உடையநாயகம் நல்லதம்பி
மிக நீண்டகாலமாகவே தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் வீடுகளில் வெள்ளியும் செவ்வாயும் விரதமிருப்பது என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. வெள்ளி ஆண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும், செவ்வாய் பெண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும் இருந்து வந்திருப்பதையும் காண்கிறோம்.
இந்த இரண்டு நாள்களிலும் வீட்டைக் கழுவி, அதற்கு முற்பட்ட காலத்தில் மண் தரையை சாணமிட்டு மெழுகி, கோலமிட்டு புலால் உணவு தவிர்த்து காய்கறி உணவு சமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.ஆனால் இவ்வாறு இவர்கள் வழிபட்ட ஆண், பெண் தெய்வங்கள் மரக்கறி உண்ணும் தெய்வங்களாகத்தான் இருந்தனவா என்று உறுதியாகத் தெரியவில்லை. பார்ப்பனரல்லாத ஜாதி மக்களின் பெரும்பான்மையான குல தெய்வங்கள் இறைச்சி உண்ணும், இரத்தம் குடிக்கும் தெய்வங்களாகவே இருந்தன. சாத்தனார், சாத்தையா, சாத்தன் (சாஸ்த்தா) போன்ற தெய்வங்கள் ஆடு கோழி பலியிடப்படாத தெய்வங்கள் என்றாலும் அதே கோயில் வளாகத்தில் இருக்கும் பரிவார தெய்வங்களில் ஒன்றான கருப்பருக்கு ஆடு கோழி பலியிடுவதும், படைப்பதும் உண்டு.

பார்ப்பனரல்லாதாரிலேயே தங்களை முற்பட்ட உயர்ஜாதியினர் என்று கருதிக் கொண்டு வெஜிடேரியன்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்னரைப் பார்ப்பனர் ஒரு சில மைனாரிட்டி ஜாதிப் பிரிவினர்களை மட்டும் விதிவிலக்குகள் என்று விட்டுவிடலாம்.
மற்ற அனைவருக்கும் புலால்தான் மிகவும் விருப்பமான உணவு இதன் காரணமாகத் தான் விடுமுறை நாட்களில் இறைச்சிக் கடைகளிலும் மீன் கடைகளிலும் கூட்டம் நிறைந்து வழிகின்றன. அது மட்டுமல்ல மக்களின் பொருளாதாரம் இடம் தந்தால் தினசரிகூட மக்கள் புலால் உணவு உண்ணவே விரும்புவர்.
மேலும் இப்போது வித விதமான இறைச்சி உணவுகளைச் சமைத்து சுடச்சுட ஆவி பறக்க உண்ணும் (ரீல்ஸ்) விடியோக்களையும், வித விதமான உணவகங்களுக்குப் போய் பல்வேறு விதமான புதிய புதிய புலால் உணவுகளை வெறியோடு உண்ணும் இளையோர்களின் வீடியோக்களையும் (யூ டியூப்பில்) காண முடிகிறது. இவை பெரிய அளவில் வரவேற்பையும் வருமானத்தையும் குவிப்பதையும் காண்கிறோம். இதுவும் மேலை முதலாளிய நாடுகளில் இருந்து இங்கு இறக்குமதியான ஒரு புதிய தொழில் மற்றும் பண்பாடுதான்.இத்தனைக்கும் நடுவிலும் இந்த விரத நாட்கள் மட்டும் கூடிக் கொண்டே போவதைப் பார்க்கிறோமே இது எப்படிச் சாத்தியம்? இது முரணாகத் தெரிகிறதே! அதிலும் இவ்வாறு விரதமிருப்பவர்களில் அதிகம் பெண்களாகவே இருக்கின்றனர். திங்கள், வியாழன், சனி இம்மூன்று நாட்களும் இப்போது விரத நாட்களில் சேர்ந்துவிட்டன. சாய்பாபா கோயிலுக்குப் போவது, பிரதோசம் என்பவை எல்லாம் பார்ப்பனரல்லாத ஜாதிப் பெண்களிடம் வந்து புகுந்துவிட்ட புதிய விரத நாட்களாகும்.
ஒருபுறம் கல்விப் பரவலாக்கம் மூலம் கிடைத்த பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களிடம் நல்ல, வித விதமான புதிய உணவுகள் மீதான ஈர்ப்பும், அதே நேரம் சத்தான, சரிவிகித உணவுகள் பற்றிய விழிப்புணர்வும் இன்று அதிகரித்து வருவதையும் நாம் பார்க்கிறோம். pure வெஜிடேரியன்கள் பலர் இப்போது மருத்துவர்களின் ஆலோசனையின்படி தங்களின் குழந்தைகளுக்கு உணவில் முட்டை மற்றும் இறைச்சி, மீன் போன்றவற்றை தங்களது உறவினர்கள் அறியா வண்ணம் ரகசியமாகச் சேர்த்து வருவதையும் கூடப் பார்க்கிறோம்.
மக்களின் வாழ்நிலையிலும் பொருளாதார நிலையிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகத்தான் இங்கு உணவை வீடுகளுக்கு கொண்டு வந்து வழங்கும் சுவிகி, சுமோட்டோ போன்ற புதிய தொழில்கள் பரவலாகிப் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருவதையும் காண்கிறோம்.வீட்டில் இருந்தபடியே, தங்கள் வாழ்நாளில் இதுவரை ருசித்திடாத புதிய உணவு வகைகளை மக்கள் வாங்கித் தின்று தீர்க்கின்றனர். இவை எல்லாம் உலகமயத்திற்குப் பின்னால் இங்கு ஏற்பட்டுள்ள மாறுதல்களாகும். ஆக மேற்குலகின் உணவு வகைகளும் (பீட்ஷா, பர்கர், சாண்ட்விட்ச், தந்தூரி, டிராகன் சிக்கன்……..) உணவுப்பழக்கமும் இங்கு பரவி வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.
அதாவது ஒரு காலத்தில் (50 ஆண்டுகளுக்கு முன்) பசி பஞ்சத்தில் தங்களின் வாழ்நாளைக் கழித்த ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய வாரிசுகள் நல்ல உணவு வகைகளை உண்டு மகிழ்கின்றனர். அதனைக் கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அவர்கள் பெற்ற கல்வியும், பெற்ற வேலையும் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் தான் சாத்தியமாக்கி உள்ளது.
இவ்வாறு மாறிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்நிலைக்கு ஏற்ப தமிழ்நாட்டின் சிறு, குறு, பெரு நகரங்களில் புதிய புதிய புட் கோர்ட்களும், நவீன உணவகங்களும், மால்களும் தோன்றி வளர்வதைக் காண்கிறோம். அவை மட்டுமின்றி சாலையோர ஸ்டால்களில் சிக்கன், மட்டன், பீப் பிரியாணி 100 முதல் 150 ரூபாய்க்குள் தாராளமாக கிடைப்பதால் எளிய உழைக்கும் மக்களும் தங்களின் பசிபோக்கிக் கொள்ள முடிகிறது.இத்தகைய மாறிப்போன புதிய சூழலில் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயிலைச் சுற்றி Non Veg புழங்காத அக்கிரஹாரங்கள் இருந்ததைப் போல மீண்டும் திருவண்ணாமலை, இராமேஸ்வரம் போன்ற இன்றைய கோயில் நகரங்களின் நான்கு ரத வீதிகளையும் Non Veg அற்ற புனிதமான?! பகுதியாக மாற்ற வேண்டும் என்று சங்கிகள் சிலர் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், இந்த ஊர்களின் அக்கிரஹாரங்களில் வசித்தவர்களின் வாரிசுகளில் பெரும்பாலோர் கடந்த 50 ஆண்டுகளில் உயர் கல்வி கற்று பெரும் நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்குச் சென்று அங்கேயே செட்டிலாகி பல்வேறு விதமான Non Veg உணவுகளை ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதனால் பெரும்பாலான ஊர்களின் அக்கிரஹாரங்கள் காலியாகிவிட்டன. அத்தெருக்களில் பார்ப்பனரல்லாத ஜாதியினர் குடியேறியும்விட்டனர். இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட பிறகும் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகளில் அசைவ (Non Veg) உணவகங்கள் இருக்கக் கூடாது என்பதும், யாரும் அவ்வீதிகளில் Non Veg உணவை உண்ணக்கூடாது என்பதும் முழுக்க முழுக்க சங்கிகளின் வன்மமான ‘உணவு அரசியலே’ தவிர வேறில்லை.தமிழ்நாட்டின் ஒவ்வொரு கோயில் நகரையும், தங்களது முதன்மையான இலக்காகக் கொண்டு சங்பரிவாரத்தினர் இயங்கி வருகின்றனர். ஏற்கெனவே கன்னியாகுமரி, இராமேஸ்வரம், சிதம்பரம், மதுரை, ஸ்ரீரங்கம் போன்ற ஊர்களை மய்யமிட்டு வேலை செய்து வருபவர்கள் இப்போது திருவண்ணாமலையில் வாலை நுழைத்துள்ளனர். ஏனென்றால் கோயிலை மய்யமாக வைத்துப் பிழைக்கும் பார்ப்பனரல்லாத மக்களைத் தங்களது பக்கம் ஈர்ப்பது சுலபம் என்கிற நோக்கில் தான் இவ்வாறு இயங்குகின்றனர். அதாவது வாழ்க்கைத் தேவைக்காக கோயிலை நம்பி (ஆலய வழிகாட்டிகள், வியாபாரிகள், தங்கும் விடுதி நடத்துபவர்கள்) இருப்பவர்களை எல்லாம் தங்களின் மதவாத அரசியலுக்குள் எளிதாகக் கொண்டு வந்துவிட முடியும். கொண்டு வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அதற்காகத் தீவிரமாக வேலையும் செய்கின்றனர். ஓரளவு வெற்றியும் கண்டு வருகின்றனர். இது போன்ற ஊர்களில் பாஜகவுக்கு எதிரான கொள்கையை உடைய அரசியல் கட்சிகளில் இருப்பவர்களும் தங்களின் வருமானத்திற்கான வாழ்வாதாரமாக விளங்கும் கோயில்களின் பார்ப்பனிய சம்பிரதாயத்தைக் காப்பது என்ற பெயரில் இந்துத்துவ வெறியர்களுடன் போய் ஒன்றாக நின்று விடுகின்றனர்.ஆக பாஜக பாசிஸ்ட்டுகளின் அரசியல் என்பது இன்றைய மாறிப்போன மக்களின் வாழ்நிலைக்கு முரணான அழிந்துபோன பழைய வழக்கத்தை மீண்டும் கொண்டுவந்து நிலைநாட்ட வேண்டும் என்பதாக இருப்பதைக் காண்கிறோம். அதாவது கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களின் மூலமாக இங்கு ஏற்பட்டு வந்துள்ள மாறுதல்களை, முன்னேற்றங்களை எல்லாம் அழித்துவிட்டு, மீண்டும் பழமைக்கே திரும்ப வேண்டும் என்கிற விருப்பத்தினையே தங்களது அரசியலாக முன் வைக்கின்றனர். இந்த அரசியல் ஒரு போதும் வெற்றி பெற முடியாது.
இன்று நான்கு ரத வீதிகளில் அசைவ உணவகங்களும், உணவுகளும், அதை உண்பதும் கூடாது என்பவர்கள் நாளை அசைவ (புலால்) உணவு உண்பவர்கள் இவ்வீதிகளில் நடக்கக் கூடாது என்றும் சொல்வார்கள். இவ்வாறு ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் விதித்திருந்த ஜாதி ஆச்சாரக் கட்டுப்பாடுகளை, தீண்டாமைக் கொடுமைகளை எல்லாம் எதிர்த்துப் போராடி வென்று சட்டப்படி அனைத்துப் பொது இடங்களிலும் அனைவரும் புழங்கலாம் என்று இன்று நடைமுறையில் இருப்பதைத்தான் சங்கிகள் மாற்றத் துடிக்கின்றனர்.
மீண்டும் கோவில்களை தனியாரிடம் (பார்ப்பனர்களிடம்) ஒப்படைத்துவிட்டு அரசு வெளியேற வேண்டும் என்கின்றனர். ஆனால் என்னவொரு வேதனை என்றால் இவ்வாறு சங்கிகள் என்ற பெயரில் வந்து நிற்பவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதுதான்.
அதாவது இறைச்சிக் கடையிலும், புலால் விருந்துகளிலும் முண்டியடித்துக் கொண்டு நிற்கும் அதே நபர்கள்தான் கோயில் நகரங்களின் புனிதத்தைக் காக்க புலால் உணவகங்களை அகற்ற வேண்டும் என்கிறார்கள்!பார்ப்பனரல்லாத ஜாதிகளில் பிறந்து பார்ப்பனர்களின் சர்வாதிகார ஆட்சிக்காகப் பாடுபட்டுவரும் இந்தச் சங்கிகளிடம் நாம் ஒரேயொரு கோரிக்கையை மட்டும் முன் வைக்கிறோம். புலால் உண்ணும் பார்ப்பனரல்லாத மக்கள் புழங்க முடியாத புனிதமானவையாக நான்கு ரத வீதிகளை இப்போது நீங்கள் மாற்றுவதற்கு முன்பாக அந்த அக்கிர ஹாரங்களின் வாரிசுகளான பார்ப்பனர்களை எல்லாம் முதலில் தூய பார்ப்பனர்களாக மாற்றி மீண்டும் இந்த அக்கிரஹாரங்களில் குடியேற்ற வேண்டும் எனக் கோருகிறோம்.
அதாவது வேதத்தில், மனுதர்மத்தில் சொல்லப்பட்டுள்ள பார்ப்பனர்களின் வாழ்க்கை முறைக்கு விரோதமாக இன்று அவர்கள் வகிக்கும் உயர் அரசுப் பதவிகள், நீதித்துறை, மருத்துவத்துறை சார்ந்த பதவிகள், திரைத்துறை, ஊடகத்துறை சார்ந்த தொழில்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் அதன் மூலம் சேர்த்து வைத்துள்ள மாட மாளிகைகள், திரண்ட சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு மீண்டும் தர்ப்பை புல்லை மட்டும் வைத்து மந்திரம் ஓதி வயிறு வளர்க்கும் மனிதர்களாக மாறி கோயில் நகரங்களின் அக்கிரஹாரங்களில் வந்து குடியேறச் சொல்லுங்கள்.
அப்படி நடத்துவிட்டால் பார்ப்பனரல்லாத மக்கள் தாமாகத் தங்களின் இடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள். நீங்களும் உங்கள் புனிதத்தைக் கட்டிக் காத்துக்கொள்ளலாம். ஏனென்றால் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் தாங்கள் வரையறுத்த கட்டுப்பாடுகளை முதலில் மீறியவர்கள் பார்ப்பனர்கள் தான் அவர்களைப் பார்த்துதான் மற்றவர்களும் மாறினார்கள், உங்கள் பாசையில் சொல்வதாக இருந்தால் கெட்டுப் போனார்கள். பார்ப்பனர்கள், உடல் உழைப்பு தொடர்பான தொழில்களில் ஈடுபடக்கூடாது பிச்சை எடுத்துதான் உண்ண வேண்டும் என்று தானே வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கிராப் வெட்டக்கூடாது, பேண்ட் சர்ட் அணியக்கூடாது என்று இந்து மதம் பார்ப்பனர்களுக்கு அருளி உள்ள புனிதமான கட்டளைகளை எல்லாம் மீறியவர்கள், காற்றில் பறக்கவிட்டவர்கள், தங்களின் அக்கிரஹாரங்களை மட்டுமல்ல, தங்களின் புனிதமான தொழிலான புரோகிதத்தை மட்டுமல்ல தங்களைப் படைத்த கடவுளர்களையே அம்போவென விட்டுவிட்டு சென்னை, மும்பை, டெல்லி, அமெரிக்கா கலிபோர்னியா, ஆஸ்திரேலியா என்று ஓடிப்போன சாஸ்திர விரோதிகளான பார்ப்பனர்களை முதலில் அழைத்து வந்து கோயிலையும், கடவுளையும், மதத்தையும் அதன் புனிதத்தையும் காக்கச் சொல்லுங்கள்.
பிறகு பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாடக்கூடிய கோயில் நகர வீதிகளையும் அவர்கள் வாழும் இடங்களின் அசுத்தத்தையும் நீக்கி புனிதத்தைக் காக்கலாம்! ஆனால் அதிகார மய்யங்களை நோக்கி இடம்பெயர்ந்து சுகபோக வாழ்க்கை வாழும் பார்ப்பனர்கள் ஒரு போதும் அதனை விட்டுவிட்டுப் பழைய வாழ்க்கைக்குத் திரும்பப் போவதில்லை. அவர்களை அதிகாரத்தை விட்டு இறக்குவதும் RSS-ன் நோக்கமுமில்லை.
பிறகு என்ன தான் நோக்கம்?பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மேலே ஏறி வரக் கூடாது. பார்ப்பனர்களுக்கு எந்த இடத்திலும் போட்டியாக வரக்கூடாது. அவர்களுக்கு மனுதர்மம் விதித்துள்ள வரம்புகளை மீறக்கூடாது. அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆவோம், IAS ஆவோம். டாக்டராவோம், நீதிபதி ஆவோம் என்று சொல்லக் கூடாது. பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஒருவர். படித்துப் பட்டம் பெற்று தேவஸ்தானத்தில் இணை ஆணையாளராகி பார்ப்பனர்களை அதிகாரம் செய்யக் கூடாது.
திமுக அரசின் கையில் ஆலயங்கள் இருப்பதால், அவ்வரசு சமூக நீதியை, இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதால்தானே இப்படி மாட்டுக்கறி உண்ணும் ஒரு SC அர்ச்சகர் ஆகிறார்? உயர் அதிகாரியாகி பார்ப்பனர் தொடங்கி பிற உயர்ஜாதியினர் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் அனைவரையும் ஆட்டி வைக்க முடிகிறது. ஊதியத்திற்கு மேல் ஒரு பைசா பக்தர்களிடம் வாங்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்க முடிகிறது. கணக்குக் கேட்க முடிகிறது. ஆகவேதான் அரசு, ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார்கள்.
இதனைப் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலும் சங்கிகளாக மாறி பார்ப்பனர்களுடன் சேர்ந்து நின்று பார்ப்பனர்கள் தூக்கிப் போடுவதைப் பொறுக்கித் தின்று வாழும் சுயமரியாதை உணர்வற்ற துரோகிகளும் ஆதரிக்கின்றனர்.
ஆனால் இந்நிலை வெகுகாலம் நீடிக்காது. இந்தத் துரோகிகளின் பிள்ளைகள் எல்லாம் திராவிட மாடல் அரசின் கல்வித் திட்டங்களின் மூலம் படித்துப் பட்டம் பெற்று பெரு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று நவீன, சுயமரியாதையான வாழ்க்கைக்குள்ளும் நுழைந்து வருகின்றனர். இப்போக்கு இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும், கோயிலை, மதச் சடங்குகளை, பார்ப்பனியத்தை நம்பி வாழும் நிலை முற்றிலும் மாற்றப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் அனைவரும் படித்து உயர் அதிகாரிகளாகி அனைத்துத் துறைகளையும் நிர்வாகம் செய்ய வேண்டும். இந்நிலை ஏற்படும்போது, தமக்கு எடுபிடி வேலை செய்ய ஆள் இல்லாமல், அடிமைப் பஞ்சம் ஏற்பட்டு பார்ப்பனர்கள் அநாதைகளாகிப் போவார்கள்!
26,000 அடி கீழே இறங்கிய போயிங் விமானம்…பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு…