கண்ணோட்டம்: ஒரு பார்வை
எண்ணெய்க் கிணறுகள் தொழிலில் ஈடுபட்டு ஒரு மாபெரும் கோடீஸ்வரராக ஆவதற்கு முன், ஜான் டி.ராக்கஃபெல்லர், ஒஹையோ மாநிலத்திலுள்ள கிலீவ்லாந்து நகரில் ஒரு கணக்காளராகவும், சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு நிதியாளராகவும் இருந்து வந்தார். குற்றவாளியாக இருந்த அவருடைய அப்பா, தன் குடும்பத்தைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்டார். இளம் 1855ல் தன்னுடைய பதினாறாம் வயதில் தன்னுடைய முதல் வேலையில் சேர்ந்தார். அப்போது அவருக்குக் கிடைத்த ஊதியம் ஒரு நாளைக்கு ஐம்பது சென்ட்டுகள்.
பிறகு 1857ல் ஒஹையோ மாநிலத்தில் உதயமான ஒரு நிதி நெருக்கடி கிலீவ்லாந்தைப் புரட்டிப் போட்டது. தொழில்கள் முடங்கின. விலைவாசி விண்ணைத் தொட்டது. அதன் விளைவாக உருவான பணவீழ்ச்சி, பல ஆண்டுகள் அங்கு நீடித்தது.

ராக்கஃபெல்லர் இதனால் நிலைகுலைந்து போயிருக்கலாம். அப்போதுதான் தலையைத் தூக்கலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய சந்தை வீழ்ச்சி அவரைப் பந்தாடியது. அவருடைய அப்பாவைப்போல அவரும் அதிலிருந்து தப்பி ஓடிப் போயிருந்திருக்கலாம். நிதித் துறைக்குத் தலை முழுகிவிட்டு, இந்த அளவு ஆபத்தில்லாத ஒரு துறையை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அச்சிறிய வயதிலேயே அவருக்கு சுய உறுதி இருந்தது. கடுமையான சூழலிலும் கலங்காதிருக்கின்ற மனநிலையை அவர் பெற்றிருந்தார்.
அந்தப் பொருளாதாரச் சூறாவளி குறித்து முனகிக் கொண்டிருக்காமல், அந்த நிகழ்வுகளை அவர் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். கற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவே அவர் அதைப் ன தவறு செய்தார்கள் பார்த்தார். விரைவில் அவர் பணத்தைச் கொண்டார். மற்றவர்கள் என்ன தவறு செய்தாா்கள் என்பதை அவர் உற்று கவனித்தார். மற்றவர்கள் பார்க்கத் தவறிய பொருளாதார பலவீனங்களை அவர் பார்த்தார். பொருளாதாரத்தில் ஏற்பட்டத் திடீர் மாற்றங்களை அதனால்தான் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்பதை அவர் கண்டுகொண்டார்.அப்போது தான் கற்றுக் கொண்ட ஒரு பாடத்தை அவர் தன் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருந்தார். சந்தை எப்போதும் முன்கூட்டியே கணிக்கப்பட முடியாததாகத்தான் இருக்கும், பெரும்பாலான சமயங்களில் அது நஞ்சை உமிழும். பகுத்தறிகின்ற, கட்டுப்பாட்டுடன் இயங்குகின்ற ஒரு மனத்தால் மட்டுமே அதிலிருந்து இலாபத்தைக் கறக்க முடியும். சந்தையைப் பொறுத்தவரை, ஊகம் சீரழிவுக்குத்தான் வழி வகுக்கும் என்பதையும், ஆட்டுமந்தைப் போக்கை அலட்சியம் செய்ய வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.
ராக்கஃபெல்லர் தான் கற்றறிந்தவற்றை விரைவிலேயே நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். அவருக்கு இருபத்தைந்து வயதாக இருந்தபோது, அவர் சரியான எண்ணெய்க் கிணறுகளைக் கண்டுபிடித்தால், அவருடைய அறிவுரைப்படி சுமார் ஐந்து இலட்சம் டாலர்களை அதில் முதலீடு செய்யத் தாங்கள் தயாராக இருந்ததாக சில முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். தனக்குக் கிடைத்த அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ராக்கஃபெல்லர், அருகிலிருந்த எண்ணெய்க் கிணறுகளை ஆய்வு செய்வதற்காக உடனடியாகக் கிளம்பினார். ஒரு சில நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவர், பொருத்தமான எண்ணெய்க் கிணறுகள் எதையும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி அவர்களுடைய பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டார். அச்சமயத்தில் அதில் முதலீடு செய்வது சரியாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியதால் அவர் அதில் இறங்கவில்லை.
அவருடைய இந்தத் தீவிரமான சுய ஒழுங்கும் உணர்ச்சிவசப்படாமல் சூழல்களைப் பார்க்கின்ற பக்குவமும்தான், பின்னர், அமெரிக்க உள்நாட்டுப் போர், 1873, 1907 மற்றும் 1929ல் நிகழ்ந்த பெரும் பணவீழ்ச்சிகள் போன்ற, ஒன்றன்பின் ஒன்றாக வந்த பல தடைகளிலிருந்து அவர் மீள்வதற்கு அவருக்கு உதவின. அனைத்துப் பேரழிவுகளிலும் வாய்ப்புகளைப் பார்க்க அவர் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அதோடு, வியாபாரச் குழல் அல்லது சந்தை நிலவரம் எவ்வளவுதான் வசீகரமாக இருந்தாலும், அதனால் சபலப்படாமல் இருப்பதற்கான வலிமையை அவர் பெற்றிருந்தார்.
அந்த முதல் நெருக்கடி ஏற்பட்டு இருபது ஆண்டுகளுக்குள், ராக்கஃபெல்லர் அமெரிக்க எண்ணெய்ச் சந்தையில் தொண்ணூறு சதவீதத்தைக் கைவசப்படுத்தியிருந்தார். பேராசையுடன் செயல்பட்ட அவருடைய போட்டியாளர்கள் அழிந்து போயினர். பதற்றத்துடன் செயல்பட்ட அவருடைய சகாக்கள் தங்களுடைய பங்குகளை விற்றுவிட்டுத் தங்களுடைய தொழிலைவிட்டு விலகினர். சந்தேகப்பிராணிகளாக இருந்த பல முதலீட்டாளர்கள் நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட்டனர்.
எப்போதெல்லாம் நெருக்கடிகளும் சிக்கல்களும் அதிகரித்தனவோ, அப்போதெல்லாம் ராக்கஃபெல்லர் மிகவும் அமைதியானார். குறிப்பாக, அவரைச் சுற்றியிருந்தவர்கள் பீதியடைந்தபோதோ அல்லது பேராசையுடன் செயல்பட்டபோதோ, அவர் அதற்கு நேரெதிராக அமைதியாக இருந்தார். இந்த அணுகுமுறையை அவர் தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். சந்தையில் நிகழ்ந்த ஏற்ற இறக்கங்களின்போதுதான் அவர் பெரும் பணம் சம்பாதித்தார். மற்றவர்களால் பார்க்க முடியாததை அவரால் பார்க்க முடிந்ததுதான் அதற்குக் காரணம். வாரன் பஃபேயும் இதைத்தான் செய்தார். “மற்றவர்கள் பேராசையுடன் செயல்படும்போது நீங்கள் பயப்படுங்கள். மற்றவர்கள் பயப்படுகின்றபோது நீங்கள் பேராசைப்படுங்கள்“ என்று பஃபே கூறியது இந்தக் கண்ணோட்டத்தில் தான்.
ராக்கஃபெல்லரைப் பற்றி ஒரு பத்திரிக்கையாளா் இவ்வாறு எழுதிலிருந்தார்: “வளைந்து கொடுக்கும் தன்மை சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ளுதல், அமைதி புத்திசாலித்தனம் போன்றவை அவருடை ஆளுமையின் ஒரு பகுதியாக இருந்தன. ராக்கஃபெல்லரை எதனாலும் உலுக்க முடியாது. பொருளாதார நெருக்கடி, முரட்டுத்தனமான போட்டியாளர்கள், அமெரிக்க அரசின் நீதிமன்றம் என்று எதுவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சர, எந்த சலசலப்புக்கும் அவர் அஞ்சவில்லை”.
அவர் பிறக்கும்போதே அப்படி இருந்தாரா? இல்லை. இது அவர் கற்றுக் கொண்ட ஒரு நடத்தைதான். இந்த சுய ஒழுங்கை அவர் தன் வாழ்க்கையின் போக்கின் ஊடாகக் கற்றுக் கொண்டார். 1857ம் ஆண்டு நெருக்கடியில் அது தொடங்கியது.
அவர் ஒருமுறை இவ்வாறு கூறியிருந்தார்: “தங்களுடைய வாழ்க்கைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்வதற்குத் தங்களுடைய இளவயதில் போராட வேண்டிய நிலையில் இருக்கின்ற இளைஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என்னுடைய வாழ்வின் தொடக்கத்தில் என்னை வாட்டியெடுத்த மூன்றரை ஆண்டுகள் குறித்து என் வாழ்நாள் முழுவதும் நான் நன்றியுடன் இருப்பேன்.”
ராக்கஃபெல்லர் வாழ்ந்த வாழ்ந்த அதே காலத்தில் எண்ணற்றோர் அதே இன்னல்களை அனுபவித்திருந்தபோதிலும், அவரைப்போல அதற்குச் செயல்விடை அளித்தவா்கள் மிகச் சிலரே. அந்த முட்டுக்கட்டைக்குள் இருந்த வாய்ப்பைப் பார்ப்பதற்குப் பலர் தங்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கவில்லை. அது தங்கள் தலையில் இறங்கிய ஓர் இடி அல்ல, மாறாக, அது படிப்பினையை உள்ளடக்கியிருந்த ஒரு வெகுமதி என்பதைப் பார்க்க அவர்கள் தங்களைத் தயார்படுத்தி இருக்கவில்லை.
நீங்களும் உங்களுடைய வாழ்வில் தடைகளை எதிர்கொள்வீர்கள். அவற்றில் பல உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இங்கு முக்கியம் அந்தத் தடைகள் அல்ல, மாறாக, அவற்றுக்கு நாம் எவ்வாறு செயல்விடை அளிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை நீங்கள் மீண்டும் மீண்டும் கற்றுக் கொள்வீர்கள். ஒரு தடையிலிருந்து நீங்கள் எந்த அளவு வெற்றிகரமாக மீளுகிறீர்கள் அல்லது அந்தத் தடையின் காரணமாக நீங்கள் எந்த அளவு கொழிக்கிறீர்கள் என்பதை அதற்கு நீங்கள் அளிக்கின்ற செயல்விடை தீர்மானிக்கும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
ஒருவனுடைய பார்வையில் ஒரு நெருக்கடிபோலத் தோன்றுகின்ற ஒரு விஷயம் மற்றொருவனின் பார்வையில் ஒரு வாய்ப்பாகத் தென்படலாம். ஒருவன் வெற்றியால் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றபோது, மற்றொருவன் உணர்ச்சிவசப்படாமல் எதார்த்த நிலையைப் பார்க்கக்கூடும். ஒருவன் தன்னுடைய சுயகட்டுப்பாட்டை இழக்கின்றபோது, மற்றொருவன் அமைதியாக இருக்கக்கூடும். பரிதவிப்பு, விரக்தி, பயம், கையறு நிலை போன்ற நம்முடைய செயல்விடைகள் அனைத்தும் நம்முடைய கண்ணோட்டங்களின் வெளிப்பாடே. ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதுவும் நம்மை இப்படி உணர வைப்பதில்லை. மாறாக, இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இரையாவதை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது ராக்கஃபெல்லர் செய்ததைப்போல, இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்.
ராக்கஃபெல்லர் தன்னுடைய சூழலை எவ்வாறு உணர்ந்தார் என்பதற்கும், இவ்வுலகிலுள்ள பெரும்பாலான மக்கள் எப்படி உணர்கின்றனர் என்பதற்கும் இடையேயான வேறுபாடுதான் அவருடைய வெற்றியை உறுதி செய்தது. அவருடைய கவனமான, எச்சரிக்கையான தன்னம்பிக்கை பெரும் ஆற்றலைக் கொண்டிருந்தது. மற்றவர்கள் எதிர்மறை என்று கருதுகின்ற விஷயங்களை ஒரு சந்தர்ப்பமாக அணுகுவது அது.
ராக்கஃபெல்லரை இங்கு குறிப்பிட்டது வெறும் ஓர் ஒப்புமைக்காக மட்டுமல்ல.
ராக்கஃபெல்லரைப்போல நாமும் பொன் முலாம் பூசப்பட்ட யுகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பத்து ஆண்டுகளுக்குள்ளாக நாம் இரண்டு பெரும் பொருளாதார வீழ்ச்சிகளைக் கண்டுள்ளோம். அப்போது பல தொழிறதுறைகள் சுக்குநூறாகச் சிதறின. இலட்சக்கணக்கானோா் வாழ்க்கை சின்னாபின்னமாகியது. மக்கள் கோபமடைந்தனர், ஊக்கமிழந்தனர், மனத்தளர்ச்சி அடைந்தனர், ‘வால் ஸ்டிரீட்டை முற்றுகையிடுவோம்’ போராட்டத்தில் குதித்தனர். “அப்படித்தானே அவர்களால் அதற்குச் செயல்விடை அளித்திருக்க முடியும்?” என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அப்படியிருக்க வேண்டிய தேவையில்லை.
வெளித்தோற்றம் மாயையானது. அவர்களுக்கு உள்ளே இருப்பதுதான் முக்கியம்.
மாயைகளை மற்றவர்கள் பயப்படுகின்ற அல்லது நம்புகின்ற ஊடுருவிப் பார்க்கவும் வித்தியாசமாக நோக்கவும் நம்மால் கற்றுக் கொள்ள முடியும். நம் முன்னால் இருக்கின்றவற்றைப் பிரச்சனைகளாகப் பார்ப்பதை நம்மால் நிறுத்திக் கொள்ள முடியும்.
பெரும்பாலான சமயங்களில் நாம் உணர்ச்சிவசப்பட்டு, நம்முடைய நம்பிக்கையிழந்து, தொலைத்துவிடுகிறோம். கண்ணோட்டத்தைத் மோசமான விஷயங்களை மேலும் அதிக மோசமான விஷயங்களாக ஆக்குவதைத் தவிர அதனால் வேறு எந்தப் பயனும் இல்லை. பயனற்றக் கண்ணோட்டங்கள் நம் மனத்திற்குள் ஊடுருவி நம்மைத் தடுமாறச் செய்துவிடும்.
நம்முடைய மூளை, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழலிலிருந்து வேறுபட்ட ஒரு சூழலுக்கு ஏற்ற விதத்திலேயே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் விளைவாக, நாம் தேவையற்ற உயிரியல்ரீதியான பொதிகளைச் சுமந்து கொண்டு இருக்கிறோம். இப்போது நம்மிடையே இல்லவே இல்லாத ஆபத்துகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்பார்க்கின்ற விதத்தில்தான் மனித இனம் உருவெடுத்துள்ளது. பண நெருக்கடியைப் பற்றிச் சிந்தித்தவுடன் உங்களுக்கு வியர்த்துக் கொட்டுவதைப் பற்றியும், உங்களுடைய மேலதிகாரி உங்களிடம் காட்டுக் கூச்சல் போடுகின்றபோது அங்கிருந்து ஓடிவிடலாமா அல்லது பதிலுக்குக் கத்தலாமா என்று நீங்கள் யோசிப்பதைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள். இங்கு நம்முடைய பாதுகாப்புக்கு எந்தவிதமான ஆபத்தும் கிடையாது. நாம் பட்டினி கிடப்பதற்கோ அல்லது நம்மீது வன்முறை நிகழ்வதற்கோ வாய்ப்பே இல்லை என்றாலும் பல நேரங்களில் நாம் அப்படிப்பட்ட உணர்ச்சிகளால்தான் ஆட்கொள்ளப்படுகிறோம்.
இப்படிப்பட்டச் சூழல்களில் நாம் எப்படிச் செயல்விடை அளிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய உணர்ச்சிகளால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட நம்மை நாம் அனுமதிக்கலாம். அல்லது அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றை வடிகட்ட நாம் முயற்சி செய்யலாம். கண்ணோட்டம் குறித்தக் கட்டுப்பாடு, ஒவ்வொரு சூழலிலும் உங்கள் சாதகங்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கும் சரியான நடவடிக்கை எடுப்பதற்கும் உதவும்.
ராக்கஃபெல்லர் இதைப் புரிந்து வைத்துக் கொண்டு, மோசமான, நாசம் விளைவித்தக் கண்ணோட்டங்களைக் களைந்தெறிந்தார். அவற்றைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற திறமையை அவர் தன்னிடம் வளர்த்துக் கொண்டார். அது ஒரு மாபெரும் ஆற்றல். ஏனெனில், தங்களுக்குள் இருக்கின்ற அந்தப் பகுதியைப் பெரும்பாலானவர்களால் ஒருபோதும் அடைய முடிவதில்லை.
பேரழிவுகளை நாம் அறிவுபூர்வமாகப் பார்க்கலாம். அல்லது ராக்கஃபெல்லரைப்போல, ஒவ்வொரு பேரழிவிலும் ஒரு வாய்ப்பைப் பார்க்கலாம். அதன் மூலம், எந்தவொரு எதிர்மறைச் சூழலையும் படிப்பினைகளை வழங்குகின்ற ஒன்றாக, ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக, அல்லது பெரும் சொத்துகளைக் குவிக்கக் கிடைத்த ஓர் ஆசீர்வாதமாக ஆக்கிக் கொள்ளலாம். சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால், நிகழ்கின்ற அனைத்தும் – அது பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட இழப்பாக இருந்தாலும் சரி – முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வாய்ப்புதான்.
கடக்கவே முடியாது என்பதுபோலத் தோன்றுகின்ற முட்டுக்கட்டைகளை எதிர்கொள்கின்றபோது நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிசில இருக்கின்றன.
அப்போது நாம்:
* புறவயமாகப் பார்க்க வேண்டும்
* உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்
*அனைத்துச் சூழல்களிலும் நன்மையை மட்டுமே பார்ப்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
* நம்மை ஆசுவாசப்படுத்திக கொள்ள வேண்டும்.
* பிறரைக் கட்டுப்படுத்துகின்ற விஷயங்களை அலட்சியம் செய்ய வேண்டும்
* அனைத்தையும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்
* மீண்டும் நிகழ்கலணத்திற்கு வந்துவிட வேண்டும்
* எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதில் கவமை செலுத்த வேண்டும்
இப்படித்தான் நம்மால் முட்டுக்கட்டைகளுக்குள் வாய்ப்புகளைப் பார்க்க முடியும். அது தானாக நிகழாது. சுய ஒழுங்கு மற்றும் தர்க்கரீதியான அணுகுமுறையிலிருந்து உருவாகின்ற ஒரு செயல்முறை அது.
அந்தத் தர்க்கரீதியான செயல்முறை உங்களுக்கும் கிடைக்கின்ற ஒன்றுதான். அதை நீங்கள் சுவீகரித்தும் கொள்ள வேண்டும்.


