Homeசெய்திகள்கட்டுரைஜனாதிபதி 14 கேள்வி! உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? விளக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

ஜனாதிபதி 14 கேள்வி! உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? விளக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

-

- Advertisement -

ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்யப்பட்ட விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, அதனை ரத்து செய்துவிட வேண்டும் என்று மத்திய அரசு எண்ணுவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதி முர்மு விளக்கம் கோரியுள்ளதன் பின்னணி குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விளக்கம் கோரி ஜனாதிபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். தற்போது வரை உச்சநீதிமன்ற உத்தரவு நடை முறையில் தான் உள்ளது, அந்த உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. முர்மு, கேள்வி எழுப்பியதால் அந்த தீர்ப்புக்கு எந்தவித இடைஞ்சலும் கிடையாது. தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கோரியுள்ளது தார்மிக ரீதியில் தவறானது என்று நினைக்கிறேன். ஒரு ஆளுநர் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை எதற்காக வழங்கப்பட்டதோ அதற்காக பயன்படுத்தாமல், ஏதேச்சதிகாரம் தனக்கு உள்ளது என்று நினைத்து பணிபுரிகிற போது அவருக்கு தேவையான நேரத்தில் உச்சநீதிமன்றம் கொட்டு வைத்துள்ளது.

ஆர்.என்.ரவியை பொருத்தமட்டில் இரு விதமான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார். நான் இத்தனை நாட்களாக மசோதாக்களை கிடப்பில் வைத்திருக்கிறேன் என்றாலே அதை நான் நிராகரித்துவிட்டேன் என்று தான் அர்த்தம் என்று புது வியாக்யானம்  கொடுத்தார். அப்படிபட்ட சூழலில் துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வேலைகள் அனைத்தும் தடை படுவதால், தமிழக அரசு 10 மசோதாக்களையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டன. இத்தனை நாட்கள் தாமதித்து கொண்டே இருந்த காரணத்தால்தான் உச்சநீதிமன்றம் தனக்கு அளிக்கப்பட்ட 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.

தற்போது ஜனாதிபதி முர்மு கேட்பது என்பது நீங்கள் கால வரம்பு நிர்ணயிக்க முடியுமா? அடிப்படையாக அவர்களது கேள்விகளில் 12வது கேள்வி மட்டும்தான், அவர்கள் உண்மையாக நடவடிக்கை விரும்புவது. இதை நீங்கள் முடிவு எடுக்காமல் 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு அனுப்ப முடியுமா? என்பது தான். அப்படி உச்சநீதிமன்றம் அனுமதித்தால் இந்த தீர்ப்பை நல் அண்ட் வாய்ட் ஆக்கிவிடலாம் என்றுதான் கருதுகிறார்கள். இதில் எல்லோரும் கவலைப்படுகிற விஷயம் என்ன என்றால்? எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு மாநில ஆளுநர் தன்னுடைய அதிகார வரம்பை மீறி செயல்படக்கூடாது. ஆனால் அவர் அப்படி தான் செயல்பட்டுக் கொண்டிருந்தார். வேறு வழியின்றி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. இன்று அந்த தீர்ப்பை எப்படி ஒத்திப்போடலாம் அல்லது ரத்து செய்துவிடலாம் என்று ஒன்றிய அரசு முயல்வதன் வாயிலாக அவர்கள் நாட்டு மக்களுக்கு சொல்வது என்ன என்றால் ஆளுநர் எப்படி அதிகார வரம்பை மீறி செயல்பட்டாலும் நாங்கள் அவர்கள் பக்கம்தான் நிற்போம் என்பதுதான்.

குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள். அப்படி பிறப்பிக்க முடியும். இந்திரா காந்தி மறைவின்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது, அந்த காவல் நிலையத்தில் உள்ள தலைமை காவலர் ஆவார். பெரிய தலைவர் மறைவுக்கு உயர் அதிகாரி வந்து எப்.ஐ.ஆர் போடக்கூடாதா? என்று கேட்டால், அவர் அவர் வேலையை அவர் அவர் தான் செய்வார்கள். இன்றைய சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் ஆட்சிக்கு எந்த இடைஞ்சல் தர முடியுமோ, அதனை தரட்டும் என்று வேடிக்கை பார்க்கும் சூழலில்தான் மத்திய அரசு உள்ளது. அதை ஊக்குவிக்கவும் செய்கிறது. இந்த சூழலில் உச்சநீதிமன்றம் எடுத்துள்ள முடிவு மிக மிக சரியானது.

துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்: ஆளுநர் பகிர் குற்றச்சாட்டு…

ஒரு மாநில ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயற்றும் எந்த ஒரு சட்டமும் அரசியலமைப்பு சட்டத்திற்கு இயைந்ததாக இருக்கும் என்றால் அதை அவர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அரசியல் சட்டத்திற்கு உகந்ததாக இல்லை என்றால் அதை மறுபரீசிலனைக்கு அனுப்பலாம். ஆனால் இரண்டாவது முறையாக அந்த சட்டம் நிறைவேற்றி அனுப்பப்பட்டால் அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இயற்றப்படுகிற ஒரு சட்டம் அந்த மாநில எல்லைகளை மீறி மற்ற எல்லைகளையும் தொடுகிறது என்றால் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இரண்டாவது முறை அனுப்பினால் அது அரசியலமைப்ப சட்டத்திற்கு எதிராக இருந்தது என்றால் அதை நிராகரிப்பதற்கான உரிமை அவருக்கு உள்ளது. இந்த மூன்று வழிமுறைகள் அவருக்கு உள்ளபோதும், அதை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்கிற கால நிர்ணயம் சொல்லப்படவில்லை. 1950ல் இருந்த சூழலில், அப்படி கால நிர்ணயம் கொடுக்கக்கூடாது என்று நினைத்தனர். கண்ணியவான்கள், கணவான்கள் தான் ஆளுநர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று ஆளுநர்களாக அமர்த்தப்படுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையை பார்க்கிறபோது, ஆர்.என்.ரவி பலநேரங்களில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்பது உண்மை.

இப்படிப்பட்ட ஒருவர் ஆளுநராக இருந்துகொண்டு தான் விரும்பியபடி நடந்து கொண்டால் உச்சநீதிமன்றம தனக்கு கொடுக்கப்பட்டுள்ள 142 சட்டப்பிரிவை பயன்படுத்துகிற கட்டாயம் இருக்கிறது. அதைதான் அவர்கள் செய்திருக்கிறார்கள். 7 பேர் விடுதலை தொடர்பாக பாஜகவை சேர்ந்தவர்களே சொன்னார்கள். ஒரு நாட்டின் பிரதமர் கொல்லப்பட்டார். அவர் விஷயத்தில் இப்படி செய்துவிட்டார்களே என்றார்கள். இந்த நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தி கொல்லப்பட்டதும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 14 வருடம் முடிந்ததும் வெளியே வந்துவிட்டார்களே அதை பற்றி யாருக்காவது தெரியுமா? ஆயுள் தண்டனையின் அடிப்படை என்பது மனமாறுதல் ஏற்பட வேண்டும் என்பதுதான். அந்த மனமாறுதல் பெற்றுவிட்டார்களா? அல்லது சிறையில் இருந்து வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்களா? என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.  அதற்கு பின்னால் அவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும். அதை தான் உச்சநீதிமன்றம் இறுதியாக செய்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கோரியபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முதலாக கண்டம் தெரிவித்தார். அதற்கு பதிலாக மற்ற மாநில முதலமைச்சர்களுடன் கலந்துபேசி தீர்வு காண்பேன் என்று முதல் நாளே அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா தனிப்பட்ட முறையில் நடத்தி இருக்கலாம். அதன் காரணமாக மத்திய அரசு அப்படி செய்யவில்லை. அவர்கள் மிகவும் தீர்மானமாக உள்ளனர். எங்களுடைய ஆளுநர்கள், எங்கள் விருப்பப்படிதான் நடைபெற்று கொண்டிருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ