விசிக இன்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்றால், இது தமிழ்நாட்டில் 5 முறை ஆட்சி முறை ஆட்சிக்கு வந்ததற்கு சமமாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதை ஒட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- விழுப்புரம் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பின்னர் நான் மட்டும் தனித்து ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதனை அறிந்த மூப்பனார் என்னிடம் 2 வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் இணைத்துக் கொண்டார். தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறோம் என்கிற போது நான் முன்வைத்த முழக்கம் தான் கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம். அவனியாபுரத்தில் தான் முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அப்போது மூப்பனார் கேட்டார். அந்த முழக்கத்திற்கு என்ன பொருள் என்று. ஆட்சியிலும் பங்கு. அதிகாரத்திலும் பங்கு எனறு நான் சொன்னேன். அந்த கூட்டத்தில் பேசிய மூப்பனார், என்னுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். பின்னர் அவரது வேண்டுகோளை ஏற்று நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன். நான் தேர்தலில் நிற்கவே விரும்பவில்லை. மூப்பனார் என்னை கட்டாயப்படுத்தி, பதவியை ராஜினாமா செய்ய வைத்து, தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி அவ்வளவு பெரிய வன்முறைகளை சந்தித்தோம். சிதம்பரத்தில் என்னை வேட்பாளர் என்று மூப்பனார் அறிமுகப்படுத்தினார். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு மூன்றாவது அணியிலேயே அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.
பின்னர் 2001ல் திமுக கூட்டணி. கலைஞர் 10 தொகுதிகளை வழங்கினார். 10 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆனால் இரண்டே கால் வருடத்தில் நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன். அப்போதைய பேரவை தலைவர் காளிமுத்து என்னிடம் கேட்டார், நன்றாக யோசித்துதான் சொல்கிறீர்களா? என்று. நான் சொன்னேன் உறுதியாக பதவி விலகுகிறேன் என்றேன். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் விசிக, கிருஷ்ணசாமி, ராஜகண்ணப்பன் போன்றவர்கள் கூட்டணி அமைத்தனர். அப்போது நான் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்து, முலாயம் சிங்கிடம் பேசி சைக்கிள் சின்னத்தை பேசி வாங்கலாம் என டெல்லி சென்றோம். ஆனால் ஜார்பெர்ணாண்டஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவரது அம்பு சின்னத்தில் போட்டியிட்டோம்.
இதற்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரத்தை பெற்றாக வேண்டும். இனி தனிச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். என்.நடராஜன், இரட்டை இலை சின்னத்தில் நில்லுங்கள் 10 தொகுதிகள் வழங்குகிறோம் என்றனர். பின்னர் சசிகலாவுடன் பேச சொன்னார்கள். அவர்கள் சொன்ன போதும் நாங்கள் அங்கீகாரம் வாங்க வேண்டும் என்று கூறி அதிமுக சின்னத்தில் போட்டியிட மறுத்து விட்டேன். அப்போது மணி சின்னத்தில் நின்றோம். கடலூர் மாவட்டத்தில் எந்த பின்புலமும் இல்லாமல் வெறும் அதிமுக கூட்டணி என்கிற ஆதரவோடு களத்தில் நின்றோம். சாதி எவ்வளவு வலிமையானது என்பதை ஒவ்வொரு தேர்தல் களத்திலும் நேருக்கு நேர் நாம் சந்தித்தோம். ஆனாலும் காட்டுமன்னார் கோவில் தொகுதியிலும், திட்டக்குடி தொகுதியிலும் தனி சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது.
2009 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அப்போதும் திமுக சின்னத்தில் நிற்க சொல்லி அறிவுறுரைகள் வந்தன. முடியாது என்று மறுத்துவிட்டேன். நட்சத்திர சின்னம் கோரினேன். ஆனால் அவர்கள் வழங்கவில்லை. பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி நட்சத்திர சின்னத்தை பெற்று போட்டியிட்டோம். அப்போது, ஈழப் படுகொலை உச்சத்தில் இருந்தது. அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அதனை தாண்டி நட்சத்திர சின்னத்தில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதன் முதலாக வெற்றி பெற்றோம்.
2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 12 தொகுதிகள் தர ஒப்புக் கொண்டார்கள். பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியபோது விசிகவுக்கு இவ்வளவு தொகுதிகள் தர முடியாது என்றனர். ஏன் என்று கேட்டபோது, விசிகவுக்கு நிறைய தொகுதி கொடுத்து ஊக்கப்படுத்தினால், மற்ற சாதிக்காரர்கள் எதிராக போவார்கள் என்று சொன்னார்கள். கூட்டணியில் விசிகவை சேர்த்துக் கொண்டாலே பிற சாதிக்காரர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்கிற உரையாடல் இருந்தது. இதெல்லாம் வேறு யாருக்கும் வராத நெருக்கடிகள். விசிக இன்று அங்கீகாரம் பெற்றுள்ளது என்றால், இது 5 முறை ஆட்சி முறை ஆட்சிக்கு வந்ததற்கு சமமாகும். 2011ல் 12 தொகுதிகளில் கையெழுத்து போட்டு பிறகு அது 10ஆக குறைக்கப்பட்ட போதும், அதையும் பொறுத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தவன் திருமாவளவன். எப்போதும் அரசியலில் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான உத்தி.
தேர்தல் அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு, சுயமரியாதை என்ற பெயரால் தனிமைப்பட்டு விடக்கூடாது. அந்த தேர்தலில் திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் போட்டியிட்டு தோற்றன. நம்மாலும் வெல்ல முடியவில்லை. அப்போது நாம் போட்டியிட்ட சின்னம் இரட்டை மெழுகு வர்த்தி. 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் போட்டியிட்டோம். அப்போது மோதிரம் சின்னம். 2016ல் மக்கள் நலக் கூட்டணி. 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். அப்போது நாம் போட்டியிட்ட சின்னம் மோதிரம். 2019 நாடாளுமனற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. திமுகவின் வற்புறுத்தலின் பேரில் சிதம்பரத்தில் தனிச் சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ஆளுங்கட்சி சின்னத்திலும் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அந்த தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றோம். ஆனால் விசிகவுக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லை.
2021 சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனது. நான் பானை சின்னத்தில் நிற்க வேண்டும் என்கிற முடிவை எடுத்தபோது, கட்சி நிர்வாகிகளே உதய சூரியன் சின்னத்திலே நிற்கலாமா என்று சொன்னார்கள். நான் சொன்னேன் தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடலாம். அதனால் பானை சின்னம்தான். போய் நில்லுங்கள் என்றேன். அந்த இடத்திலும் உறுதியாக நின்றோம். 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம். அவற்றில் 2 பொது தொகுதிகளில் வெற்றி பெற்றோம். விசிக ஏற்றுக்கொள்கிற உளவியல் மெல்ல வளர்ந்து வந்திருக்கிறது. அதற்கு சான்று திருப்போரூர், நாகை தொகுதிகளின் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் பொதுமக்களிடையே நமக்கு ஒரு ஏற்பிசைவ உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டது. 2024ல் பானை சின்னத்தில் போட்டியிட்டோம். இரண்டிலும் வெற்றி பெற்று இன்றைக்கு நாம் ஒரு மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.
2006ஆம் ஆண்டில் தொடங்கி, 2024ஆம் ஆண்டிலே பல தேர்தல்களை சந்தித்து, பல்வேறு யுத்தங்களை நடத்தி, பல்வேறு நெருக்கடிகளை எல்லாம் எதிர்கொண்டு, பொறுத்து, சகித்து அங்கீகாரத்தை வென்றெடுத்துள்ளோம். இதற்காக நாம் கையாண்ட அணுகுமுறைகளும், உத்திகளும் எத்தனை மகத்தானவை என்பதை யூகித்து பார்க்க வேண்டும். அரசியல் களத்தில் அம்பேத்கர் பெயரை சொல்லி ஒரு இயக்கம் அங்கீகாரம் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. சாதி ஒழிப்பு அரசியல் பேசிக் கொண்டே, சனாதனத்தை எதிர்த்துக் கொண்டே அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் புரட்சிகர அரசியலை உயர்த்தி பிடித்துக் கொண்டே இந்த களத்தில் வீருநடை போடுவது என்பது கடினமான ஒரு பயணமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.