அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக திருப்பூர் ஜவுளித் தொழில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி விதித்துள்ள நிலையில், இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படபோகும் பாதிப்புகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- இந்திய பொருட்கள் மீது அமெரிக்க விதித்த 50 சதவீத இறக்குமதி வரிக்கு முதல் பாதிப்பு என்ன என்றால் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த நம்முடைய கடல் உணவுகள் திரும்பி வந்துவிட்டது. 50 சதவீத வரிகளுடன் பொருட்கள் வரும்போது அதை தாங்கள் வாங்க முடியாது என்பதால் அமெரிக்கா இறக்குமதியாளர்கள், அதை வேண்டாம் என திருப்பி அனுப்பியிருப்பார்கள். இதில் வருந்தத்தக்க விஷயங்கள் நிறைய உள்ளது. இந்தியாவில் ஜவுளித்துறை எவ்வளவு பெரிய துறை என்று நம்மில் பலருக்கும் தெரியாது. இந்தியாவில் வேளாண்மை தொழிலுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான பணியாளர்கள் பணிபுரிகிற துறை, ஜவுளித்துறையாகும். நாட்டில் ஏரக்குறைய 21 சதவீதம் பணியாளர்கள் இந்த துறையில் பணிபுரிகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி உலகளவில் ஜவுளித் துறையில் மட்டும் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது. இது 2030ஆம் ஆண்டில் 3.04 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 2.3 சதவீதம் ஜவுளித்துறை பங்களிப்பு செய்கிறது. நமக்கு ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயில் சுமார் 12 சதவீதம் ஜவுளித்துறை மூலம் கிடைக்கிறது.
அமெரிக்க வரி உயர்வால், தமிழ்நாட்டில் திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் கடுமையாக பாதிக்கப்படும். தமிழ்நாட்டை இந்தியாவின் ஜவுளித்துறை பவர்ஹவுஸ் என்று சொல்வார்கள். அதற்கு காரணம் இந்தியாவின் மொத்த பஞ்சு நூல் உற்பத்தியில் 40 சதவீதத்தை தமிழ்நாடு வழங்குகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை உற்பத்தி துறைகளில், 14 சதவீதம் ஜவுளித்துறை சார்ந்த தொழில்க்ள் மூலம் கிடைக்கிறது. நாட்டில் மொத்தள்ள 13 ஆயிரம் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் , 6500 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அமெரிக்காவின் வரிவிதிப்பு காரணமாக குஜராத் போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பு குறைவாகவே ஏற்படும். அதற்கு காரணம் அவர்கள் பஞ்சு கொள்முதல் செய்து, அதற்கு பிறகு நூல் தயாரிக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவுக்கு பெரும்பான்மையாக ஆயத்த ஆடைகளை தான் ஏற்றுமதி செய்கிறோம். அதில் திருப்பூரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இதற்கு பாதிப்பு என்பது உடனடியாக இருக்கும். அதற்கு காரணம் 50 சதவீத வரி விதிப்பு போட்ட அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு 19 சதவீதமாக வரியை குறைத்துள்ளனர். இவற்றை வைத்து பார்க்கிறபோது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது.
இந்தியா மீதான வரிவிதிப்புக்கு முக்கிய காரணமாக அமெரிக்கா குறிப்பிடுவது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதுதான். எண்ணெய் வாங்க ரஷ்யாவுக்கு கொடுக்கப்படும் பணத்தை வைத்து, அவர்கள் உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபடுவதாக சொல்கிறார்கள். ஒரு நாட்டுடன், இன்னொரு நாடு வர்த்தகம் செய்வதை நீங்கள் எப்படி குறை சொல்லலாம் என்று இந்தியா கேட்கலாம். ஆனால் அவர்கள் சொல்கிற ஒரு கருத்து உதைக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிற கச்சா எண்ணையின் பயன்கள் இந்திய மக்களுக்கு செல்கிறதா? என்று அமெரிக்கா கேள்வி எழுப்புகிறது. ஆனால், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயில், பெரும் பகுதி அம்பானி போன்ற நபர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் அதை சுத்திகரிப்பு செய்து, பல மடங்கு லாபத்திற்கு பெட்ரோல், டீசலை விற்பனை செய்கிறார்கள். அதை ஐ.ஓ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தால் நமக்கு மலிவான விலையில் எரிபொருட்கள் கிடைத்திருக்குமே. ஏன் மத்திய அரசு அப்படி செய்யவில்லை?
இந்தியா என்ன பெரிய ஜனநாயக நாடு. ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதில் பெரும்பான்மையானதை விற்பனை செய்கிறீர்கள். அதில் கிடைக்கும் பெரிய அளவிலான லாபத்தை ரஷ்யாவிடம் கொடுக்கிறீர்கள். அதன் மூலம் ரஷ்யா, உக்ரைனுடன் போரிடுகிறது என்று அமெரிக்கா சொல்கிறது. நீங்கள் வாங்குகிற கச்சா எண்ணெயை-ஐ மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்தீர்களா? இல்லையே. சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக இதனை பயன்படுத்துகிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறபோது, நம்மிடம் பதில் இல்லை. இது நமது மத்திய அரசின் பொருளாதார கொள்கையாகும். இதுபோன்று 2 அம்பானிகளை வளர்த்துவிட்டோம் என்றால் நாட்டின் ஜிடிபியில் பெரும்பகுதியில் அவர்கள் கொடுப்பதாக இருக்கும். ஆனால் அவர்கள் ஜிடிபிக்கு கொடுக்கிறார்கள் என்பதற்காக நாட்டின் கடைக்கோடி மக்களுக்கு என்ன வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்?. வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசின் பொருளாதார கொள்கைகளில் இதுபோன்ற தவறான கொள்கைகளும் உள்ளன.
இன்றைக்கு உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது உண்மை. அதனால் நாம் இன்றைக்கு சீனாவிடம் போய் நிற்க வேண்டி உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து நாம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். அப்படி கொள்முதல் செய்கிற எண்ணெயில் பெரும்பகுதியை நம்முடைய மக்கள் பயன் பெறும் வகையில் பயன்படுத்தினார்கள் என்றால், மத்திய அரசை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் அப்படிபட்ட ஒரு மனநிலை மத்திய அரசிடம் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்கா விதித்துள்ள இந்த 50 சதவீத வரி உயர்வு உடனடியாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது. தமிழ்நாடு பல ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், திருப்பூரில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். உலகம் இன்றைக்கு ஒன்றாகி விட்டது. அதனால் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாம் அனைத்து தரப்புடனும் நல்லுறவை வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் பாதிக்கப்பட போவது மக்கள் தான். அரசியல்வாதிகள் அல்ல.
மோடி பிரதமராக வருவதற்கு முன்னர், இந்தியாவின் வெளியுறவுக்கு கொள்கை என்பது விவகாரங்களை பொருத்ததாக இருந்தது. அதன் அடிப்படையில் தான் இந்தியா ஒரு நாட்டுடன் நட்புறவை வளர்க்கும். அல்லது உறவு வைக்க தயங்கும். ஆனால் மோடி ஒன் டூ ஒன் ஈக்குவேஷனில் சரிசெய்து விடலாம் என்று நினைத்தார். டொனால்டு டிரம்ப் உடன் அப்படியான உறவை தான் வைத்திருந்தார். இன்றைக்கு என்ன ஆனது? பஹல்காமில் தாக்குதல் நடைபெற்றபோது எந்த நாடாவது பாகிஸ்தானின் தீவிரவாதத்தை கண்டித்ததா? பொதுவாக தீவிரவாத்தை எதிர்ப்போம் என்றார்கள். எனவே பாஜக அரசு எதில் தவறு செய்திருக்கிறோம் என்று உட்கார்ந்து யோசிக்க வேண்டும். அந்த தவறுகளை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். இல்லா விட்டால் இதுபோன்ற ஒரு பிரச்சினை வருகிறபோது நம் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். அமெரிக்காவுக்கு அவர்கள் வர்த்தகம் தான் முக்கியமானது. நாமும் சர்வதேச அரசியலில் அப்படிதான் இருக்க வேண்டும். நம்முடைய வணிகம் வளர வேண்டும். அந்த பணத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும். அப்படி செய்தால் நாடு செழிக்கும். எனவ அடிமட்டத்தில் இருந்துதான் முன்னேற்றம் வர வேண்டும். அதற்கான திட்டங்களை தான் அரசு ஏற்று நடத்த வேண்டும். இவர்கள் மாறுவார்கள் என்று நம்புவோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.