spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் கரூர் செல்லாததன் காரணம் இது தான்! எம்.ஜி.ஆர்-க்கு செய்ததை திமுக மறக்கக்கூடாது! எச்சரிக்கும் பத்திரிகையாளர்...

விஜய் கரூர் செல்லாததன் காரணம் இது தான்! எம்.ஜி.ஆர்-க்கு செய்ததை திமுக மறக்கக்கூடாது! எச்சரிக்கும் பத்திரிகையாளர் மணி!

-

- Advertisement -

தன்னுடைய மனத்தடை, ஆளுமை சிக்கல் அரசியலுக்கு அறவே ஆகாது என்பதை விஜய் என்றைக்கு புரிந்துகொள்வாரோ அன்றைக்கு தான் அவர் திருந்துவார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசியுள்ளதுது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- பாதிக்கப்பட்ட குடும்பங்களை எப்படியோ மாமல்லபுரத்தில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார் விஜய். அவர் கரூர் செல்வதில் நேரடி சிக்கல்கள் இருப்பது புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தபோதும் அவர் கரூருக்கு சென்றிருக்க வேண்டும். இது ஆரோக்கியமற்ற போக்கு ஆகும். அடிப்படையில் ஒரு அரசியல் கட்சி என்பது மக்கள் இயக்கமாகும். மக்களின் பங்களிப்பு அதில் இருக்க வேண்டும். மக்கள் பங்களிப்பு இன்றி அரசியல் கட்சி நடத்துவதும், ஊடகங்களை சந்திக்காமல் ஒருவர் இருப்பதும் ஏற்புடையது அல்ல.

தவெக முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் இயங்கி, அரசியல் செய்வோம் என்பது மிகவும் தவறான அணுகு முறையாகும். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சமூக வலைதள பிரிவுகளுக்கு ஏராளமாக செலவு செய்கிறபோதும், அவர்கள் பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய ஊடகங்களை முதன்மையாக பயன்படுத்துகிறார்கள். அப்படி பிரதான ஊடங்களை புறந்தள்ளிவிட்டு, நீங்கள் சமூக வலைதளங்களில் இயங்கினால் காணாமல் போவீர்கள். துரதிர்ஷ்ட வசமாக விஜய் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்.

விஜய்க்கு எந்த அளவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பது, தேர்தலில் தெரிந்துவிடும். அதேநேரம் விர்ச்சுவல் வாரியர்களை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் கட்சி நிலைத்திருக்க முடியாது. கரூரில் அரசின் நிர்பந்தம் காரணமாக கல்யாண மண்டபம் கிடைக்கவில்லை. காலையில் அட்வான்ஸ் வாங்கினால் மாலையில் திருப்பி கொடுக்கிறார்கள் என்று தவெக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பேட்டி அளிக்கின்றனர்.அப்படி இருந்தாலும் அதையும் மீறி நீங்கள் மக்கள் சந்திப்பை நடத்தி இருக்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு காலத்தில் அடக்குமுறைக்கு ஆளானவை தான். திமுக வளர்கிறபோது காங்கிரசின் அடக்குமுறைக்கு ஆளானது. அதிமுக வளர்கிறபோது திமுகவின் அடக்குமுறைக்கு ஆளானது.

தேமுதிக, அதிமுகவின் அடக்குமுறைக்கு ஆளாகியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து பேசுவது என்பது வினோதமானது. கரூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அதிமுக, பாஜகவினருக்கு சொந்தமான ஏராளமான மண்டபங்களும், கல்லூரிகளும் உள்ளன. விஜய்க்கு, ஆதரவாக இரு கட்சிகளும் இருக்கும் நிலையில், அவர் நினைத்திருந்தால் மண்டபத்தை ஏற்பாடு செய்திருக்கலாம். எனவே அவர்கள் மண்டபம் கிடைக்க வில்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல.

சிபிஐ விசாரிப்பதால், விஜய் கரூருக்கு செல்வதில் எந்த சட்டத் தடைகளும் கிடையாது. வசதியாக வளைத்து பேசுகிறார்கள். இந்தியா ஒரு சுதந்திரமான நாடு. இந்திய குடிமகனான விஜய் எங்கே வேண்டும் என்றாலும் போகலாம். விஜய், கரூர் செல்லாததற்கு அடிப்படை காரணம் மனத்தடை. தன்னுடைய மனத்தடை, ஆளுமை சிக்கல் அரசியலுக்கு அறவே ஆகாது என்பதை விஜய் என்றைக்கு புரிந்துகொள்வாரோ அன்றைக்கு அவர் திருந்துவார். அல்லது அரசியலை விட்டு வெளியேறுவார். இந்த மனத்தடைகளோடு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அவரால் செயல்பட முடியாது.

திமுக, பாஜக உள்ளிட்ட மற்ற பெரிய கட்சிகள் விஜய்க்கு தொல்லை கொடுக்க வேண்டிய கட்டாயமே இல்லை. அவரை அப்படியே விட்டு விட்டால் கூட, அவருடைய இயல்பு அரசியல் இயல்புக்கு மாறாக உள்ளது. என்னை பொருத்தவரை விஜயின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது திமுக ஏற்படுத்தக்கூடிய தடைகளோ, சட்ட சிக்கல்களோ அல்ல. விஜயினுடைய ஆளுமைதான் அவர் அரசியல்வாதியாக பரிணமிப்பதற்கு இருக்கும் முதல் தடையாகும்.

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

தன்னுடைய ரசிகர்கள், தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்ப விஜய் முடிவுகளை எடுப்பதாக தோன்றவில்லை. தான் நினைப்பது ஒன்றுதான் சரி என விஜய் நினைக்கிறார். அப்படிபட்ட ஒரு மனநிலையில் ஒருவர் அரசியலில் இருக்க முடியாது. அரசின் நெருக்கடிகள், சமூக வலைதளங்களில் தொடுக்கப்படும் விமர்சனங்கள் போன்றவை எல்லாம் பிரச்சினைகள் கிடையாது. ஆனால் அவருடைய உளவியல் பகுப்பாய்வு, அரசியலுக்கு அறவே பொருந்தாது. இத்தனை சிக்கல்கள், இவ்வளவு பலவீனங்களை மீறியும் விஜய்க்கு இருக்கும் மக்கள் ஆதரவு ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் அரசியலில் நீடிக்கும்போது ஏற்பட போகிற பாதிப்புகளை கணிப்பது கடினமாக இருக்கிறது.

நாளைக்கு விஜய் முதலமைச்சரானால் அனைத்து தரப்பினருக்கும் அவர் தான் முதலமைச்சர். அனைவருக்கும் நீங்கள்தான் பாதுகாப்பு. நான் திமுகவுக்கு சொல்வது இதுதான். விஜயின் இயல்பே அவர் அரசியலில் வளர்வதற்கு மிகப்பெரிய எதிரியாக உள்ளது. தன்னுடைய இயல்பை விஜய் மாற்றிக்கொள்ளாத வரை உங்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால் விஜய்க்கு எதிராக சிக்கல்களை ஏற்படுத்தினால், அவருடைய செயல்பாடுகள்  உங்களுக்கு எதிராக திரும்பி விடும். விஜயை அப்படியே விட்டுவிட்டால் அவரால் அரசியலில் நீண்ட காலம் இருக்க முடியாது. எம்ஜிஆருக்கு செய்த தவறை, விஜய்க்கு செய்யக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ