பீகார் தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழ்நாட்டில் காங்கிரசின் பேர வலிமை குறைந்துவிட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததன் எதிரொலியாக தமிழ்நாட்டில் அவர்களுடைய பேர வலிமை சற்று குறைந்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சிலர் கூடி பேசினார்கள். விஜய் ராகுல்காந்தியுடன் பேசி கொண்டிருக்கிறார். அங்கு செல்வது நல்லது. இப்படி எல்லாம் பேசி காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் வாங்கிடலாம் என நினைத்தார்கள். ஆனால் பீகார் தோல்வியின் மூலம் அவர்களின் பேர வலிமை குறைந்துவிட்டது. வெளி நாட்டினரை கண்டுபிடிக்க எஸ்.ஐ.ஆர் நடத்துவதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால் பிகாரில் மிகவும் சொற்பமான அளவில் தான் கண்டறிந்தனர். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதே பிரச்சினையாக மாறியுள்ளது. பிஎல்ஓக்களுக்கு வேலை நேரமே 10 மணி முதல் 5 மணி வரை வைத்துள்ளனர். அப்போது எல்லோரும் வேலைக்கு சென்றுவிடுவார்கள். அதிகாரிகள் செல்கிறபோது ஆட்கள் வீடுகளில் இருக்க மாட்டார்கள். ஒரு மாத காலத்திற்குள் எஸ்.ஐ. ஆர் பணிகளை முடிப்பது முடியாத காரியமாகும்.

90 சதவீதம் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், அவர்களில் எத்தனை பேர் சரியான முறையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தார்கள் என்பது தான் முக்கியமாகும். நவம்பர் 4ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகளை தொடங்கியபோது தமிழ்நாட்டில் இருந்த 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் வாக்குகள் போய்விட்டது. இனி அவர்கள் வாக்காளர்கள் ஆக வேண்டும் என்றால் எஸ்.ஐ.ஆரில் இறுதி செய்யப்படும் வாக்காளர் பட்டியலில் நம் பெயர் இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணையம் முதலில் வரைவு பட்டியல் வெளியிடும். அதில் பார்த்து நாம் திருத்தம் மேற்கொள்ளலாம். ஆனால் இறுதிப்பட்டியல் வெளியான பிறகு தான் வாக்காளர் பட்டியலில் இவர்கள் மேற்கொண்ட குளறுபடிகள் தெரியவரும். அப்போதுதான் அது தேர்தலில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவரும்.

பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், தமிழ்நாட்டில் ராகுல், ஸ்டாலின் இடையே எந்த வித பிரச்சினையும் ஏற்படப்போவது இல்லை. ஆனால் கே.எஸ்.அழகிரி போன்றவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் இடங்கள் போதாது. அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்று கேட்டார்கள். இன்றைக்கு செல்வப்பெருந்தை விஜயுடன், ராகுல்காந்தி பேச வில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேபோல் தவெக தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மறுக்கிறார்கள். விஜயை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் உடன் தான் கூட்டணி என்றும், தவெக தரப்பில் உறுதியாக சொல்கிறார்கள். நான் பல முறை கூறியுள்ளேன். அதிமுக, பாஜக உறவை முறித்துக்கொண்டு தவெக உடன் கூட்டணிக்க வரலாம். அப்போதும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று கேள்வி வரும். அதற்காக தான் எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ளவர்களை எல்லாம் நீக்கி வருகிறார். அப்போது அவர் பதவியை விட்டுத்தர மாட்டார். இல்லாவிட்டால் கர்நாடகா மாநில பாணியில் ஆளுக்கு 2.5 வருடங்கள் ஆட்சி செய்வார்களா? என்றும் கேள்வி எழுகிறது. இதை செயல்படுத்தப் போவது அதிமுகவோ, தவெகவோ கிடையாது. பாஜகதான்.

திமுக கூட்டணி உடையப் போகிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பீதியை கிளப்பி வருகிறார்கள். எடப்பாடி முதலில் திருமாவளவனையும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் புகழ்ந்தார். அவர்கள் கூட்டணிக்கு வரவில்லை என்று தெரிந்ததும் அவர்களுக்கு ஒன்றும் அவ்வளவு பலம் இல்லை என்று சொல்லிவிட்டார். அதிமுக, தவெக இடையே பாஜக பேச்சுவார்த்தை நடத்தினால், அதை எதிர்க்கிற நிலையில் இரு கட்சிகளும் இல்லை. மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும்போது மாநில அரசுகளும் சமரசமாக தான் போகின்றன. மம்தா பானர்ஜி,மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் விட்டுக்கொடுத்து போகிறார்கள். ஆனால் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் நிற்கிறார்.ஆனால் தெலுங்கானாவில் அப்படி இருக்க முடியாது. காங்கிரசால் அதிதீவிர இந்துத்துவ வாதிகளாகவும் நடக்க முடியும். ஆனால் மம்தாவோ, ஸ்டாலினோ இன்று வரை அப்படி நடந்துகொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. ஆனால் அமலாக்கத்துறை போலியான வழக்குகளை பதிவு செய்ததற்காக உச்ச நீதிமன்றத்திடம் பல முறை கொட்டு வாங்கியுள்ளது. எனவே அமலாக்கத்துறை ஊழல் குற்றம்சாட்டினால் அதை எந்த அளவுக்கு மக்கள் நம்புவார்கள் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு குட்டு வைத்தும்அவர் கேட்கவில்லை. ஆனால், நீதிமன்றம் சொல்வதை கேட்கும் பொறுப்பு மம்தா, ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு உள்ளது. அவர்களுக்கு அரசமைப்பு சட்டம் மீது நம்பிக்கை உள்ளதால் அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் மத்திய அரசுக்கு நம்பிக்கை இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


