பாமகவில் சௌமியா அன்புமணிக்கு போட்டியாக தான், காந்திமதியை மருத்துவர் ராமதாஸ் செயல் தலைவராக நியமித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் உமாபதி அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தமிழகத்தில் 3 பேருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அதில் இல.கணேசன் காலமாகிவிட்டார். தமிழிசை பதவியை ராஜினாமா செய்துவிட்டார். சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது குடியரசுத் துணை தலைவர் ஆகிவிட்டார். இதனால் தமிழகத்தில் இருந்து ஒருவரை ஆளுநர் ஆக்க கமலாயத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு ஹெச்.ராஜா, சரத்குமார் உள்ளிட்டோர் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளன.
என்னை பொறுத்தவரை அந்த பதவியை ஹெச்.ராஜாவுக்கு கொடுப்பதற்கு தான் வாய்ப்பு உள்ளது. அவருடைய படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள். எல்லோரையும் முருகன் தான் காப்பாற்றுவார். அந்த முருகனையே காப்பாற்றுபவர் ஹெச்.ராஜா. அவருக்கு தராமல் பிறகு யாருக்கு தருவார்கள்? அவருடைய பூர்விகம் பீகார் மாநிலமாகும். அந்த மாநிலத்திற்கு ஆளுநராக போட்டார்கள் என்றால் மகிழ்ச்சி அடைவார். அவருடைய படம் வெளியாகி வெற்றி பெறும்பட்சத்தில் முர்முவுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதியாக கூட வாய்ப்புகள் ஹெச்.ராஜாவுக்கு இருக்கிறது.

விஜயதாரணியின் அரசியல் வாழ்க்கையை பாஜக எப்போதோ முடித்துவிட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டார். ஆனால் தற்போது அவருக்கு தொகுதி பொறுப்பாளர் பதவியை பாஜக வழங்கியுள்ளது. சரத்குமாருக்கு எதாவது மாநில பொறுப்பாளர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது. அண்ணாமலையை பொறுத்தவரை நயினார் நாகேந்திரனை காலி செய்வது தான் அவருடைய ஒரே நோக்கம். நயினாரை அரசியலில் இருந்து காலி செய்துவிட வேண்டும்.
எனவே அவர் என்ன பேசினாலும், அதற்கு எதிராக பேசுவார். அதன் காரணமாகவே பைசன் பட விவகாரத்தில் நயினார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்ணாமலை அதை பாராட்டி பதிவு போட்டார். கரூரில் பாதுகாப்பு இல்லை என்று சொன்னபோது, கரூரில் உள்ளவர்கள் அன்பானவர்கள். விஜய் வரலாம் என்று அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணிக்கு போட்டியாக அவருடைய அக்கா காந்திமதியை களமிறக்கி உள்ளார். கட்சியின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்துள்ளது, பாமக குடும்ப கட்சியாக மாறிவிட்டதாகவே தோன்றுகிறது. அன்புமணியோ, காந்திமதியோ என யாரை நியமித்தாலும், சாதாரண வன்னிய மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவது கிடையாது. அன்புமணிதான் செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர் என்று பாஜக சொல்லி, தேர்தல் ஆணையமும் அறிவித்துவிட்டது.
அப்போது ராமதாஸ் கட்சி செயலற்றதாகவிட்டது. இந்நிலையில், அந்த கட்சிக்கு யார் நிர்வாகியாக நியமித்தால் என்ன? உண்மையில் காந்திமதியை அன்புமணிக்கு எதிராக களமிறக்கவில்லை. சௌமியா அன்புமணிக்கு எதிராக தான் களமிறக்கியுள்ளார். காரணம் காந்திமதியின் மூத்த மகனுக்கு தான், அன்புமணியின் மகளை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் தான் ராமதாஸ் மோத விடுகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


