ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தேவர் சிலைக்கு கூட்டாக மரியாதை செலுத்தியதன் மூலம் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் தேவை என்பதை வெளிப்படுத்தி உள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதன் பின்னணி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். அதிமுகவில் மோதல் வெளிப்படையாக தெரிகிறது. செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கெடு விதித்தார். அதற்கு பதிலடியாக செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அடுத்தபடியாக செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவார்.
அதிமுகவின் பல்வேறு உரிமைகளுக்காக வழக்கு நடத்தி வருபவர் ஓபிஎஸ். அவருடன் ஒரே வாகனத்தில் எப்படி செங்கோட்டையன் செல்ல முடியும்? என்கிற கேள்வி எழும். அப்படி எழாவிட்டாலும் உதயகுமார் தூண்டி விடுவார். அதற்கு காரணம் முக்குலத்தோர் சமுதாயத்தின் பிரதிநிதியாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதன் காரணமாகவே குருபூஜைக்கு வரும் எடப்பாடியை வரவேற்க ரத்த கையெழுத்து வேண்டும் என்று உதயகுமார் சொன்னார். அத்தகைய வார்ததை பிரயோகம் எதற்காக? ஒன்று தான் எடப்பாடியுடன் நெருக்கமானவர் என்பதை காட்டிக்கொள்ள விரும்புகிறார். மற்றொன்று தேவர் சமுதாயத்தின் பிரதிநிதியாக தான் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

எனது வீரத்திருமகன் நூலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து ஒப்பிட்டு எழுதியுள்ளேன். குருபூஜையின் தொடக்கம் என்பது, மன்னர்களுக்கு கூட கிடைக்காத ஒரு பெருவாழ்வை தேவர் அடைந்தார். அவர் தற்போது ஆன்மீகவாதியாக ஆகிவிட்டார் என்று சொல்லி, வள்ளலாரின் மந்திரத்தை ஓதி தான் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது. தேவரின் தந்தை, தாத்தா போன்றவர்கள் கமுதி கோட்டையின் காவலர்கள். ஆனால் சமரச சன்மார்க்க முறைப்படி அடக்கம் நடைபெற்றது. கிட்டதட்ட 14 வருடங்கள் வள்ளலார் மரபுபடி நடத்திவிட்டு, பின்னர் குருபூஜை நடத்துகிற பொறுப்பு தற்போதைய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேவருக்கு ஜெயலலிதா தங்கக் கவசம் வழங்கியது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பசும்பொன் தேவரின் இறுதி ஊர்வலத்தில் இரு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். அதன் காரணமாக முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஆதரவு அண்ணா, எம்ஜிஆர் என்று மாறியது. அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அது எம்ஜிஆர் ஆதரவாக மாறியது. பெரும்பாலும் முக்குலத்தோர் ஆதரவு அதிமுகவுக்கு தான்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அதிமுக கடந்த முறை அந்த வாக்கு வங்கியை இழந்தது. அந்த மக்களுக்கு டி.என்.டி என்று இருந்தால் பழங்குடியினருக்கான சலுகைகள் கிடைத்திருக்கும். ஆனால் அதை தற்போது டி.என்.சி ஆக மாற்றிவிட்டார்கள். அதன் காரணமாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அவர்கள் உள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கைரேகை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு சமுதாயத்தினர் டி.என்.டி பிரிவில் இருந்தனர். அதன் பிறகு பல்வேறு மாநிலங்களில் அது டி.என்.சி ஆக மாற்றிவிட்டனர். தற்போது தேசிய அளவில் டி.என்.டி ஆக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது சுப்பிரமணிய சுவாமி எழுப்பிய கோரிக்கையாகும். இவற்றை எல்லாம் சேர்த்து அரசியல் செய்து, இழந்த வாக்கு வங்கியை பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார். ஆனால் அவர் கூட்டணி விவகாரத்தில் பெரிய தவறு செய்துவிட்டார். விஜய் வருகைக்காக அவர் எதிர்பார்த்து காத்திருந்தது, அதிமுகவினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது நிர்மல்குமார் தவெக எந்த கூட்டணிக்கும் செல்லாது என்று சொன்ன உடன் அது ஏமாற்றமாகவும், கோபமாகவும் மாறிவிட்டது.

இந்த சூழ்நிலையில், மதுரையில் தேவர் குருபூஜையில் செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதற்கு முன்பாக செங்கோட்டையன், அவர்கள் இருவரையும் சந்தித்துள்ளார். ஆனால் அதுதொடர்பான செய்திகள் வெளியானபோது மறுப்பு தெரிவித்தார். தற்போது அது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. மூவரும் ஒன்றாக சேர்ந்து மரியாதை செலுத்தியது என்பது அதிமுகவில் இன்னமும் ஒருங்கிணைப்பு தேவை என்பதைதான் காட்டுகிறது.
அந்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் திணறுகிறார். அப்போது இந்த நிகழ்வு என்பது அடுத்த நிகழ்விற்கான அஸ்திவாரமாகும். மூவரும் இணைந்துள்ளது என்பது அதிமுகவுக்கு பின்னடைவு என்று பார்ப்பதைவிட, ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று பார்க்க வேண்டும். விஜய், அதிமுக கூட்டணிக்கு வரப் போவது கிடையாது. அது தெளிவாக தெரிகிறது.

அமித்ஷா, தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியை விரிவாக்கம் செய்யப் போகிறோம். ஆனால் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளிடமும் கருத்துக் கேட்போம் என்று சொன்னார். தமிழ்நாட்டின் பிரச்சினை என்பது எஸ்.ஐ.ஆர்.. இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று உள்ளது. வாக்காளர் பட்டியலை முடக்கம் செய்துவிட்டு, கூட்டம் நடத்துவது கண்துடைப்பிற்காக தான். இந்த விவகாரத்தில் பாஜக – அதிமுக ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. மற்ற கட்சிகள் எல்லாம் திமுகவின் நிலைப்பாட்டில் இருக்கின்றன. முதலமைச்சர் கூட்டுகிற கூட்டத்திற்கு ராமதாசுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப் பட்டிருக்கிறது. அன்புமணிக்கும் அழைப்பு விடுக்க வேண்டிய நிலையில், அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் விஜய் தரப்புக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என்று 4 அணிகள் உள்ள நிலையில், இந்த இடத்தில் அரசியல் செய்வதற்கு குருபூஜை பயனுள்ளதாக இருக்கிறது. டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக மரியாதை செலுத்துகிறபோது கரூரை மையம் கொண்டிருந்த அரசியல், பசும்பொன்னுக்கு திரும்புகிறது. இது எதை நோக்கி செல்கிறது என்றால் அதிமுகவில் ஒரு அதிரடி மாற்றம் ஏற்படப் போகிறது. எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவார். அப்படி அவர் செய்யாவிட்டால் எடப்பாடி பழனிசாமி பலவீனமானவர் என்றாகிவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


