கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய், சென்னைக்கு அழைத்து வந்து சந்திப்பது அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.


கரூரில் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் தனியார் விடுதிக்கு அழைத்து விஜய் சந்திக்க உள்ளதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் மில்டன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காதது அந்தக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு தவெக தரப்பில் கொடுக்கப்படும் விளக்கம் என்ன என்றால்? கரூர் செல்ல அனுமதி கிடைக்கவில்லை என்பதுதான். தவெக தரப்பில் இருந்து கரூர் செல்வதற்கு அனுமதி கோரி கடிதம் ஏதும் வழங்கப்பட்டதா? மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்கும்படி டிஜிபி அலுவலகத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டதா? காரணம் அவர்கள் தரப்பில் மனுமதி கேட்கவே கிடையாது.
கரூரில் மண்டபம் தருவதாக கூறிவிட்டு, பின்னர் அச்சம் காரணமாக தரவில்லை என்று சொல்கிறார்கள். எதற்காக மண்டபத்தை கேட்கிறார்கள். கரூர் போனால், அங்கே இறந்தவர்களின் வீடுகளுக்கு விஜய் செல்ல வேண்டியது தானே. நாமக்கல் அருகில் தானே இருக்கிறது. அங்கே தங்கி பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் பார்க்க முடியாதா? ஆனால் விஜய் அதை செய்ய விரும்பவில்லை. விஜய் கேட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள், அமெரிக்க அதிபர் டிரம்ப்பே கேட்க மாட்டார். எனவே அதனை மாற்றி எழுதித்தரும்படி சொன்னார்கள். உண்மையிலேயே காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தால், அந்த கடிதத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.

விஜய் கரூர் செல்வதற்கு சிபிஐ அனுமதி வழங்கவில்லை என்றும் ஒரு தகவலை பரப்புகிறார்கள். அப்படி அவர்கள் அனுமதி தரவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள். விஜய்க்கு ஆதரவாக தமிழ் சமூகத்தில் கருத்துருவாக்கத்தை உருவாக்க ஒரு பெரிய சதி கும்பல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த கும்பலுக்கு இவர்கள் எல்லாம் தூபம் போடுகிறார்கள். இதுவரை விஜயை எதிர்க்கட்சிகள் தான் விமர்சித்துக்கொண்டிருந்தனர். ஆனால் சிபிஐ அனுமதி தரவில்லை என்ற உடன் கட்சிக்காரர்களே ஆத்திரமடைந்துவிட்டனர்.
கட்சியினரே விஜயை எதிர்த்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். அப்படி கேள்வி கேட்பவர்களையும், திமுகவினர் என்று முத்திரை குத்துகிறார்கள். மறுபுறம் புஸ்ஸி ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியும் தான் விஜயை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இருவரும் இருப்பதால்தான் கட்சியில் இருந்து அவ்வப்போது அறிக்கைகளோ, வாழ்த்து செய்திகளோ வருகின்றன.

கட்சிக்கு என்று எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது. அதற்கு எத்தனை பொறுப்பாளர்கள் உள்ளனர் என்கிற விவரம் எல்லாம் புஸ்ஸி ஆனந்த் இருக்கவும் தான் தெரிகிறது. இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த், ஜான் மீது பழியைபோட்டுவிட்டு விஜயை காப்பாற்றி விடலாம் என்று ஒரு குரூப் இறங்கியுள்ளது. உண்மையில் அவர்கள் 2 பேரால் தான் கட்சியே நடந்துகொண்டிருக்கிறது என்கிற உண்மை தெரியவில்லை. அவர்கள் இல்லாவிட்டால் விஜய்க்கு வெளியுலகத்தோடு தொடர்பே கிடையாது. விஜய் எப்போது தனிமையில் இருக்கக்கூடியவர். அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு தான் பேச வேண்டும் என்று அவருடன் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். இப்படிபட்ட ஒரு நபர் அரசியலுக்கு வந்து சாதித்து விடுவார் என்று ஒரு கூட்டம் நம்புகிறது என்றால், அவர்களுக்கு நம்முடைய அனுதாபங்களை தான் தெரிவிக்க முடியும்.

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களை சேர்ந்த மக்கள், இந்த சந்திப்பு நிகழ்வுக்கு வரவில்லை என்று விஜய் அனுப்பிய ஆட்களிடம் சொன்னார்கள். அந்த 4 குடும்பத்தினரிடமும் கிட்டத்தட்ட 2 நாட்கள் சமாதானமாக பேசி, போலியான வாக்குறுதிகளை வழங்கி காத்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் வருவார்கள் என்பது தெரியவில்லை. மேலும், அந்த குடும்பங்களிடம் 20 லட்சம் வாங்கிக் கொண்டதால் வர மறுக்கிறார்கள் என்பதை போன்ற குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறார்கள். இதெல்லாம் விஜய்க்கு தெரியாமல் இருக்காது. ஆனால் வர மறுத்தால், அவர்கள் திமுகவினராக இருப்பார்கள் என்று நினைப்பார்கள்.
மாமல்லபுரம் தனியார் விடுதியில் நடக்கும் இந்த சந்திப்பில் ஒவ்வொரு குடும்பமாக தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அதற்கு பிறகு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள். மாதந்தோறும் ஒரு தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய கட்சியினர் மத்தியில் பெயர் கெட்டுப்போக கூடாது என்பதற்காகவே பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து பேசுகிறார்களே தவிர, உண்மையில் அவர்கள் மீது விஜய்க்கு கவலை கிடையாது.

விஜய் கட்சி தொடங்கியபோது இருந்த மதிப்பும், அவருக்கு இருந்த இடமும் கரூர் சம்பவத்திற்கு பிறகு பாதியாக குறைந்துவிட்டது. விஜய் தரப்பில் இருக்கும் நபர்களே இதை உணர்கிறார்கள். அதனால் எந்த இடத்திற்கு வந்துவிட்டார்கள் என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு தயார். கூட்டணியில் எத்தனை இடங்கள் தருகிறார்களோ, அந்த இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்கிற வேலையை பார்ப்போம் என்கிற நிலைக்கு போய்விட்டார்கள். இந்த இடத்திற்கு விஜய் நகர்வதற்கு காரணம், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கட்சியில் ஆட்கள் கிடையாது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களுக்கு செலவு செய்வதற்கு ஆட்கள் கிடையாது.
குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டும் செலவு செய்வதாக ஒருவர் வந்தார். அவரும் தற்போது விஜய்க்கு மட்டுமே செலவு செய்வதாக பதுங்கிவிட்டார். அவர்கள் நம்பிக் கொண்டிருந்த ஒரு பெரிய தொழிலதிபர், பெரியளவில் நிதி அளிக்க வில்லை. கடைசியாக 20-25 இடங்கள் வரை வாங்குவார்கள். அந்த இடங்களுக்கு மட்டும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். விஜயும் தேர்தலில் போட்டியிடுவார். எடப்பாடி முந்தைய பேச்சுவார்த்தைகளின்போது பணிவாக பேசியதாகவும், தற்போது கால்மேல் போட்டு பேசுவதாகவும் சொல்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


