spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் வைக்கும் செக்! திமுக கூட்டணிக்குள் நடக்கும் பனிப்போர்!

ஸ்டாலின் வைக்கும் செக்! திமுக கூட்டணிக்குள் நடக்கும் பனிப்போர்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி சென்றால், திமுகவுக்கு இழப்பு கிடையாது. அவர்கள் தேமுதிக போன்ற சிறிய கட்சியை வைத்து அந்த இடத்தை நிரப்பி விடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மதிமுக பொதுக்குழுவில் திமுகவுக்கு எதிராக நிர்வாகிகள் பேசியது குறித்தும், மதிமுக எம்எல்ஏ வேட்பாளரை ஸ்டாலின் திமுகவில் சேர்த்துள்ளது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- என்னுடைய வாழ்நாளின் இறுதி மூச்சு வரை ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன் என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் வைகோ பேசினார். சூழ்நிலைகள் தான் அரசியல்வாதிகளை இயக்குகிறது. சூழ்நிலைக்கு ஏற்பதான் அவர்கள் முடிவுகளை எடுப்பார்கள். அவர்களை விமர்சிக்க மாட்டேன். அவர்களின் நெருக்கடிகளை புரிந்துகொள்வேன். ஆனால் வைகோ சொன்னதை இந்த நிமிடம் வரை ஏன் நம்புகிறேன் என்றால்? அவர் சுயமரியாதையை மிகவும் மதிக்கக்கூடியவர். கடந்த காலங்களில் தன்னை லேசாக உரசினாலே, அவர் சிலிப்பிக்கொண்டு எடுத்த முடிவுகளை பார்த்திருக்கிறோம். அப்படி அரசியல் ரீதியாக சிலிர்ப்புகிற வயது இன்றைக்கு அவருக்கு கிடையாது.

அவருடைய மகனை கிட்டத்தட்ட வாரிசாக கொண்டுவந்து விட்டார். மற்ற எவ்வளவோ பேர் இருக்கிறபோது, துரை வைகோவுக்கு எம்.பி சீட்டை வாங்கிக் கொடுத்தார். தலைமை கழகத்தில் ஒரு பொறுப்பு போட்டுக் கொடுத்தார். கூட்டணியில் ஒரு இடம்தான் தருவோம் என்கிறபோது, தன் மகனை நிறுத்துகிறார். துரை வைகோ, இன்னும் முழுமையாக தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கற்றுக்கொள்கிறார். துரை வைகோ அமெரிக்காவில் இருந்தவர். இளைஞர், படித்தவர். எல்லாம் சரிதான். ஆனால் மல்லை சத்யா உடன் ஒரு பிரச்சினை வருகிறது. அதை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து இருக்க வேண்டும். இருவருக்கும் இடையே நடைபெற்ற சமாதான கூட்டத்திலேயே அவர் நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சனங்கள் உள்ளன.

துரை வைகோ எழும்ப வேண்டிய உயரம் இன்னும் இருக்கிறபோது, திமுக கூட்டணியில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்று சொல்கிற உணர்வு வைகோவுக்கு இருக்குமா? என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது. எனக்கு தெரிந்து கடந்த 10 வருடங்களாக மதிமுகவில் இருந்து திமுகவில் வந்து சேர்கிறோம் என்று கடிதம் எழுதியும், காத்துக்கொண்டும் இருப்பவர்கள் எவ்வளவோ பிரபலங்கள் இருக்கின்றனர். மதிமுகவில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியே போகிறவர்கள், இன்றும் மதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் திமுகவில் சேர கடிதம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது எனக்கும் தெரியும். ஆனால் வைகோ மீது இருக்கிற மரியாதை காரணமாக ஸ்டாலின் அதை தவிர்த்துக்கொண்டே வந்தார்.

கலைஞர் இருக்கிறபோது கொஞ்சம் தவிர்த்தார். ஸ்டாலின் வந்த பிறகு முழுமையாக அதை அனுமதிக்கவில்லை. தற்போது திடீரென ஒருவர் கட்சியில் சேர்ந்த பிறகுதான் கேள்வி வருகிறது. அப்போது எதற்கும் தயாராகிவிட்டார்களா இவர்களும்? துரை வைகோ, 12 தொகுதிகளை கேட்டதால் பிரச்சினை ஏற்பட்டதா? அவர்களுக்கு 12 தொகுதிகள் கேட்க உரிமை உள்ளது. அதனால் கூட்டணி முறிவு ஏற்பட்டிருக்காது.

நாளைக்கே வைகோ இது குறித்து ஸ்டாலினிடம் கேட்டால், திமுகவில் அவரை சேர்க்கா விட்டால் அவர் வேறு கட்சிக்கு போய்விடுவார் என்பதால் சேர்த்தேன் என்று சமாதானம் செய்வார். ஒரு அதிகார தோரணையில் ஸ்டாலின் இதை அணுக மாட்டார். வேல்முருகன், கோபித்துக்கொண்டாலே அவரை அழைத்து என்ன வேண்டும் என்று பேசுகிற ஸ்டாலின், வைகோவை அவ்வளவு எளிதாக போக விடமாட்டார். வைகோவின் வயது. கடந்த காலங்களில் அவசர கதியில் அவர் எடுத்த முடிவுகள். அதனால் அவர் பட்ட காயங்கள். அந்த காயங்கள் ஏற்படுத்திய இழப்புகள் போன்றவற்றை வைகோ அவ்வளவு சுலபத்தில் மறக்க மாட்டார் என்று நம்புகிறேன். அப்படியே போனாலும், அதிமுக – பாஜக கூட்டணிக்குதான் போவார். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

இருந்தாலும் அவர் அந்த கூட்டணிக்கு சென்றால், பாஜக அணியில் சேர்ந்து வைகோ தமிழ்நாட்டில் ஒரு மேடையில் பேச முடியுமா? தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருக்கும் வைகோ இப்படி ஒரு சுமையை சுமக்க தயாராக இருக்கிறாரா? என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது. எனவே வைகோ அவ்வளவு சீக்கிரத்தில் அந்த முடிவை எடுக்க மாட்டார். முதன் முறையாக அரசியலுக்கு வரும் துரை வைகோ தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக ஸ்டாலினே தலையிட்டு எளிதில் வெற்றி பெறக்கூடிய திருச்சி தொகுதியை, காங்கிரசிடம் இருந்து வாங்கி, மதிமுகவுக்கு கொடுத்தார். அந்த நன்றியை துரை வைகோ அவ்வளவு சீக்கிரத்தில் மறப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுனராஜ் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அனைத்தையும் கேட்டுகொண்டு வைகோ அமைதியாக இருந்துள்ளார். அதுதான் ஸ்டாலினை அந்த முடிவை எடுக்க வைக்கிற அளவுக்கு ஆத்திரமூட்டி இருக்கலாம். வைகோ இருக்கும் மேடையில் ஒருவர் பேசுகிறார். அதை அவர் தடுக்கவில்லை என்கிற கோபம் இருக்கலாம். கலைஞர் திட்டமிட்டே வைகோவை கட்சியில் இருந்து வெளியேற்றி இருந்தாலும், அது தவறு என்று மக்கள் அவரை 1996ல் ஆட்சியில் கொண்டுவந்து உட்கார வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லை.

வைகோவை மேடையில் வைத்துக் கொண்டு ஒருவர் திமுகவை விமர்சிக்கிறார். அதை பார்த்துக்கொண்டு நீங்கள் மவுனமாக இருந்தால், இனியும் நான் எதற்காக பொறுத்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்திருக்கலாம். மதிமுகவில் இன்னும் கொஞ்சம் சத்தம் அதிகமானால், அந்த வேகம் இன்னும் அதிகமாகும். மதிமுகவுக்கு பழைய தொண்டர் பலம் கிடையாது. ஆனால் உணர்ச்சி மிக்க தொண்டர்கள் அங்கே நிறைந்திருக்கிறார்கள். அந்த தொண்டர்களுக்கு இந்த முடிவு ஏற்புடையதாக இருக்காது. அப்படியே மதிமுக, திமுக கூட்டணியை விட்டு போனால் இழப்பு ஸ்டாலினுக்கு கிடையாது. ஆனால் ஒரு அது செங்கலுடன் நிற்கிறதா? என்று ஸ்டாலின் உஷாராக இருக்க வேண்டும்.

விசிக போன்ற கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்பது அவர்களின் உரிமையாகும். அதை எல்லாம் சமாளிப்பதுதான் கூட்டணி கட்சி தலைவரான ஸ்டாலினின் கடமையாகும். கடந்த 2, 3 தேர்தல்களாக அவர் வெற்றிகரமாக சமாளித்துவிட்டார். உண்மையில் இம்முறை அவர் சமாளிக்க போவதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி கட்சிகள் இன்னும் கேட்கத்தான் செய்வார்கள். ஏற்கனவே கொடுத்த தொகுதிகளை குறைத்து விடாதீர்கள். போட்டியிடும் தொகுதிகளை எங்கள் விருப்பத்திற்கு விடுங்கள் என்பது போன்ற பேர வலிமையை அதிகரிக்கவே இதுபோன்று கூட்டணி கட்சிகள் செய்வார்கள். கூட்டணி கட்சிகள் கேட்கிற தொகுதியை முழுமையாக கொடுக்க முடியாது. குறைந்த பட்சம் 150 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் 118 தொகுதியில் வந்து நிற்க முடியும். தற்போது வைகோ வெளியே போனால், தேமுதிக போன்ற சிறிய கட்சியை கூட்டணியில் சேர்த்து சரிசெய்துவிடுவார்கள். வைகோ, பாஜகவுக்கு செல்வது ஒன்றும் புதிது அல்ல. இந்த சூழலை துரை வைகோவால் எதிர்கொள்ள முடியுமா? நேர் எதிர்கொள்கை உள்ள இடத்திற்கு சென்று அவர்களை தோள்களில் சுமக்க முடியுமா? இன்றைக்கு கலைஞரே இருந்தாலும் தற்போதைய பாஜகவை சமாளிக்க முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ