ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முன்னாள் தவெக செய்தி தொடர்பாளரும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்துக்கு அழைத்து பேச உள்ளார். அதற்கு முன்பாக நாமக்கல்லில் பேச ஏற்பாடு செய்யப்பட்டபோதும், தான் கரூரில் சென்றுதான் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பேன் என்று விஜய் உறுதியாக இருந்ததாக சொல்கிறார்கள். பிறகு எதற்காக மாமல்லபுரத்துக்கு அழைத்து சந்திக்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் விஜயை குறை சொல்லவில்லை. அவர்களை நேரில் சென்று சந்திப்பதை எது தடுக்கிறது. அனிதா, ஸ்னோலின் வீடுகளுக்கு எவ்வித முன்னறிவிப்பு இன்றியும் விஜய் சென்றார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கூட அவர் அருகில் சென்ற பிறகு தான் ஊடகங்களுக்கு அவர் வருகிறார் என்கிற தகவல் தெரியும்.
விஜய், கட்சி நிகழ்ச்சியோ, தனிப்பட்ட நிகழ்ச்சியோ யாரிடமும் சொல்லாமல் போக முடியும். ஆனால், அவரால் கரூர் செல்ல முடியாதது ஏன்? விஜய், தனது கட்சியினரை அரசியல் மயப்படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் விஜய் வருகிறபோது அவர்கள் அருகில் போகக்கூடாது என்று தள்ளி நிற்பார்கள். கரூர் சம்பவத்திற்கு விஜய் பொறுப்பு உள்ளதா? இல்லையா? என்பதைவிட எந்த கட்சிக்காரர்களும், இப்படி பாதிக்கப்பட்டவர்களை வீட்டிற்கு அழைத்து பேசியது கிடையாது. சொந்த கட்சிக்கார்களின் கேள்விகளுக்கு விஜய் என்ன பதில் சொல்ல போகிறார்.

கரூர் மண்டபத்தில் சென்று கேட்டார்களாம். ஆனால் அனுமதி தரவில்லை என்று சில பத்திரிகையாளர் விஜயை காப்பாற்றும் வேலையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். விஜய் மீது இருக்கும் விமர்சனம், விஜய் அந்த இடத்தை விட்டு வந்திருக்கக்கூடாது என்பதுதான். பாதிக்கப்பட்ட 40 குடும்பங்கள் விஜயை பார்க்க வருவதில் பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டனர். ஆனால் சுற்றி இருக்கும் மக்கள் என்ன நினைப்பார்கள். விஜயை வெளிக்கட்சியினர் விமர்சிக்கவில்லை. சொந்த கட்சியினர்தான் விமர்சிக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியினரை எப்படி கட்டுப்படுத்துகிறார்கள் என்று பார்க்கிறோம். அதேபோல் நம்முடைய கட்சியினரையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்க வேண்டும். உண்மையில் விஜய் கரூருக்கு போயிருந்தால் அடுத்த அடுத்த கூட்டங்களை தொடர்ந்திருக்கலாம். பிரச்சாரத்திற்கு எந்த தடையும் கிடையாது. ஆனால் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா இல்லை என்று வீட்டிற்குள்ளே முடங்கி கிடப்பது விமர்சனத்தை ஏற்படுத்துகிறது.

மாமல்லபுரத்தில் 50 அறைகள் புக் செய்து, அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களை விஜய் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அருண்ராஜ் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த போது விஜய் நேரில் வருவார் என்று தான் சொன்னார். தவெகவில் முடிவு எடுக்கும் இடத்தில் யாரும் இல்லை. ஆதவ், ஜான் என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக முடிவுகளை எடுத்து செயல்படுத்துகிறார்கள். விஜய் எல்லோரையும் கலந்து ஆலோசித்து சுயமாக முடிவு எடுக்காதது தான் பிரச்சினையாகும். கட்சியில் இருப்பவர்கள் யாருடைய பேச்சை கேட்டு செயல்பட வேண்டும் என்று தெரியாத நிலை இருக்கிறது. தவெகவில் இருந்து ஊடகங்களுக்கு ஜான் மற்றும் புஸ்ஸி ஆனந்த் தகவல்களை கசிய விடுவார்கள். ஆனால் அது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கே தெரிவிக்க மாட்டார்கள். எனக்கு கிடைத்த தகவல்படி கட்சியில் உள்ளவர்கள் நாம் கருருக்கு போக வேண்டும் என்று சொல்லியுள்ளனர். ஆனால் ஜான் அதை மறுத்துவிட்டார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு புஸ்ஸி ஆனந்த் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிவிட்டார். இனி பிரச்சார பயணத்திற்கு விஜயை அழைத்து செல்வது இல்லை. இந்த வழக்கு மதியழகன் மீது பாய்ந்தது. காரணம் முடிவு எடுக்கிற இடத்திலோ, பிரச்சார வாகனத்திலோ மதியழகன் கிடையாது. எதுவுமே செய்யாமல் இன்றைக்கு மதியழகன் ஏ1 ஆக மாறிவிட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த பவுன்ராஜ், அதற்கு அடுத்தபடியாக உள்ள புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் மாட்டியுள்ளனர். ஆனால் இந்த கூட்டத்திற்கு திட்டம் போட்ட ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா தப்பிவிட்டனர். நாளைக்கு நடைபெறும் கூட்டத்தில் அசம்பாவிதம் நடந்தால் புஸ்ஸி ஆனந்த் யோசிப்பார். எனவே பழையபடி அறிக்கைகள் கொடுங்கள். டிவிட்டரில் இயங்குங்கள். விர்ச்சுவல் வாரியர்ஸ் பணியை தொடரட்டும். ஆனால் பிரச்சார கூட்டங்களுக்கு தான்னல் அழைத்துச் செல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்.

சிபிஐ விசாரணையில் புஸ்ஸி ஆனந்த், மதியழகன் பெயர் இருந்தால் அதை சட்டப்படி நீக்க முயற்சிப்பார்கள். எனவே உடனடியாக விஜய் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஹெலிகாப்டர் வாங்கும் செய்தியை தவெகவினரே மறுத்துவிட்டார்கள். இனி பிரச்சார கூட்டங்கள் ஜனவரி மாதம் ஜனநாயகன் வெளியாகும் வரை நடைபெற போவது இல்லை. அதற்கு பிறகு நேரடியாக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதுதான் திட்டமாகும். புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் எந்த கூட்டங்களையும் நடத்த முடியாது. அங்கே உள்ள செயல்வீரர் அவர்தான். அவருக்கு தான் யாரிடம் என்ன வேலை வாங்க முடியும் என்பது தெரியும். அவர் இல்லாமல் எதுவும் நடக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


