தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதில் சூழ்ச்சி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் மூலம் தமிழ்நாட்டில் 77 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டு டிச.11 வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்காதவர்கள ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கினால் அது சரியானது. ஆனால், மிரட்டுகிற வேலையை மட்டும் செய்கிறார்கள். சென்னையில் மட்டும் 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்கள். அதில் 1.25 லட்சம் பேர் இறந்துவிட்டனர். 8.39 லட்சம் பேர் இடம்பெயர்ந்துவிட்டனர் என்று தகவல் வெளியாகிறது.
இந்த விவரங்களை தற்போது வெளியிடுவது ஏன்? இதன் மூலம் வாக்காளர்கள் நீக்கம் செய்வதற்கு நம்மை மனரீதியாக தயார்படுத்துகிறார்கள். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் டிசம்பர் 11ஆம் தேதி முடிந்ததும், டிசம்பர் 14ல் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர். அன்றைக்கு வரும் விஷயங்களை தொகுத்து வழங்கினால், நாம் ஆராயலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் 77 லட்சம் பேர் குறைவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம் என சொல்வது என்ன அர்த்தம்? ஏன் இப்படி ஒரு செய்தி கசியவிடப்படுகிறது?

பீகாரில் இறந்துவிட்டதாக கூறி 22 லட்சம் வாக்காளர்களை நீக்கினார்கள். அப்படி நீக்கப்பட்டவர்களின் விவரங்களையும் வெளியிட மறுத்தார்கள். பின்னர் உச்சநீதிமன்றம் வாக்குச்சாவடி வாரியாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட்டதால், அவற்றை வெளியிட்டனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் வாக்குச்சவாடி வாரியாக விவரங்களை வெளியிட்டால், அரசியல் கட்சியினர், பொதுநல விரும்பிகள் என்று எல்லோரும், இறந்ததாக கூறி நீக்கப்பட்ட உண்மையான வாக்காளர்களை கண்டுபிடித்து போய் நிறுத்துவார்கள். என்ன செய்தாலும் நீதிமன்றத்தில் ஒன்றும் செய்ய முடியாதுதான். நீதிமன்றங்கள் அப்படியாகதான் இருக்கின்றன.
குறைந்தபட்சம் உண்மையை மக்களிடம் கொண்டுபோகலாம். அந்த வாய்ப்பே இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சிதான் இது. முன்கூட்டிய இப்படியான தகவலை வெளியிடுவதன் நோக்கம் என்ன? சென்னையில் இடம்பெயர்ந்தவர்கள் 8.39 லட்சம் பேர் என்றால் யார் அவர்கள்? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக போகிறது. நாம் பார்க்கும்போது அதில் இருப்பது யார்? இல்லாதது யார்? என்று கண்டுபிடித்து கூறினால் அவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பார்கள்.

தேர்தல் ஆணையம் தற்போது பூர்த்தி செய்து ஒப்படைக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஆனால் எங்கோ ஓரிடத்தில் குறைக்கப் போகிறார்கள். எங்கோ ஓரிடத்தில் சேர்க்கப் போகிறார்கள். அது எங்கு என்று நமக்கு தெரியாது. அழித்தல் என்பதை விட சேர்த்தல் என்கிற ஆபத்து அதிகம் இருப்பதை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். இதற்கான வசதிகள் தேர்தல் ஆணைய இணையதளத்திலேயே உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் மீது வழக்கோ, விசாரணையோ இதுவரை கிடையாது. அதனால் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, திருட்டுத்தனம் செய்கிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிய பிறகு எவ்வளவு பேர் நீக்கப்பட்டனர் என்கிற விவரங்களை வாக்குச்சாவடி வாரியாக வெளியிடுங்கள். அதற்கு பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தற்போது ஏன் செய்தியை பரவவிடுகிறீர்கள்? எனவே இது உள்நோக்கம் கொண்டது. மற்றொன்று மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது. அப்படி இல்லாவிட்டால் அண்ணாமலை, நயினார் போன்றவர்களை வைத்து தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக பேச வைப்பார்கள்.

ஒட்டுமொத்தத்தில் மக்களை நம்பி தேர்தலை சந்திக்க துணிச்சலே இல்லாத கட்சி பாஜக. அவர்களுக்கு ஒத்து ஓத எடப்பாடி பழனிசாமியில் இயங்கக்கூடிய அதிமுக என்கிற கட்சி. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இறந்தவர்களை நீக்குவதற்காக தான் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை என்று சொல்கிறார். அப்போது சென்னையில் 8.39 லட்சம் பேர் நீக்கப்படுவதற்கு அவர் என்ன விளக்கம் அளிப்பார்? ஜெயக்குமார், விஜய் போன்றவர்களுக்கு எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தையே நிரப்ப தெரியாது. இவர்கள் ஏன் பேசுகிறார்கள்? எடப்பாடி பழனிசாமி விண்ணப்பத்தை முறையாக விண்ணப்பித்து உள்ளாரா? என்று பாருங்கள். அவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினால், அதுதான் சாக்கு என்று பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி விடுவார்கள். அபாயகரமான விஷயங்களை எல்லாம் பேசுகிறார் ஜெயக்குமார்.

பொதுமக்கள் தயவு செய்து, எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை டிச.11-க்குள் நிரப்பி அளித்துவிட வேண்டும். அப்படி அளிக்காவிட்டால் நீங்கள் வாக்காளர் பட்டியலில் இருக்க மாட்டீர்கள். அரசு நலத்திட்டங்கள் உங்களுக்கு கிடைக்காது. ரேஷன் அட்டையில் இருந்து உங்களை நீக்கிவிடுவார்கள். அதற்காக தான் மோடி இவற்றை எல்லாம் செய்கிறார். நாளைக்கு நீங்கள் இந்திய குடிமக்களே கிடையாது என்று சொல்லி விடுவார். அதற்காக தான் அமித்ஷா இருக்கிறார். எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் பார்ப்பதற்கு காகிதம் போல இருக்கலாம். ஆனால் நம்முடைய தலையெழுத்தை அவர்கள் மாற்றி நிர்ணயிக்கப் பார்க்கிறார்கள்.
எனவே விண்ணப்பத்தை கொடுத்துவிடுங்கள். எஞ்சியவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் ஒன்றரை மாத அவகாசத்தில் விண்ணப்பங்களை அளிக்காமல் இருக்கக்கூடாது. இந்த 6 நாட்களிலாவது விண்ணப்பங்களை திருப்பி வழங்கிவிடுங்கள். அதற்கு பிறகு விண்ணப்பங்களை வழங்கலாம் என்று நினைக்காதீர்கள். அவர்கள் வாக்காளர்களை நீக்குவதற்காகவே இந்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். அவர்களின் நோக்கம் என்பது எவ்வளவு பேரை நீக்க முடியுமோ நீக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு பேரை சேர்க்க முடியுமோ, அவ்வளவு பேரை சேர்ப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


