திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல் தொடங்கப்பட்ட தேமுதிக இன்றும் வலிமையாக இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தற்போது தமிழ்நாடு, மேருற்கு வங்க மாநிலங்களுக்கு SIR வரப்போகிறது. மேற்கு வங்கத்தில் SIR நடவடிக்கைகளுக்கு எதிராக அம்மாநில அரசு குரல் கொடுக்கிறது. இந்த பணிகளுக்கு எப்படி அரசுப் பணியாளர்களை அனுப்புவார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாடு அரசு, மேற்குவங்கத்தை பின்பற்றி எதிர்க்கலாம். உச்சநீதிமன்றம் 10 ஆவணங்களுடன் ஆதாரையும் ஒரு ஆவணமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் ஆதாருடன், வேறு ஒரு ஆவணத்தையும் தர வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் அடையாள அட்டைகளை தான் பார்க்க முடியும். குடியுரிமையை பார்க்க முடியாது. இவ்வளவு பிரச்சினைகள் போகிறபோது, மேற்குவங்கத்தில் கொந்தளிப்பு ஏற்படப் போகிறது. அதில் தமிழ்நாடு அரசும் சேர்ந்தால் அது பாஜக எதிர்ப்பாக தான் போய் முடியும். அப்போது அதிமுக அதை மௌனமாக வேடிக்கைதான் பார்க்க வேண்டி வரும். அதைதான் திருமாவளவன் சொல்கிறார். பாஜக செய்கிற தவறுகளுக்கான பொறுப்பு அதிமுக தலையில் தான் விடியும்.

பாஜக தேர்தல் பார்வையாளர், அன்புமணியுடன் நேரில் பேசியதாகவும், அன்புமணி கூடுதல் இடங்களை கேட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதற்கு டெல்லி மேலிடத்தில் பேசுவதாக பாஜக பொறுப்பாளர் பதில் அளித்துள்ளார். அதேவேளையில் மருத்துவர் ராமதாஸ், தனது நெருங்கிய நண்பரிடம், பாஜக மேலிடம் கூட்டணி தொடர்பாக அன்புமணியிடம் பேசியுள்ளது. தன்னிடம் அல்லவா பேசி இருக்க வேண்டும் என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார். அன்புமணி சொன்னதாக, எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் திமுக எம்.பி. ஒருவர் தான். அவர் புதுச்சேரி முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார் என்று சொல்கிறார்கள்.
எப்படியாக இருந்தாலும் தமிழ்நாடு அரசியலில் ஏற்படுகிற பல குழப்பங்களுக்கு டெல்லிதான் காரணமாகும். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். விஜய்க்கு சினிமா கவர்ச்சி இருக்கிறது. இளைஞர்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று நினைக்கின்றனர். இதே கவர்ச்சி விஜயகாந்துக்கும் இருந்தது. 2006 தேர்தலில் அவருக்கு 8 சதவீதம் வாக்குகள் தான் விழுந்தன.அதே நிலைதான் விஜய்க்கு இருக்கும் என்பது என்னுடைய ஆரம்ப கட்ட கணிப்பாகும்.

ஆர்.பி.உதயகுமார், அதிமுக கூட்டணிக்கு வருவது தான் விஜய்க்கு நல்லது. இல்லாவிட்டால் தவெகவை அழித்து விடுவார்கள் என்று சொல்கிறார். தவெக அழிவது குறித்து அதிமுக ஏன் கவலைப்படுகிறது என்று தெரியாது. விஜய் வந்தால் வெற்றி என்றால், அதிமுக அவ்வளவு பலவீனமாக இருக்கிறதா? அதிமுக பலவீனமாக இருப்பதாக சொல்வதுடன், பாஜகவும் பலவீனமாக இருப்பதாக அல்லவா சொல்கிறீர்கள். நயினார் கூட்டங்களுக்கு பெரிய அளவில் மக்கள் கூட்டம் வருவதில்லை. ஊடக வெளிச்சமும் குறைவாக இல்லை. எடப்பாடி கூட்டத்திற்கு வந்த அளவுக்கு, நயினாருக்கு வரவில்லை. ஒட்டுமொத்தத்தில் அதிமுக, பாஜக தோல்வி பயத்தில் தான் இருக்கின்றன. அதை விஜய் வந்துதான் சரி செய்வார் என்கிற பிம்பத்தை இவர்கள் தான் உருவாக்குகிறார்கள். விஜய் வருவதால் மட்டும் வெற்றி கிடைத்துவிடுமா?

விஜய், ஒரு ஜென் மனநிலையில் உள்ளார். யார் என்ன சொன்னாலும், அதற்கு பதில் சொல்வது கிடையாது. இவர்களை வைத்து அதிமுக – பாஜக என்ன கணக்கு போட்டாலும் அது கடைசியில் தலைகீழாகவும் மாற வாய்ப்பு உள்ளது. விஜய்க்கு, எச்சரிக்கை விடுக்க ஆர்.பி.உதயகுமார் யார் ? விஜய் தனியாக நின்றால் கூடு சில இடங்களில் வெற்றி பெற்றால் அந்த கட்சியை எப்படி அழிக்க முடியும். 2006 தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தலாகும். அப்போது விஜயகாந்த் புதிய கட்சியை தொடங்குகிறார். அது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தான் போகும். ஜெயலலிதாவின் எதிர்ப்பு வாக்குகளை தான் விஜயகாந்த் பிரிப்பார் என்று சொன்னார்கள்.
தேமுதிக ஒரு இடத்தில் வென்றதுடன், குறிப்பிடத்தக்க வாக்குகளையும் பெற்றது. இன்று வரை தேமுதிக இருக்கிறது அல்லவா?அதன்பிறகு திமுக இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது. விஜயகாந்த் மரணம் என பல கட்டங்களுக்கு பிறகும் தேமுதிக இருக்கிறது. பிரேமலதா பொதுச்செயலாளராக இருக்கிறார். தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் அல்லவா?

எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் முதல்வர் பதவியை விட்டுத்தர மாட்டார். அதேபோல் விஜயும் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுப்பார் என்று நாம் நினைக்கிறோம். ஒருவேளை அவர் விட்டுத்தரக்கூட தயார் ஆகலாம். பாஜக, காங்கிரஸ் கட்சிக்கும் முதல்வராகும் கனவு இல்லை. ஒட்டுமொத்தமாக விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்ளாத கட்சி திமுக, அதிமுக, நாதக ஆகியவை தான். அப்பாது பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானலும் கூட்டணி சேருவார்கள். அப்போது விஜயுடனும் கூட்டணி சேரலாம். பாஜக 60 இடங்கள் கேட்கிறபோது, அதிமுக கொடுக்காது. எனவே பாஜக மாற்று ஏற்பாடு செய்யும். பொதுவாகவே தேசிய கட்சிகளில் பல கோஷ்டிகள் இருக்கும். டெல்லிக்கு போன பிறகு எல்லோரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மாற்றுக்கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்தால் கட்சியை விட்டே நீக்கிவிடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


