பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம், இனிமேல் இதுபோன்ற தவறை யாரும் செய்யக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட தீர்ப்பாக பார்ப்பதாக பேராசிரியர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக பேராசிரியர் மஞ்சுளா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதாகும். இவர்களை எல்லாம் வெளியில் விட்டால் என்ன நடக்கும். அவர்கள் வாழ்நாளில் இருக்கும் வரை சிறையிலேயே இருந்து, அவர்கள் தங்கள் வாழ்நாளை கழிக்கப்பட்டும் என்று நீதிபதி நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளார். இதை தாண்டி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அடைந்த வேதனைகளுக்கும், இத்தனை வருட கால நீட்டிப்பிற்கும் இது போதுமானதா, என்கிற கேள்விதான் வருகிறது. ஆனால் இந்த தீர்ப்பு என்பது இனிமேல் இதுபோன்ற குற்றத்தை செய்கிறபோது, அவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும்.
குற்றம்சாட்ட நபர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. அரசியல் செல்வாக்கு பெற்ற நபர்களும் அதில் இருக்கிறார்கள். இனிமேல் வருகிறவர்களுக்கு நாம் அதிகாரத்தில் இருந்தாலும் சரி, செல்வாக்கு பெற்ற நபராக இருந்தாலும் சரி, சட்டத்திற்கு முன்னால் சரியான தண்டனை நமக்கு கிடைத்துவிடும், அதனால் இதற்கு மேல் தவறு செய்யக்கூடாது என்கிற ஓரளவு மனமாற்றம் வருவதற்கான தீர்ப்பாக தான். இந்த தீர்ப்பை பார்க்கிறேன்.பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய அநீதிகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஏன் என்றால் எங்கேயே ஏதோ நடக்கிறது. வெளியே சொல்ல மாட்டார்கள். அப்படி சொன்னால் இப்படி எல்லாம் மிரட்டப்படுவார்கள் என்று ரொம்ப வருஷமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். குடும்ப மானம் போச்சு… கவுரவம் போச்சு… என்று பேசக்கூடிய சூழலை தாண்டி பெண்கள் புகார் கொடுத்துள்ளார்கள். அந்த குற்ற்ச்சாட்டை அடிப்படையாக கொண்டு விசாரிக்கிறபோது, செல்போன்களில் உள்ள வீடியோக்கள் மூலம் அடுத்தடுத்து யார் யார் என்று பிடித்து, இன்றைக்கு ஒரு பெரிய வட்டத்திற்குள் எல்லோரையும் கொண்டுவந்து விட்டார்கள் என்பது நல்ல விஷயம். 2019ஆம் ஆண்டிலேயே இந்த வழக்கு தொடர்ந்து கொண்டுள்ளது. அப்போது சரியாக நடைபெற்றதா? இல்லையா? சிபிசிஐடிக்கு கொடுப்பதா? சிபிஐக்கு கொடுப்பதா? என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு வேறு வேறு மாறி இன்றைக்கு தீர்ப்பு வாசிக்கிற ஒரு நாளைக்கு வந்துள்ளோம். இதில் என்ன ஒரு மகிழ்ச்சி என்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு இதை நியாயமாக முறையில் எடுத்து போராடி இருக்கிறது.
குற்றச்சாட்டு இருக்கக்கூடிய நபர்கள் அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தார்கள். இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறன்றன. சாதாரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியையே ஜாமினில் விடுவித்தால், சாட்சிகளை கலைப்பார் என்கிற குற்றச்சாட்டின் காரணமாக அவரை வெளியிடக் கூடாது என்கிறார்கள். அரசியல் செல்வாக்கு பெற்ற, அதுவும் அதிமுக செல்வாக்கு பெற்ற நபர்கள் இந்த குற்றச்சாட்டில் இருக்கிறார்கள் என்பது தெரிந்த பிறகும், எந்த சாட்சியும் பிறல் சாட்சிகளாக மாறிவில்லை. அப்போது, திமுக அரசு எந்த அளவுக்கு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது என்றுதான் பார்த்தேன். எனவே ஒரு அரசு நியாயமாக ஒரு வழக்கை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தால் அது பொள்ளாச்சி வழக்காக தான் இருக்கும். இந்த வழக்கில் நமது எதிர்பார்ப்பு என்பது குறைந்தபட்சம் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்பதுதான். இதறகு முன்னாள் நடைபெற்றதற்கு எல்லாம் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை இந்த வழக்கின் மூலம் சமூகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஏன் இதுபோன்ற பாலியல் வழக்குகள், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்று கேட்டால் ஒரே காரணம்தான். அது ஆண் என்பவன் மேலானவன், பெண் என்பர் கீழானவர். ஆண் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்களோ, அந்த பயன்பாட்டிற்குரிய பொருளாக அந்த பெண் இருக்க வேண்டும் என்பதால் தான் தொடர்ச்சியான பாலியல் குற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக இந்த தீர்ப்பு வந்துள்ளது. பொள்ளாச்சி சம்பவம் என்பது அவ்வளவு மோசமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் காணொலிகளை நாம் பார்த்துள்ளோம். அந்த வீடியோவில் அந்த பெண்கள் அண்ணா அண்ணா என்று சொல்கிறார்கள். ஆனால் அண்ணா அண்ணா என்று சொல்கிற அந்த பெண்களை இப்படி சிதைத்திருக்கிறார்கள் என்றால், இதற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டுக் குரியதாகும். அதிமுக காலத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் திமுக அரசு துரிதப்படுத்தி முடித்ததா? என்று கேட்பார்கள். இந்த ஆட்சியில் தன்னுடைய கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வருகிறபோது, உடனடியாக அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதோ, அல்லது பதவியில் இருந்து நீக்குவதையோ இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பொள்ளாச்சி வழக்கில் துரிதமாக, மிகவும் ஷார்ப்பாக வழக்கறிஞர் வாதாடி இருக்கிறார். அதனால் ஒரு பெண்ணாக , பொள்ளாச்சி வழக்கில் நியாயமான தீர்ப்பை கொண்டுவருவதில் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அதிமுகவில் இருப்பவர்கள் செய்திருந்தாலும், இதை பொதுவாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக தான் பார்க்க வேண்டும். அதனால் உங்களுடைய கட்சியில் இருக்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் எதை செய்தாலும் ஒப்புக்கொள்வீர்களா? பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு அதிமுகவினருக்கு ஒரு பின்னடைவாக இருக்கலாம். ஏனென்றால் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான ஒரு அநீதி நடக்கும்போது, அதற்கான ஒரு வழக்கை துரிதப்படுத்தாமல் இந்த அரசு மெத்தன போக்கோடு இருந்திருக்கிறீர்கள் என்றால் சமுதாயத்தில் எவ்வளவு குமுறலாக இருக்கலாம். அதிமுக தன் மீது இருக்கிற கரையை குறைந்தபட்சம் துடைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வருகிறபோது, அவர்களும் சேர்ந்து கொண்டாடுவது தான் சரியானது. இது தமிழ் சமுதாயத்தினர் எல்லாம் கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.