எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிஎல்ஓ-க்களுக்கு ஆதரவாக பணியாற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் தவெகவினர் அவதூறு பரப்புவதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.


எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டித்து வருவாய் துறை அதிகாரிகள் போராட்டம் அறிவித்துள்ளதன் பின்னணி குறித்து இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை உடனடியாக நிறுத்திடக் கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. தேர்தல் காலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. வாக்காளர்களிடம் இருந்து ஆதாரங்களை கேட்பது சட்ட விரோதமானது என்று திமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் எஸ்.ஐ.ஆருக்கு தடை விதிக்காமல், மத்திய அரசு பதில் அளிக்க 2 வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது.
எனவே நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் இருக்கிறது. இந்த பணிகளில் பயன்படுத்தப்படுகிற பிஎல்ஓக்கள் என்கிற அரசின் கடைநிலை ஊழியர்கள் பணிச்சுமை மிகவும் அதிகமாக உள்ளதாகவும், தங்களால் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்து இன்று வேலை நிறுத்தம் செய்கின்றனர். கிராம உதவியாளர்கள், விஏஓ, அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் தரப்பில் தங்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தமிழிசை, எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் இதெல்லாம் ஒரு பெரிய வேலையா? என்று அரசு ஊழியர்களின் பணிச்சுமையை ஏளனமாக பேசுகிறார்கள். அரசு ஊழியர்கள் தங்களுக்கு முழுமையான பயிற்சி வழங்குவதுடன், எஸ்ஐஆர் பணிகளுக்காக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இது 100 சதவீதம் நியாயமான கோரிக்கையாகும். அவர்கள் எஸ்ஐஆர் பணிகளை முழு நேரமும் செய்வதுடன், கடும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் 92 சதவீதம் விண்ணப்பங்களை விநியோகம் செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தமிழ்நாடு முழுவதும் களஆய்வு நடத்தியுள்ளது. அதில் எஸ்.ஐ.ஆரில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பட்டியலிட்டுள்ளனர். அதில் பிஎல்ஓக்கள் தங்களுக்கு உணவு அருந்தவோ, இயற்கை உபாதைகளை கழிக்கவோ கூட முடியவில்லை என்று சொல்கிறார்கள். இப்படி பொதுமக்கள், பிஎல்ஓக்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளை தொகுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு மெயில் செய்தால் அவரிடம் இருந்து எந்த பதிலையும் பெற முடியவில்லை.

கேரளாவில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டிருந்த அனீஸ் ஜார்ஜ் என்பவர் வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அரசுப்பள்ளியில் உதவியாளராக பணிபுரியும் ஜார்ஜ்க்கு, அறிமுகம் இல்லாத இடத்தில் பணிக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அங்குள்ள வாக்குச்சாவடி முகவர்களும் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கேளர அரசு ஊழியர்கள் நேற்று அம்மாநிலத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் தவெகவினர், எஸ்ஐஆரை ஸ்டாலின் தான் அறிமுகப்படுத்தினார் என்றும், தவெகவின் வாக்குகளை நீக்க திமுக உருவாக்கிய சதி என்றும் கட்டமைக்கிறார்கள்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கை, தவெகவினர் நடத்திய போராட்டம் என எதிலும் இதற்கு காரணம் பாஜக, தேர்தல் ஆணையம் என்று சொல்லவே இல்லை. மாறாக எஸ்ஐஆர் என்ற ஒன்றை யாரோ அறிமுகப்படுத்தி விட்டதாகவும், அதை பயன்படுத்திக் கொண்டு தவெக வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க சதி செய்வதாக குற்றமசாட்டுகிறார்கள். பிஎல்ஓக்கள் எல்லாம் திமுகவினர் என்கிற அளவுக்கு அவர்கள் பேசுகிறார்கள்.

எஸ்ஐஆர் நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தானில் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பணிச்சுமை காரணமாக அங்கன்வாடி பணியாளர் நமீதா ஹன்ஸ்தார் என்பவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை தொடங்கியபோது, 65 லட்சம் பேரை நீக்கிவிட்டு, அதற்கான காரணத்தை சொல்ல மறுத்துவிட்டனர். பின்னர் உச்சநீதிமன்றத் தலையீடு காரணமாக 20 லட்சம் பேரை சேர்த்தார்கள். இறுதி வாக்காளர் பட்டியலில் மேலும் 3 லட்சம் பேரை சேர்த்தார்கள். ஆனால் எதன் அடிப்படையில் சேர்த்தார்கள் என்று சொல்லவில்லை.

பிரதமர் மோடி, தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்லியுள்ளார். மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் பாஜகவினர் சந்தில் கூட வாக்களிக்க முடியாதபடி திமுகவினர் களப்பணி ஆற்றுகிறார்கள். அதை தாண்டியும் அடாவடியாக பலருடைய பெயரை நீக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், பாஜகவினரே யோசிக்க முடியாத வகையில் தவெகவினர், விவரம் அறியாத இளைஞர்கள் மத்தியில் பொய்யை பரப்புகிறார்கள். திமுக எவ்வளவு விழிப்புடன் பணியாற்றினாலும், பாஜகவின் கைக்கூலிகளாக செயல்பட ஒரு பெரிய கூட்டம் உள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டம் மூலம் எஸ்ஐஆர் குறித்து நாடு முழுவதும் தமிழ்நாடு அம்பலப்படுத்த வேண்டும். அவர்களின் போராட்டத்திற்கு நமது முழு ஆதரவை வழங்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
