spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசுற்றி வளைத்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! மோடி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

சுற்றி வளைத்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! மோடி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

-

- Advertisement -

மக்களவை தேர்தலில் கடைசி நேரத்தில் அதிகமானோர் வாக்களித்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று கண்டறிய சிசிடிவி காட்சிகளை கேட்கிறபோது தேர்தல் ஆணையம் தரவில்லை என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்யுள்ளார்.

we-r-hiring

தேர்தல் ஆணைய உதவியுடன் பாஜக வாக்குகளை திருடியதாக ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுர் ஷாநவாஸ் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறயுள்ளதாவது:- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி இருக்கின்ற ஆர்எஸ்எஸ் – பாஜகவை எதிர்த்து மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துள்ளார். இதுவரை யாரும் இவ்வளவு நுட்பமாக அலசி ஆராய்ந்து, தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்தியது கிடையாது. இதுபோன்று தொகுதிகளில் எப்படி வாக்குகள் பதிவாகி உள்ளன. எப்படி வாக்குகள் நீக்கவும், சேர்க்கவும் பட்டது என்பவது உள்ளிட்ட இவ்வளவு தரவுகளை, மிகவும் நுட்பமாக வேலைபார்த்து ராகுல்காந்தி பொதுவெளிக்கு வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் உண்மையில் ஜனநாயகப்படி செயல்படுவதாக இருந்தால், அந்த குறைகளை களைய முயற்சி செய்து இருக்கும்.

போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க வேண்டியதும்,  தவறுதலாக வாக்காளர் நீக்கப்பட்டால் அவர்களை சேர்க்க வேண்டியதும் தேர்தல் ஆணையத்தின் வேலையாகும். அவர்கள் செய்ய வேண்டிய வேலையை ராகுல்காந்தி இன்றைக்கு செய்துள்ளார். ஆனால் அவருக்கு டிஜிட்டல் தரவுகளை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவிக்கிறது. ஒருபுறம் காகிதம் இல்லாமல் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு மாறி வருகிறது. மறுபுறம் தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்காமல், கட்டுக்கட்டாக காகித தாள்களை வழங்கி கண்டுபிடித்துக்கொள்ள சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு இதிலே தெரிந்துவிட்டது.

ராகுல்காந்தி வெளிப்படையாக பத்திரிகையாளர்களை அழைத்து, தேர்தல் முறைகேடுகள் குறித்து பவர்பாய்ண்ட்டில் விளக்கம் அளித்துள்ளார். இதற்கு மேல் ராகுல்காந்தி என்ன செய்ய வேண்டும்? அவர் சான்றுகளுடன் தான் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். அதில் தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி இருந்தால் அதை கேட்கலாம். ஆனால் தேர்தல் ஆணையம் ராகுல்காந்தியின் எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. அங்குதான் தேர்தல் ஆணையத்தின் உண்மை முகம் வெளிப்படுகிறது. ஒரு தொகுதியில் பூத் ஏஜெண்ட்டுகள், கவுன்சிலர்கள், ஆட்சியர் என்று எவ்வளவோ பேர் உள்ளபோது, அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவார்களா? என்று பாஜக கேள்வி எழுப்புகிறது.

எதிர்க்கட்சிகளிடம் எவ்வளவு பேர் இருந்தாலும், தேர்தல் ஆணையம் ஒன்று பாஜகவுக்கு போதுமே. இவ்வளவு பேர் இருந்தும் எப்படி தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றது? இப்படி ஒரு முறைகேடு நடைபெற்ற செய்தி வெளியாகிறபோது நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பதறுகின்றன. ஆனால் பாஜகவோ, தேர்தல் ஆணையமோ பதற்றம் அடையவில்லை. பெரும் மக்கள் தொகையை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய 300 எம்.பிக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதுகுறித்து தேர்தல் ஆணையம் கவலைப்படாதா? தேர்தல் நடைமுறைகளையே சீர்குலைக்கும் வகையில்தான் இவ்வளவு நாளாக பாஜக செயல்பட்டிருக்கிறது.

வாக்குப்பதிவின்போது கடைசி நேரத்தில் அதிகளவு வாக்குகள் பதிவாகி உள்ளதாக ராகுல்காந்தி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டுகளாக இருந்தவர்கள் அப்படி மக்கள் அதிகமாக வந்து வாக்களிக்க வில்லை என்று சொல்கிறார்கள். அப்போது அந்த வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கேட்கிறபோது அதனை தேர்தல் ஆணையம் வழங்க மறுக்கிறார்கள். பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் போலி வாக்காளர்களை சேர்ப்பது, எதிர்ப்பவர்களை நீக்குகிற வேலையை செய்கிறார்கள். தற்போது பீகார் மாநிலத்தில் செய்கிறார்கள். பாஜகவுக்கு எங்கு தேவையா? அங்குதான் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அனைத்து இடங்களிலும் முறைகேட்டில் ஈடுபடுவது கிடையாது. ராகுல்காந்தி அரசியலுக்காக குற்றம்சாட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் போராடவில்லை என்று பாஜக சொல்கிறது. அப்படி ராகுல்சொல்வது பொய் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுங்கள்.

ராகுல்காந்தி சொன்னது அவதூறு என்றால் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர வேண்டியது தானே. ஏன் அவரை இழுக்கவில்லை? சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதை சிசிடிவி காட்சிகள் மூலம் தான் கண்டறிந்தோம். தற்போது ராகுல்காந்தி 6 மாதம் கடுமையாக உழைத்ததன் மூலம் முறைகேடுகள் தெரியவந்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் சிசிடிவி காட்சிகள் கிடைத்ததால் நீதி நிலைநாட்டப்பட்டது. அதேபோல் கடைசி நேரத்தில் அதிகமானோர் வாக்களித்து உள்ளார்கள் என்று சொல்கிறார்கள் அதனால் சிசிடிவி காட்சிகளை கேட்கிறோம். அவர்கள் தரவில்லை.

திட்டமிட்டு கொத்து கொத்தாக வாக்குகள் நீக்கப்படுவதும். பாஜகவினருக்கு சாதகமானவர்களின் வாக்குகள் சேர்க்கப்படுவதும். போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதும், தலைமையில் இருந்து வரக்கூடிய உத்தரவின் அடிப்படையில் நடைபெறுவதாகும். ஏதோ ஒரு அதிகாரி செய்யும் தவறு கிடையாது. ராகுல்காந்தி முன்வைக்கும் குற்றச்சாட்டு என்பது ஆங்காங்கே ஒருசில அதிகாரிகள் செய்யும் தவறுகள் கிடையாது. இது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வலுசேர்க்கும் விதமாக நடந்துள்ள சதியாகும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற பெரிய அளவில் மோசடி செய்ய முடியும். அப்படி முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் மாட்டிக் கொண்டவர் ஆதாரத்தை வழங்க மறுக்கிறார். இந்த இடத்தில் தான் திருடன் மாட்டிக் கொண்டார். அந்த இடத்தில் தான் இதனை வாக்கு திருட்டு என்கிறோம். திருடர்கள் கண்டிப்பாக கூண்டில் ஏற்றப்படுவார்கள் மிக முக்கியமான இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு பரவியுள்ளதால் தான் எவ்வளவு பெரிய குற்றச்செயல் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். தப்ப வைக்கப்படுவார்கள்.

இப்படிபட்ட ஒரு வலிமையான சக்தியோடு ராகுல்காந்தி மோதுகிறார். ராகுல் காந்தியின் போராட்டம் என்பது பெரிய போராட்டமாகும். அதனால் தான் இன்றைக்கு நாடே அவர் பின்னால் நிற்கிறது. மக்களிடம் தேர்தல் ஆணையம் அம்பலப்பட்டு விட்டது. இனி தேர்தல் ஆணையத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். தன்னை திருத்திக் கொள்ளாத வரை, ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை அளிக்காத வரை மக்கள் இந்த தேர்தல் ஆணையத்தை நம்ப மாட்டார்கள். தமிழ்நாட்டை போன்று தேர்தலை விழிப்போடு எதிர்கொள்ளும்  நிலைக்கு வடநாட்டு மக்கள் வருகிறார்கள். இது அதற்கும் அடித்தளத்தை அமைத்துள்ளது. கட்டயாமாக இதில் வெற்றி பெறும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ