2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை 40 தொகுதிகளில் தோற்கடித்த சசிகலா, இம்முறை 80 தொகுதிகளில் தோற்கடிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ் மற்றும் சசிகலா விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். வழக்கமாக ஓபிஎஸ் ஜெயலலிதா மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார். இம்முறை தன்னுடைய வீட்டில் இருந்தே மரியாதை செலுத்தியுள்ளார். அவர் திமுக ஆட்சியை புகழ்ந்து பேசியதால், ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும்போது கட்சியினர் விமர்சிக்க வாய்ப்புள்ளது. ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை அவர் மகன் மீது மாலத்தீவுக்கு சரக்கு விமானத்தில் ஏராளமான பணத்தை எடுத்துச்சென்றது தொடர்பான வழக்கு உள்ளிட்ட 47 வழக்குகள் உள்ளன. இதனை பாஜக எப்படி கையாள போகிறது என்கிற அச்சம் அவருக்கு உள்ளது.
அதேவேளையில் ஓபிஎஸ் சசிகலா உடன் போய் சேர முடியாது. தேவர் ஜெயந்தி அன்று ஒபிஎஸ் சசிகலா உடன் பேசியதால், டிடிவி தினகரன் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஓபி ரவீந்திரநாத், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் நெருங்கிய நண்பராகிவிட்டார். மற்றொரு மகன் ஜெயபிரதீப் தொழில்களை கவனித்து வருகிறார். அதனால் தனது மகன்களின் கருத்தைத பொறுத்தே அவர் முடிவுகளை எடுப்பார். தற்போதைக்கு திமுக செய்த சில உதவிகளுக்காக அவர்களோடு ஓபிஎஸ் பேசிக் கொண்டிருக்கிறார். இது நிரந்தரமாக இருக்குமா? என்பது தெரியாது.

ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கி நடத்துகிற திட்டம் இல்லை. ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆர் கழகம் என்று கட்சி தொடங்கியது போன்று, அவர் ஒரு கழகத்தை தொடங்கலாம். திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஓபிஎஸ்க்கு சபாநாயகர் பதவி வழங்கவும் தயாராக உள்ளது. பாஷ்யம் பில்டர்ஸ் நிறுவனத்தின் அபினேஷ்க்கும், ஓபிஎஸ்க்கும் நிறைய பிரச்சினைகள் இருந்தன. ஓபிஎஸ்க்கு தர வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை அபினேஷ் ஏமாற்றினார். அவற்றை எல்லாம் திமுக தான் பேசி தீர்த்து வைத்தது. அந்த நன்றிக்கடனுக்காக தான் ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால் ஓபிஎஸ் மீதான வழக்குகளை மத்திய அரசு கையில் எடுத்தால், அவர் திமுக ஆதரவு நிலைப்பாட்டை தூக்கிப் போட்டு விடுவார்.
அண்ணாமலை கூட தான் சேர்த்த ரூ.5000 கோடியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் பாஜகவில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் என்றைக்கோ தனிக்கட்சி தொடங்கியிருப்பார். மற்றவர்களின் பலவீனத்தை வைத்துதான் பாஜக எல்லோரையும் மிரட்டுகிறது. முன்பு சில ஊடக பேட்டிகளில் ஓபிஎஸ்க்கு, திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தேன். அது ஒரு அனுமானம் தான். அவர் எங்கு செல்வார் என்கிற கேள்வி எழுந்தபோது, திமுகவுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தேன்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சசிகலா, பசும்பொன்னில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி 40 தொகுதிகளில் அமமுகவால் தோற்றார். அமமுக அன்றைக்கு சசிகலாவால் தொடங்கப்பட்ட கட்சியாகும். அதேபோல் இம்முறை எடப்பாடி பழனிசாமியை 80 தொகுதிகளில் தோற்கடிப்பதற்கான வியூகத்தை வகுக்கிறார். அதிமுகவில் முதலமைச்சர் ஆனவர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர்கள். மற்றபடி ஜானகி, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் நியமிக்கப்பட்டவர்கள் ஆவர். ஓபிஎஸ், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர். எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர். தன்னை அதிமுகவில் சேர்க்கும்படி சசிகலா கேட்கிறபோது, எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை.
சசிகலாவிடம் ரூ.5.5 லட்சம் கோடி ரூபாய் பணம் உள்ளது. அவருக்கு எல்லா அரசியல் தலைவர்களையும் தெரியும். அவருக்கு என்று ஒரு எதிர்காலம் இருப்பதை பாஜக இதுவரை உருவாக்கித் தரவில்லை. பாஜக தரப்பில் இருந்து ஒரு சிக்னல் கொடுத்தால் போதும் அதிமுகவை தன்னுடைய ஒட்டுமொத்த கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடுவார். எனவே இம்முறை சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோற்க வேண்டும். அப்படி தோற்ற உடன் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார். அதற்கான களப்பணி தான் பசும்பொன்னில் கூட்டுகிற பொதுக்கூட்டம், மாநாடு போன்றவை.

அதிமுக வாக்கு வங்கி என்பது உடைகிறது. அதை பெறுவதற்கான பலம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அவர் கட்சியை கொங்கு மண்டலக் கட்சியாக சுருக்கிவிட்டார். அதை தாண்டி உள்ள முக்குலத்தோர், மற்ற சமுதாய மக்களின் வாக்குகளை பெறுவதில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் உள்ளது. அந்த வாக்குகள் எல்லாம் அதிமுக வாக்குகளாக இல்லை. உடைகிறது. எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவதற்கு நிறைய வேலைகளை சசிகலா செய்து கொண்டிருக்கிறார். டிடிவி தினகரனுக்கு விழுந்த வாக்குகள் என்பது, சசிகலாவுக்காக விழுந்ததாகும். முக்குலத்தோர் வாக்குகள் மூன்றாக பிரிகிறது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களை சேர்த்து 80 தொகுதிகளை சசிகலா குறிவைக்கிறார். பாஜகவை பொருத்தவரை, அதிமுக எந்த அளவுக்கு பிளவு படுகிறதோ, அந்த அளவுக்கு அதிமுக வாக்குகளை பாஜக கைப்பற்றி வளரும். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளை பாஜக ரசிக்கும். அதிமுகவில் பிளவுகள் ஏற்படுத்தும் வேலையை பாஜக இன்னும் செய்து கொண்டிருக்கிறது.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக வாங்கிய 18 சதவீதம் வாக்குகளில் கிட்டத்தட்ட 12 சதவீதம் அதிமுக வாக்குகளாகும்.தமிழ்நாட்டில் பாஜக முன்பு இருந்ததை விட வளர்ந்துவிட்டது. பாஜகவை பொறுத்தவரை இம்முறை 5 முதல் 10 எம்எல்ஏ-க்களாவது பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். விஜய் முழுக்க முழுக்க திமுகவை எதிர்க்க காரணம் அவருக்கு பாஜக கொடுத்த அஜெண்டா ஆகும். விஜய், திமுக வாக்குகளை கபளீகரம் செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கான பணி. இப்படிதான் அரசியலில் ஒவ்வொரு காயாக பாஜக நகர்த்தி வருகிறது. அவர்களால் இந்த மண்ணில் நேரடியாக அரசியல் செய்ய முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் இன்னும் வளரவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


