தன்னுடைய சுய நலத்திற்காக SIR-ஐ நடத்துகிற பாஜகவை கண்டிக்காத விஜய், வாக்காளர்களுக்கு உதவிடும் திமுக மீது குற்றம் சாட்டுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.


SIR நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் சுமன் கவி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- SIR நடவடிக்கையை கண்டித்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக எதிரான பிரதான கட்சியாக தங்களை காட்டிக் கொள்ளும் த.வெ.க தலைவர் விஜய், SIR குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்கிறார். SIR நடவடிக்கையால் இவ்வளவு களேபரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, திடீரென சொன்னார்கள்… எனக்கு கேட்டு ஷாக் ஆகிவிட்டது என்று விஜய் சொல்கிறார். இது எவ்வளவு கேவலமான அரசியல்.
SIRக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பேசிய திருமாவளவன், SIR என்பது குடியுரிமை சட்டத்தை தேர்தல் ஆணையம் மூலம் மறைமுகமாக செயல்படுத்துவது என்று சொல்கிறார். ஆனால் விஜய் SIR தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் ஒரு இடத்தில் கூட தேர்தல் ஆணையம், பாஜக குறித்து பேசவே இல்லை. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகாரில் தொடங்கிய போதே தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இவ்வளவு நடவடிக்கைகளும் நடந்துகொண்டிருக்கும் போது, இவர்கள் மிகவும் தாமதமாக வருகிறார்கள்.

SIR நடவடிக்கை நடக்கிறபோது அரசியல் கட்சிகள் தங்களுடைய வாக்குச்சாவடி முகவர்களை அனுப்பலாம். தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் அனுப்பலாம். ஆனால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது. திமுக, பாஜக போகிறது. அதேநேரத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் போக வேண்டியது தானே. SIR நடவடிக்கையில் புதிதாக வாக்காளர் பட்டியலையே தயாரிக்கிறார்கள். பணிச்சுமை தாங்காமல் அதிகாரிகள் எல்லாம் திண்டாடி போயிருக்கிறார்கள். கேரளாவில் அனீஸ் ஜார்ஜ் என்பவர் இறந்தே போய்விட்டார். தனிப்பட்ட பாஜக என்கிற கட்சியின் சுயநலத்திற்காக இத்தனை பேர் அழுத்தத்திற்கு உள்ளாகி கொண்டிருக்கிறார்கள். வாக்குச்சாவடி அலுவலர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகி கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு, கேரளாவில் உள்ள வாக்காளர்கள் அல்லோகலப் பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் சொகுசாக பனையூரில் உட்கார்ந்துகொண்டு திமுக இதை செய்கிறது என்று சொல்கிறீர்கள். தற்கொலை செய்துகொண்ட அனீசுக்கு, பிஎல்ஓக்கள் உதவி செய்துள்ளனர். எனினும் பணிச்சுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டித்து கேரளாவில் அரசு ஊழியர்கள் பணியை புறக்கணித்துள்ளனர். தமிழ்நாட்டிலும் போராட்டம் நடத்த உள்ளனர். ஏன் இதை செய்கிறீர்கள் என்று பாஜகவை ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஆனால் உதவி செய்கிற திமுகவை பார்த்து நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் என்றால் நீங்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, நம்முடைய விர்ச்சுவல் வாரியர்கள் எல்லாம் களத்தில் நில்லுங்கள் என்று சொல்கிறார். தவெக ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் தான், தேர்தல் ஆணையம் அவர்களை எந்த கூட்டத்திற்கு அழைப்பது கிடையாது. அதனால் தேர்தல் ஆணையக் கூட்டங்களில் பங்கேற்க தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். அதுவும் தவறாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். SIR நடவடிக்கை குறித்து பிரபலங்கள் மூலம் ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தால் உடனடியாக மக்களிடம் போய் சேர்ந்திருக்கும்.
விஜய் பேசிய ஒரே நாளில் 3 கோடி பேரிடம் போய் சேர்ந்துவிட்டது என்று ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். ஆனால் SIR நடவடிக்கைக்காக வாக்காளர் பட்டியலையே முடக்கி, புதிய பட்டியலை உருவாக்குவதாக மக்களுக்கு இவ்வளவு நெருக்கடியை கொடுக்கிற தேர்தல் ஆணையம் குறித்து பேச அவருக்கு வார்த்தையே கிடைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களை திசை திருப்புகிற வேலையை அவர்கள் செய்கிறார்கள்.

SIR நடவடிக்கைக்கு உதவி செய்ய திமுக, பாஜக மட்டும் இன்றி மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் உதவி மையங்களை அமைத்து உதவி வருகிறார்கள். அதை போன்று தவெக செய்யவில்லை. மாறாக அறிவுறுத்தல் தான் செய்கிறார்கள். இதில் மற்றொரு சிக்கல் என்ன என்றால்? SIR விண்ணப்பங்களை நிரப்புகிற ஆற்றல் தங்களுக்கே இல்லை என்று பிஎல்ஓக்கள் திணறுகிறார்கள். அவர்களுக்கு உதவிடவோ, மக்களுக்காக களத்திற்கு வந்து நிற்கவோ தயாராக இல்லாத விஜய், வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு அறிக்கை விடுகிறார். அவருடைய ஆட்கள் ரோட்டில் நின்று கத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தவெக கூட்டத்தில் பேசிய ஒரு பெண், தான் வியாசர்பாடி என்று சொல்கிறார். தனது வீட்டிற்கு உதவி செய்வதற்காக வந்த திமுகவினரை வெளியேற்றிவிட்டதாகவும் சொல்கிறார். அந்த பெண் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் அவர்கள் உதவி தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு அவர்களின் உதவி தேவைப்படும். தன்னுடைய முகத்தை பார்த்தாலே தான் வியாசர்பாடி என்று தெரியும் என அப்பெண் சொல்கிறார். ஆனால் மோடி அரசு நினைத்தால், ஆப்பிரிக்காரர்களுக்கு வாக்குரிமை கொடுக்க முடியும். பிரேசில் பெண்ணிற்கே குடியுமை கொடுத்து வாக்காளர் ஆக்கியுள்ளனர். ஆனால் உங்களுக்கு தர மாட்டார்கள். அது குறித்து உங்களுக்கு பேச தெரியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
