரிக்கலாம் என்று அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆனால் காலவரையறை தான் சொல்லியுள்ளது. இதில் என்ன ஆட்சேபனை இருக்கிறது. மத்திய பட்டியலில் சட்ட மசோதா அனுப்பினால் அதை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்புவார். ஜனாதிபதி என்பது மத்திய அமைச்சரவை ஆகும். மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று முடிவு எடுக்கிறார்கள் என்றால்? அப்படி செய்யலாம். அதனை எதிர்த்து வழக்கு தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஜனாதிபதியை பொருத்தவரை கால நிர்ணயமே தவறு என்கிறார்கள். அப்படி என்றால் எப்போது வேண்டுமானாலும் செயல்படுவார் என்கிறார். இது எப்படி ஜனநாயகம் ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் அவ்வாறு இருந்தது. தற்போது அப்படி சொல்ல முடியுமா? உச்சநீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் மேற்கொண்டால் நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மை போய்விடும். மதவழிபாட்டு தலங்கள் தொடர்பான வழக்குகளை இனி போடக்கூடாது என்று சஞ்சீவ் கண்ணா தடை வித்தார். அதுபோன்று வக்பு சட்டத்திற்கு தடை தருகிறேன் என்று சொல்லி மத்திய அரசிடம் இருந்து வாக்குறுதி பெற்றுள்ளார். உச்சநீதிமன்றத்திடம் இருந்து அவ்வப்போது சின்ன சின்ன நம்பிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கைகள் பொய்ப்பது போல உச்சநீதிமன்றம் இருக்குமா? என்று நமக்கு தெரியாது. அவசர நிலை காலத்தில் உச்சநீதிமன்றம் தடுமாறியது போல தடுமாறுமா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.