சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும் அவருடன் இருப்பவர்களே பொறுப்பாக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்துக்கு அழைத்து விஜய் சந்தித்து பேச உள்ளார். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் மாமல்லபுரத்துக்கு அழைத்து பேச உள்ளதாக தவெக தரப்பில் இருந்து தகவல் வெளியாகிய நிலையில், இதற்கு விஜய் ஆதரவாளர்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். ஆனால் இந்த இடத்திற்கு அவர்கள் வருவதற்கு விஜய்தான் வழிசெய்கிறார். விஜய் கரூருக்கு வர வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி விஜய் நினைத்திருந்தால் அந்த இடத்தை விட்டே வந்திருக்க மாட்டார். ஆதவ் அர்ஜுனா போன்றவர்களை எல்லாம் வைத்து புத்திசாலித்தனமாக அரசியல் செய்வதாக விஜய் நினைக்கிறார்.
விஜய் கரூருக்கு நேரில் சென்று மக்களை சந்தித்தால், கோபப்படுபவர்கள் என்ன செய்வார்கள் என்று விஜய்க்கு தெரியும். தற்போதும் காவல்துறையினரிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றத்திற்கு போய் அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். நாங்கள் செல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்லிக் கொள்கிறோம். மண்டபத்திற்கு வெளியே வேண்டும் என்றால் பாதுகாப்பு வழங்குவார்கள். மண்டபத்திற்குள் அவருடைய பவுன்சர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கருர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள எப்.ஐ.ஆரில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். எப்.ஐ.ஆர் என்பது முதற்கட்ட விசாரணை அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாகும். அடுத்தபடியாக குற்றப்பத்திரிகை. அது குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்துகிற விஷயமாகும். கரூர் விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகு தான் உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாகவே சிபிஐ விசாரணைக்கு மாற்றிவிட்டனர். கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக மாநில காவல்துறையினர் விசாரித்து, ஆதாரங்களை எல்லாம் சிபிஐ வசம் ஒப்படைத்து விட்டனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் அப்படியே எப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டார்கள். அடுத்தக்கட்டமாக விசாரணை நடைபெறும். அப்போது விஜய் ஏன் தாமதமாக வந்தார். ஏன் அங்கிருந்து தப்பியோடினார்கள் என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் விசாரித்து வைத்திருப்பார்கள். இந்த வழக்கை கண்காணிக்கும் நீதிபதி தலைமையிலான குழு என்ன சொல்கிறது என்பது தெரியவில்லை. அடிப்படையில் நேர்மையாக செல்கிறார்கள் என்றால் விஜய் மற்றும் அவருடன் இருப்பவர்களை தன் பொறுப்பாக்க வேண்டும்.

விஜய், ஜெயலலிதா பாணியில் ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யப் போவதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மைதானத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட வேண்டும். அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பே வழங்கிட கூடாது. காரணம் அவர்கள் காவல்துறையின் விதிமுறைகளை ஒருபோதும் பின்பற்றியது கிடையாது. விஜய், பொதுமக்களின் ஆதவை என்றைக்கோ இழந்துவிட்டார். தற்போது அவருடன் இருக்கும் ரசிகர்களே அவரை விமர்சிக்க தொடங்கி விட்டனர். விஜயின் அரசியல் காலியாகி விட்டது.
விஜயை வைத்து ஏன் அரசியல் பேசப்படுகிறது. அதற்கு காரணம் அதிமுக – பாஜக கூட்டணியால் திமுகவை எதிர்க்க முடியாது. எடப்பாடி தன்னுடைய கட்சியை பலவீனப்படுத்தி விட்டதால், விஜயுடன் கூட்டணி பேசி வருகிறார். விஜய், தன்னை பாஜக எதிர்ப்பாளராக அடையாளப்படுத்திவிட்டார். மற்றொருபுறம் பாஜக உடன் கூட்டணி வைத்த அதிமுக உடன் போக முடியாது. ஆனால் அவரை பாதுகாப்பது அவர்கள் தான். தற்போது அவர்களுடன் கூட்டணி வைப்பதா? தனியாக போட்டியிடலாமா என யோசிக்கிறார்.

தனித்து போட்டியிட்டால், அமித்ஷா வேடிக்கை பார்ப்பாரா? அதனால் தான் விஜய் திணறுகிறார். விஜய், வீட்டிற்குள்ளே இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும். அரசியலில் நடிக்கக்கூடாது. எம்ஜிஆர், விஜயகாந்தை போல மக்களை பொருட்படுத்தி அரசியல் செய்திருக்க வேண்டும். விஜயால் இன்றைக்கு நிமிர்ந்து நிற்க முடியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


