நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதேபோன்று ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று விருப்பமும் ஆர்வமும் கொண்டவராக இருக்கிறீர்கள். ஆனால் அது வெறும் விருப்பமாகவும், ஆர்வமாகவும் மட்டுமே இருக்கிறது. நினைத்த மாதிரி ஒன்றும் நடைபெறவில்லை.
அதற்கு என்ன காரணம்?
அடிப்படையில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளாத வரை உங்களுடைய பிரச்சனைகள், வேதனைகள் உங்களை விட்டு போகாது. உங்களை நீங்கள் அறிந்துக் கொள்வதில் இருந்துதான் உங்கள் வாழ்க்கை பாதையை மாற்ற முடியும்.
உங்களைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்ற கேள்வி சாதாரணமானதாக தோன்றலாம், ஆனால் அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றக்கூடிய அடிப்படையான கேள்வி என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக, ஒரு இன்டர்வியூக்கு போனால் அங்கே உங்களைப்பற்றி சொல்லுங்களேன் என்பார்கள். அப்பொழுது பெயர், ஊர், கல்வி தகுதி போன்ற சுய தகவல்களை மட்டும் கொடுப்பீர்கள்.
அதுமட்டுமா நீங்கள்?
நீங்கள் நிறைய புத்தகங்களை படித்திருப்பீர்கள். அதில் சில நூல்களை வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடியதாகவும் தேர்வு செய்து வைத்திருப்பீர்கள்.
ஆயிரம் ஆயிரம் நூல்கள், குருமார்கள் சமூக வழிகாட்டுதலுக்கு வந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். போதனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் மனித சமுதாயத்திற்கு திருப்தி அளிக்கவில்லை. குழப்பங்கள் தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த குழப்பங்களுக்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண மேலும் ஒரு குருவை, சாமியாரை, கடவுளை தேடுகிறோம். கோயில், தேவாலையங்கள் என்று அலைந்து திரிகிறோம். அப்பொழுதும் மனம் அமைதி அடையவில்லை. குழப்பங்களும், பிரச்சனைகளும் அப்படியேதான் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் வேறு வழி தெரியாமல் குழப்பங்களோடும், பிரச்சனைகளோடும் வாழ்வதற்கு பழகிக் கொள்கிறோம்.
அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு விரும்புகிற நாம், நம்மைப் பற்றி தெரிந்துக் கொள்ள, நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள ஒரே ஒரு முறை கூட முயற்சி செய்ய மறந்துவிடுகிறோம்.
நாம் நம்மைப் பற்றி, நம் சிந்தனையின் போக்குகளைப் பற்றி, அதன் செயல்களைப் பற்றி அறிந்துக் கொண்டோம் என்றால் இன்னொருவரின் உதவி அவசியம் இருக்காது.
உங்களுடைய ஒவ்வொரு பிரச்சனைக்கும், குழப்பத்திற்கும் அடிப்படை காரணம் நீங்கள் தான், பிரச்சனைகளையும், குழப்பங்களையும் உருவாக்கியவர் நீங்கள் தான் என்பதை மறந்துவிட்டு,அந்த பிரச்சனையை நேருக்கு நேர் அணுக முடியாமல் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள கடவுளை தேடுகிறோம்.
உங்கள் பிரச்சனையை உங்களாலயே தீர்க்க முடியவில்லை என்றால் இன்னொருவரால் மட்டும் எப்படி தீர்க்க முடியும்? அது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்?
உங்கள் பிரச்சனையை உங்களால் மட்டுமே முடிவிற்கு கொண்டுவர முடியும் என்பதை முதலில் நீங்கள் நம்பவேண்டும். உலகில் எவராலும் உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியாது.
உள்ளுக்குள் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? அடிக்கடி பொய் சொல்லக் கூடியவராக இருக்கிறீர்களா? பேராசை கொண்டவராக இருக்கிறீர்களா? அடுத்தவரை கண்டு பொறாமை படக்கூடியவராக இருக்கிறீர்களா? எதற்கெடுத்தாலும் கோபப்படக் கூடியவராக இருக்கிறீர்களா? அல்லது தாழ்வு மனப்பான்மை கொண்டவரா? உள்ளுக்குள் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை முழுமையாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒன்றை தேடிச் செல்கிறீர்கள், முக்கியமான ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறீர்கள். ஒன்றை தேடுவதற்கு முன்பு “தேடுகின்றவர்” எப்படி பட்டவர்?அவர் என்னவாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது.
ஒரு அழகான ராஜகுமாரியை ஏழை ஒருவன் காதலித்து வந்தான். அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். இதை அறிந்து கொண்ட ராஜ்குமாரின் தந்தை அரசர் கோபப்பட்டார். நேர்மை தவறாத அரசர் என்று பெயரெடுத்தவருக்கு இந்த சம்பவம் சங்கடத்தை ஏற்படுத்தியது. தன் மகளை சாதாரண குதிரை ஓட்டிக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை. அரசவையை கூட்டிய அரசர் இரு துண்டு சீட்டுகளை ஒரு பெட்டியில் போடுவதாகவும், ஒரு சீட்டில் வேண்டாம் என்றும் மற்றொரு சீட்டில் திருமணம் முடிக்கலாம் என்றும் எழுதப்பட்டிருக்கும் என்று கூறினார்.
அந்த இரு சீட்டில் எதை ஏழை இளைஞன் எடுக்கிறானோ அதன்படியே முடிவு செய்துக் கொள்ளலாம் என்று அரசவையில் அரசர் தெரிவித்தார். மக்கள் சபையின் முன் இரு சீட்டுகளையும் ஒரு பெட்டியில் போட்டார்.
ஆனால் அந்த இரண்டு சீட்டுகளிலும் வேண்டாம் என்றே எழுதப்பட்டிருந்தது. இது யாருக்கும் தெரியாது. அரசர் ஏழையை கூப்பிட்டார். அந்த ஏழை தன்னைப்பற்றி முழுமையாக அறிந்தவன். நிதானமாக யோசித்தான். ஒரு சீட்டை மட்டும் எடுத்தான், ராஜகுமாரியை மணந்து கொண்டான்.
எப்படி?
இவ்வளவு பெரிய அரண்மனைக்கு மருமகனாக போகிறோம். தனது மாமனாராகிய அரசருக்கு ஒரு சங்கடமும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். இரண்டு சீட்டுகளையும் எடுத்து மக்கள் சபையில் காண்பித்தால் மாமனாருக்கு மரியாதை குறைந்து போகும். அதனால் அந்த ஏழை இளைஞன் தெளிவாக யோசித்தான். பெட்டியில் ஒரு சீட்டை மட்டும் எடுத்து படித்தான். உடனே அதை சுக்கு நூறாக கிழித்து விட்டான்.
அரசரே! நான் எடுத்த சீட்டில் மணம் புரிய சம்மதம் என்று எழுதப்பட்டிருந்தது. அதை அடுத்த சீட்டை எடுத்து பார்த்து நீங்களே உறுதி செய்துக் கொள்ளுங்கள், மக்களிடமும் காட்டுங்கள் என்றான்.
அடுத்த சீட்டில் வேண்டாம் என்று இருந்தது. இப்போது அரசனுக்கு வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். அறிவாளி மருமகனை பாராட்டவும் செய்தார்.
இந்த கதை எதை வலியுறுத்துகிறது?
ஒரு சாதாரண இளைஞர், மாபெரும் அரசருக்கு மருமகனாக வேண்டும் என்றால் சுலபத்தில் நடந்துவிடாது. அதற்கு தேவையான தெளிவான இலக்கு வைத்திருந்தான். தன்னுடைய வருங்கால மாமனார் எந்த விதத்திலும் மனம் புண்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அந்த உயர்ந்த குணம் தான் அவனை வெற்றியாளனாக மாற்றியது.
நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், வெற்றிப்பெற வேண்டும் என்று விரும்பம் உள்ளவராகவும் இருந்தால் பயம், பொறாமை, கோபம், தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்ச்சியில் இருந்து உங்களை முழுமையாக விடுவித்துக் கொள்ள வேண்டும். இதுதான் நீங்கள் அடையப் போகும் வெற்றியின் முதல் இலக்கு.
நீங்கள் ஏதாவது ஒன்றைப்பற்றி சிந்திக்கிறீர்கள், அதை மட்டும் திரும்பத் திரும்ப ஏன் சிந்திக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். உங்கள் நம்பிக்கையைப் பற்றி (கடவுள் உள்ளிட்ட அனைத்து நம்பிக்கைகள் குறித்தும்) உங்கள் சிந்தனையைப் பற்றி, சிந்தனையின் போக்கை, அதன் செயல்பாட்டை முழுமையாக தெரிந்துக் கொள்வது அவசியம்.
உங்கள் சிந்தனையின் முழுமையான சாரத்தை தெரிந்துக் கொள்ளாமல் நீங்கள் எதைத் தேடினாலும் அது குழப்பத்தில் தான் முடியும்.
ஒருவர் தன்னைத் தானே பின் தொடர்ந்து பார்ப்பது, தன் சிந்தனையின் போக்கை கவனிப்பது என்பது மிகவும் கடினமானதாக தோன்றலாம். ஆனால் அது மிகவும் அவசியமானது. உங்களைப்பற்றி நீங்கள் எவ்வளவு தெரிந்துக் கொள்கிறீகளோ அந்த அளவிற்கு தெளிவு பிறக்கும். தன்னைப்பற்றி அறிய அறிய மனம் அமைதி பெறும். எதிர்மறை சிந்தனைகள் முழுவதுமாக காணாமல் போகும். அந்த அமைதியில் அன்பும், கருணையும் பெருகும். அன்பு மட்டுமே எல்லோரையும் முறையாக வழிநடத்தும். வெற்றியாளராக மாற்றும்.
உங்களை நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள் , வெற்றி பெறுங்கள்!