சட்டமசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்துள்ளது குறித்து உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் மோடி அரசு அவரை சிக்கலில் மாட்டி விட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டு ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளது தொடர்பாக ப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மாநில சுயாட்சிக்கு தமிழகம் எப்போதும் முன்னோடியாக இருந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சிக்காக உச்சநீதிமன்றத்தில் போராடி எந்த மாநிலமும் செய்யாத ஒரு வேளையை செய்து, பூனைக்கு மணியை கட்டியுள்ளார். ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயத்துள்ளது மாநில சுயாட்சிக்கு, உன்னதமான தீர்ப்பாகும். அரசியல் சாசன சட்டத்தின்படி பதவிக்கு வந்தவர்கள், முடிவு எடுப்பதில் உள்ள நெகிழ்வுத்தன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படவிடாமல் செய்கின்ற செயலை தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் உள்ள குடியரசுத் தலைவர் பொம்மையாக மாறி செயல்படுவதை தற்போதைய ஜனாதிபதி நிரூபித்துள்ளார். சட்டவிரோத செயலை செய்த ஆர்.என்.ரவி குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னது என்றால்? அந்த சட்ட விரோத செயலை அங்கீகரித்த ஜனாதிபதியும் குற்றவாளிதானே.
பிரெசிடென்ஷியல் ரெபரன்ஸ் என்பது அரசியலமைப்பு சட்டம் ஜனாதிபதிக்கு கொடுத்திருக்கிற ஒரு சிறப்பு சலுகை. சட்டப்படி உச்சநீதிமன்றத்திடம் வழிகாட்டுதலையோ, ஆலோசனையோ கேட்கலாம். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பொறுந்தாது. நீங்கள் சட்டப்பிரிவு 143 பிரிவு ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அதைதான் உச்சநீதிமன்றம் ஏற்கனவே அடித்துவிட்டதே. ஜனாதிபதி முர்மு அவர்கள் இன்றைக்கு அறியாமையை வெளிப்படுத்துகிற ஜனாதிபதியாக அரசியலமைப்பு சட்டம் படித்தவர்கள் முன்பாக உள்துறை அமைச்சகத்தால் ஒரு பொம்மையாக நிறுத்தப்பட்டுள்ளார். மோடி அரசு ஜனாதிபதி முர்முவை இந்த சிக்கலில் மாட்டி விட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் 2 கேள்விகள் கேட்டால் ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஒன்று ஏற்றுக்கொண்டு ஒப்புதல் தர வேண்டும். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பி மறுபரிசீலனை செய்ய சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராகவோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவோ இயற்றப்பட்ட மசோதாவாக இருந்தால் மட்டும்தான் அவற்றை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்ப முடியும். அந்த மசோதாவின் மீது முடிவு எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கலாம்.
இதுவரை 14 ஆலோசனைகள் கேட்டுள்ளனர். ஒரு ஆளுநர் அரசியல் சாசனம் வழங்கிய 3 பிரிவுகளை பயன்படுத்தாமல், சட்டவிரோதமாக ஆளுநர் செய்து, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அரசியல் சாசன சட்டத்தின்படி இரண்டாம் முறையாக மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்பக்கூடாது. அதையும் மீறி ஆளுநர் அனுப்புகிறார் என்றால்? அதனை தவறு என்று சொல்லி ஜனாதிபதி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்.

ஏன் ஆளுநர் செய்த இந்த சட்ட விரோத செயலை ஏற்றுகொண்டு, மாநில அரசை செயல்பட விடாமல் தடுப்பதற்கு ஜனாதிபதியும் உடந்தையாக இருந்தீர்கள் என்கிற கேள்வியை உச்சநீதிமன்றம், ஜனாதிபதியின் கேள்விக்கு சொன்னால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சட்டவிரோத செயலை செய்த ஆளுநருடைய செயலை கேள்வி கேட்கக்கூட தெரியாத ஒரு ஜனாதிபதியை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டால் என்ன சொல்வீர்கள். 142வது சட்டப்பிரிவை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினால் என்ன செய்வீர்கள். அந்த சட்டப்பிரிவை தற்போதுள்ள சட்டத்தில் நீதி கிடைக்கவில்லை என்றால், முழுமையான நீதி கிடைப்பதற்கு உச்ச நீதின்றத்திற்கு அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். இது கூட தெரியாமலா உச்சநீதிமன்றம் அமர்ந்துள்ளது. 142ல் வழங்கிய தீர்ப்பை கேள்வி கேட்க வேண்டும் என்றால் நீங்கள் மறுஆய்வு மனுதான் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி சென்றால் மாட்டிக்கொள்வார்கள் அல்லவா?

மத்திய அரசு இயற்றக்கூடிய சட்டங்களுக்கு எல்லாம் உடனடியாக ஒப்புதல் அளிக்கிறார். மசோதாக்களுக்கு எவ்வளவு விரைவாக ஒப்புதல் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கையெழுத்து போட வேண்டும் என்று அரசியல் சாசன சட்டம் சொல்கிறது. மசோதாக்களை படிப்பதற்கு ஜனாதிபதிக்கு கால அவகாசம் வேண்டும் என்பதால் அவருக்கு நெகிழ்வுத் தன்மையுடன் ஆஸ் சூன் அஸ் பாசிபிள் என்று சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் காலக்கெடுவே இல்லாமல் சட்டத்தை கிடப்பில் போடுவீர்கள் என்று சொன்னால்? என்ன அர்த்தம்.
எங்கு எல்லாம் சட்டம் வேக் ஆகவும், சைலன்ஸ் ஆகவும் இருக்கிறதோ அங்கெல்லாம் அவற்றை பயன்படுத்தி அரசியல் காரணங்களுக்காக அரசியல் சாசனத்தின் படி நடக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுமானால் அதை கேள்வி கேட்கக்கூடிய அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என்பதுதான் சட்டப்பிரிவு 142 ஆகும். அப்படி இருக்கையில் 142வது சட்டப்பிரிவின் கீழ் எதற்கெல்லாம் கேள்வி எழுப்புவீர்கள் என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளது அறியாமையாகும். ஜனாதிபதி இப்படி வெளிப்படையாக அறியாமையை வெளிப்படுத்தலாமா?

பிரெசிடென்ஷியல் ரெபரன்ஸ் தான் போட்டுள்ளீர்கள். முடிந்தால் சட்டப்பிரிவு 142-ஐ நீக்கி பாருங்கள் நிற்கிறதா? என்று பார்ப்போம். அதை உங்களால் செய்ய முடியுமா? அப்படி செய்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பே பாதிக்கப்படும். அதனுடைய விழுமியங்கள் பாதிக்கப்படும். குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளதால் இதை அடிப்படையாக கொண்டு ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூற முடியாது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வேறு எந்த உத்தரவும் வழங்கவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.