திமுக சட்டமன்றத் தேர்தலுக்கு தாயாராகிவிட்ட நிலையில், அதிமுக இன்னும் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் தேர்தலுக்கு தயாராகவில்லை என்றே தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- 2019ல் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி வைக்கிறபோது, அது ஜெயலலிதாவின் முடிவுக்கு எதிரானது என்று விமர்சனம் வந்தது. அதையும் தாண்டி மீண்டும் மீண்டும் அந்த முடிவு எடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ரிசல்ட் என்ன என்பது போக போக தெரிந்துவிடும். பாஜகவிடம் இந்துக்களின் வாக்கு வங்கி வந்துவிட்டது. அது அதிமுகவுக்கு உதவும் என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். அதையும் 2024 தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டது தவறானது என்கிற வாதம் எழுந்தது. நடப்பு அரசியல் என்பது பாஜக தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கட்சி என்பதாகும்.

அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்தால், தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கிறது என்று திமுக குற்றம்சாட்டுகிறது. அதற்கு நாங்கள் ஏற்கனவே கூட்டணியில் இருப்பவர்கள்தான் என்று அதிமுக பதில் அளிக்கிறது. அதேவேளையில், விஜய்க்கு இது முதல் தேர்தலாகும். அதிமுக, பாஜக உடன் கூட்டணியில் இல்லாமல் இருந்தால், அவர் அதிமுக உடன் கூட்டணிக்கு செல்வது வசதியாக இருக்கும். காங்கிரஸ் உடன் கூட்டணி செல்வதும் வசதியானது தான். ஆனால் பாஜக உடன் கூட்டணி செல்ல முடியாது.

டிடிவி தினகரன், கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறது. கொடநாடு வழக்கு நடைபெற்று 10 ஆண்டுகள் ஆக போகிறது. அதை மட்டும் வைத்து எடப்பாடி பழனிசாமியை எப்படி பலவீனப்படுத்த முடியும். அவர் தான் முதன்மையான குற்றவாளி என்றால் இந்நேரம் அவரை போலீஸ் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி பிடிக்கவில்லை. திமுக அரசுக்கு இன்னும் 4 மாதங்கள் தான் இருக்கும் நிலையில், அதை செய்வது சாத்தியம் கிடையாது. கூட்டணி அமைந்த பிறகு எழுகிற முக்கியமான கேள்வி தமிழ்நாட்டின் அரசியலுக்கு, நலன்களுக்கு யார் ஆட்சி இருந்தால் சரியாக இருக்கும் என்பதுதான். இந்த இடத்தில் ஒரு ஆட்சிக்கட்சி உள்ளது. ஸ்டாலின் முதல்வர். அவர் முதல்வராக தொடருனுமா? அல்லது தொடர வேண்டாமா? என்பதுதான் கேள்வி.

விஜய் தனியாக நிற்கும் முடிவு தவறானது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதிதாக வந்துள்ள தவெக, அதிமுக, திமுக போன்ற கட்சிகளுடன் போட்டியிடும். குறைந்த அளவு வாக்குகளை பெற்றாலும் தனித்து போட்டியிட்டால் தான் கட்சி வரும். அதேபோல், கட்சி வளர்வதற்கு யாருடனாவது கூட்டணி வைக்க வேண்டும். சீமானை போன்று கூட்டணி வைக்காமல் கட்சியை வளர்க்க முடியாது. அத்தகைய முடிவை விஜய் இனிமேல் தான் எடுப்பார் என்று நினைக்கிறேன். அவரது கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை.
இன்னும் அவர்களுக்கே பயிற்சி பத்தவில்லை. இதில் எங்கு கட்சியினருக்கு பயிற்சி அளிக்கப் போகிறார்கள். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டாமா? அவர்கள் பேசுவது எல்லாம் பிழையாக தான் இருக்கிறது. இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, இலவச சைக்கிள் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் பயிற்சி இல்லாததன் காரணமாக வரும் விளைவாகும். கட்சியினரை உற்சாகப்படுத்த இப்படி பேசினால் கைதட்டுவார்கள் என்று நினைக்கின்றனர். இதை பார்க்கின்ற பயனாளிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தும்.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவர் கேட்டை சாத்தவே இல்லை. ஜன்னல் வரை திறந்து வைத்துள்ளார். ஆனால் கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக போன்ற கட்சிகள் தான், பாமக, ஓபிஎஸ் வருவதை கண்டு பதற்றம் அடைகிறார்கள். திமுக கூட்டணியில் ஓபிஎஸ்க்கு 2 இடங்களை தரலாம். எடப்பாடி பழனிசாமி என்ன குற்றம்சாட்டினாலும் அவர்கள் எம்எல்ஏ ஆக வேண்டும். விஜய் தனித்து நிற்கும் முடிவு திமுகவுக்கு லாபம் தான். தங்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் பிரிகிறபோது நன்மை என்றுதான் நினைப்பார்கள். அதேவேளையில் அதிமுக, விஜய், பாஜக கூட்டணி வந்தாலும் என்ன செய்யலாம் என்று மாற்று ஏற்பாடுகளையும் வைத்திருப்பார்கள்.
திமுகவுக்கு கடந்த முறை கோவை போன்ற மேற்கு மாவட்டங்களில் இடங்கள் குறைந்துவிட்டன. அதற்கான காரணங்களில் ஒன்று டிஸ்ட்ரிபியூஷன் நின்றுபோனது தான். 2026ல் அதை சரிசெய்வார்கள். ஆனால் அதிமுகதான் தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் இல்லை என்று தோன்றுகிறது. காரணம் இன்னும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். விஜய் வந்தால் தான் அவர்களால் திமுகவை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியாவது வெளியே போக வேண்டும் என்றால் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது வெளியேறுவார்கள். வைகோ 2011ல் தனக்கு 11 எம்எல்ஏ சீட்டும், ஒரு எம்.பி சீட்டும் தர தயாராக இருந்ததாக சொல்கிறார். இதன் மூலம் மறைமுக அனுசரித்து தங்களுக்கு சீட்டுகளை தர வேண்டும் என்று சொல்கிறார். விஜயுடைய பலத்தை கணிப்பது என்பது சற்று சிரமமானது. 10 முதல் 15 சதவீதம் வரும் என நினைக்கிறேன். டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்கள் சேர்ந்தால், செல்வாக்கு உள்ள சில தொகுதிகளில் வெற்றி சாத்தியம் தான். திமுக ஆட்சிக்கட்சி என்பதால், அவர்களுக்கு சில அட்வான்டேஜ்கள் இருக்கும். அந்த இடங்களில் கவனம் செலுத்தி வெற்றி பெற முயற்சிப்பார்கள். இதேபோல், பாஜக எத்தனை இடங்கள் கூடுதலாக வாங்குகிறதோ, அதை தனக்கு சாதகமாக திமுக நினைக்கும். இப்படி பல கணக்குகள் இதில் இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


