விஜய் என்கிற நட்சத்திர பிம்பத்தை உருவாக்கி, முதலமைச்சர் ஆகவிட வேண்டும் என்கிற பதவி வெறிதான் விஜயிடம் உள்ளது. அதனால்தான் அவர் பிரச்சாரத்தில் இத்தனை பேர் கொல்லப்பட்டபோதும் அவர்களுடன் நிற்க வேண்டும் என்று தெரிய வில்லை என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் குற்றம்சாட்டியுள்ளார்.


கரூர் கூட்டநெரிசல் துயரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி நடைபெற்றிருக்கிறது. செந்தில் பாலாஜி, திமுக ஏதோ திட்டமிட்டு சதி செய்துவிட்டனர் என்று தவெக, பாஜக, அதிமுகவினர் பேசுகின்றனர். நேற்று முதல் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். கரூரில் கூட்ட நெரிசலில் மூச்சு திணறி 41 பேர் இறந்துள்ளது, இயற்கையாக நடைபெற்ற விபத்து அல்ல. மனிதர்களால் திட்டமிட்டு செயற்கையாக நடைபெற்றது. திருச்சியில் விஜய் முதன் முறையாக பிரச்சாரம் செய்கிறபோது வேண்டும் என்றே ஏர்போர்ட்டில் இருந்து மரக்கடை வரை வேண்டும் என்றே, ஆட்களை கூட்டிவைத்து போக்குவரத்துநெரிசலை ஏற்படுத்தினர். மற்ற கட்சிகளுக்கு வராத கூட்டம் எனக்கு வருகிறது. எனக்காக எல்லோரும் காத்து நிற்கிறார்கள் என்று மெசேஜ் சொல்ல விஜய் விரும்புகிறார். தன்னுடைய நாயக வழிபாடு, பிம்ப வழிபாட்டை உச்சத்திற்குகொண்டு செல்வதற்கு விஜய், திட்டமிட்டு முயற்சி செய்கிறார்.
விஜய், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கோ, பிரதமர் மோடிக்கோ இதுபோன்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்குமா? என்று கேட்கிறார். இதற்கெல்லாம் பயப்படும் ஆட்கள் தாங்கள் அல்ல என்று ரசிர்களையும் உசுப்பேற்றி விட்டார். இன்றைக்கு அதற்கு மாற்றாக அரசாங்கம் போதிய பாதுகாப்பு வழங்க வில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். அரசுக்கு பொறுப்பு இருப்பதால் தான் விஜயின் கூட்டத்திற்கு நிபந்தனைகள் விதிக்கிறார்கள். ஆனால் அதை விஜய் திசை திருப்புகிறார்.

கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்டு அதிகளவிலானோர் உயிரிழந்துள்ளனர் என்று செய்தி வருகிறபோது அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததில் சதி இருப்பதாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது. கரூரில் தொடக்கத்தில் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் மறுநாள் காலையில் முதல்வர் செல்வதாக இருக்கிறது. பின்னர் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் தனி விமானம் பிடித்து முதல்வர் கரூர் செல்கிறார். இவை எல்லாம் அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளாகும். முதலமைச்சர் தனது சமூக வலைதள பதிவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுவதால் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர்களை அனுப்பியுள்ளதாக சொல்கிறார்.
அரசு துரிதமாக செயல்பட்டதன் காரணமாக 100 பேருக்கு மேல் காப்பாற்றி விட்டார்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள்தான். விஜய் பேசுகிறபோதே மக்கள் இறக்கும் துயரம் நடத்துள்ளது. இது விஜய்க்கோ, ஆதவ் அர்ஜுனாவுக்கோ, புஸ்ஸி ஆனந்துக்கோ தெரியாமல் இல்லை. கண்டிப்பாக அவர்களுக்கு தகவல் கிடைத்திருக்கும். விஜய் கூட்டத்தை செயற்கையாக டக்கென்று முடிக்கிறார். திருச்சியில் தொடங்கி இந்த 2, 3 மாவட்டங்களில் நீங்கள் செய்த பிரச்சாரத்துக்கு, குருகிய இடத்தில் மக்களை குவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நீங்கள் தான் நடத்தியுள்ளீர்கள். அதற்கு முன்னதாக எடப்பாடி கூட்டம் நடத்தினார். அப்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா? இதை விஜய் மற்றும் அவர்களுடைய கட்சியினர் திட்டமிட்டு செய்கிறார்கள்.

விஜய் பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான். பிரச்சார கூட்டத்தில் மரணம் நடக்கிறது. மக்கள் மயங்கி விழுகிறார்கள் என்று தகவல் கிடைத்த பின்னர்தான் ஆம்புலன்ஸ்கள் உள்ளே வருகிறது. மாவட்ட நிர்வாகம் துரித கதியில் செயல்பட்டதை எதிர்க்கட்சிகள் சதி என்று சொல்கிறார்கள். அதேநேரத்தில் அவர்கள் துரிதமாக செயல்பட்டிருக்காவிட்டால், அரசு அலட்சியமாக உயிர்களை சாக விட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டுவார்கள். விஜய் கூட்டத்திற்கு 20 ஆயிரம் பேர் வருகை தந்த நிலையில், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு 180 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது. தொண்டர்களை கட்டுப்படுத்தியதாக இருக்கட்டும். அவற்றை எல்லாம் காவல்துறையினர் செய்தனர். விஜய், வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள். விஜய் மீது இவ்வளவு பற்று வைத்துள்ளவர்கள் கூட்டத்தில் இப்படி யாராவது செருப்பு வீசுவார்களா? அப்படி வீசிவிட்டு ஒருவர் தப்பிச் செல்ல முடியுமா? அப்போது அது அல்ல. ரசிகர்கள் இயற்கையாக ஏதோ ஒரு நோக்கத்திற்காக வீசி இருக்கலாம் என்பது உறுதியாகிறது. அரசின் துரித நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கிறது.

இவர்களை பொருத்தவரை விஜய் என்கிற நட்சத்திர பிம்பத்தை உருவாக்கி, நாம் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற சுயநலம் கலந்த பதவி வெறிதான், விஜயிடம் உள்ளது. அதனால்தான் அவர் பிரச்சாரத்தில் இத்தனை பேர் கொல்லப்பட்டபோதும் அவர்களுடன் நிற்க வேண்டும் என்று விஜய்க்கு தெரிய வில்லை. குருகிய இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை திணிக்க வேண்டும். அவர்களிடம் பன்ச் லைன் பேச வேண்டும். இதை திட்டமிட்டு விஜயும், அவர் கட்சியின் தலைமை நிர்வாகிகளும் செய்கிறார்கள். இதுதான் முதன்மையான குற்றம்.
காவல்துறையினரிடம் அனுமதி கேட்கிறபோது 10 ஆயிரம் என்று சொல்லிவிட்டு 30 ஆயிரம் பேரை எப்படி அவர் கூப்பிட்டு வந்தார். ரசிகர்கள் இவ்வளவு அட்டூழியங்களை செய்வதற்கு காரணம் என்றால் விஜயே அவர்களை ஊக்குவிப்பதுதான். காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று வாய் வார்த்தையாகவே சொல்கிறார். தொடர்ந்து இப்படி செய்வதன் ஒரு முடிவுதான் கரூரில் நடைபெற்ற துயரமான சம்பவமாகும்.

விஜய் தரப்பு கேட்ட லைட்ஹவுஸ் ரவுண்டானா, நகரின் மையப்பகுதியில் உள்ளது. அங்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும். வேலுசாமிபுரத்தை விட குறுகிய இடம்தான் லைட்ஹவுஸ் ரவுண்டானா. ஆனால் ஸ்டாலின், உதயநிதி போன்றவர்கள் பேசிய இடம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா. அதை விஜய் தரப்பு கேட்கவில்லை. லைட்ஹவுஸ் ரவுண்டானாவை விஜய் கூட்டத்திற்கு கொடுக்காதது மிகவும் நல்லது என்று பல பத்திரிகையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
விஜய் கூட்டத்திற்கு நீதிமன்றமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு 50 மீட்டர் முன்னதாக காவலர் குடியிருப்பு இருந்தது. அங்கேயே பேசுங்கள் என்றும் காவல்துறை சொன்னதாகவும், அப்படி பேசியிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. கூட்டம் அதிகம் உள்ள நிலையில், விஜய் கூட்டத்தை கூட்டி வந்தார். கூட்டம் அதிகமாக இருப்பதால் அதை ரத்து செய்ய அறிவுறுத்தினார்கள். ஆனால் 5 நிமிடங்கள் தான் பேசுவோம் என்று அனுமதி பெற்று சென்றுள்ளனர். அப்படி விஜய் வாகனம் உள்ளே வந்த பிறகுதான் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். போலீசார் கடைசி நேரத்தில் இவ்வளவு செய்தபோதும், அவற்றில் ஒன்றைக்கூட விஜய் தரப்பு ஏற்றுக்கொள்ள வில்லை.

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்திற்கு காரணமான விஜயை விமர்சிக்காமல், எதிர்க்கட்சிகள் எல்லாம் திமுகவை விமர்சிப்பது ஒரு சதியாகும். பாஜகவை பொருத்தவரை விஜய்க்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கிறபோதே சந்தேகம் ஏற்பட்டது. திமுக எதிர்ப்பில் தற்போதைக்கு விஜய்தான் ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடி,, அண்ணாமலை, நயினார் போன்றவர்கள் பேசுவதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. விஜய் பேசுவதுதான் டாப் கியரில் போகிறது. அவர் திமுகவை தொடர்ந்து பேச வேண்டும் என்றால், விஜய்க்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து அவரை காப்பாற்ற வேண்டும். அதற்காக மொத்த குற்றச்சாட்டுகளையும், திமுக அரசு மீதும், செந்தில் பாலாஜியின் மீதும் சுமத்தி அவர்கள் காரணம் என்று பாஜகவினர் ஒரு பக்கம் செய்கிறார்கள்.
அதிமுக, மற்றும் தவெகவினர் செய்கிறார்கள். இதன் மூலம் விஜயை நம்முடைய பேரத்தில் படிய வைக்க முடியுமா? என்று ஒரு முயற்சியும் நடைபெறுகிறது. அண்ணாமலையின் பேச்சு, மோடியின் இரங்கல், நிவாரணத் தொகை அறிவித்தது. நிவாரணம் வழங்க நிர்மலா சீதாராமன் சென்றது போன்றவை எல்லாம், விஜயை கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ள முடியுமா? என பாஜக முயற்சிக்கிறது. விஜயும் இதை மறுக்க முடியாது. அவருடைய மொத்த பிம்பமும் காலியாகிவிட்டது. 41 பேர் மரணத்திற்கு பதில் சொல்வதில் இருந்து தப்பிக்க பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதுதான் அவருக்கு நல்லது. அதனால்தான் தவெக சார்பில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் சிபிஐ விசாரணை வேண்டும். செந்தில் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


