திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம் தராது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் பங்கேற்ற திருமாவளவன் பேசியதாவது:- சங்கிகள் இந்த மண்ணில் காலூன்றுவதற்கு அவர்களின் உத்தி என்ன என்றால் முதலில் அதிமுகவை பலவீனப்படுத்துவது தான். அவர்களின் உடனடியான இலக்கு என்பது திமுகவை எதிர்த்து நிற்கிற அடுத்த எதிர்க்கட்சி பாஜக என்பதை 2026ல் நிலைப்படுத்த வேண்டும் என்பது தான். எனவே எடப்பாடி அவர்கள் தப்பித்தவறி பாஜகவோடு சென்றால், கதை முடிந்துவிடும். அமித்ஷா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முள்ளு செய்து ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்பது போன்று அமித்ஷா சொல்கிறார். இன்னும் 100 மோடிகள் பிறந்துவர வேண்டும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்றுவதற்கு. விசிக இருக்கிறவரை அந்த கதை நடக்காது. அதற்கு இடம் கொடுக்க மாட்டோம். உங்களை விரட்டி அடிக்கும் வரை சிறுத்தைகள் ஓய மாட்டோம். இந்த மண்ணில் காலூன்றுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இன்னும் சொல்ல விரும்புகிறேன் திமுகவை விட ஒரு படி மேலே நாங்கள் இருப்போம். சனாதன சக்திகளை விரட்டி அடிப்பதிலே, உங்கள் சதியை முறியடிப்பதிலே, உங்கள் சூது சூழ்ச்சியை வீழ்த்துவதிலே நாங்கள் முதல் நிலையிலேயே இருப்போம்.
இன்றைக்கு நாங்கள் எடுத்துள்ள உறுதிப்பாடு அதுதான். நாளைக்கு எத்தனை சீட்டு. 6 எட்டு ஆகுமா என்று கேட்கிறார்கள். 6 தொகுதிகள் 10 ஆனாலோ, அல்லது 20 ஆனாலோ நாங்கள் ஆட்சியை பிடிக்கப் போவது கிடையாது. ஆனால் நாங்கள் ஆட்சியை அமைக்கக்கூடிய வலிமை பெற்றவர்கள். விசிக இடம்பெற்றுள்ள அணி, ஆட்சி அமைப்பதற்கு வலுவான ஒரு சக்தி என்பதை இந்த தேர்தலில் மீண்டும் நாங்கள் உறுதி படுத்துவோம். சாதி வாழ்க என்று சொல்பவர்கள்தான சனாதனிகள். சாதி ஒழிக என்று என்றைக்காவது அண்ணாமலை பேசியது உண்டா? அமித்ஷா பேசியது உண்டா? மோடி, ஆர்எஸ்எஸ் பேசியது உண்டா? சங்கராச்சாரியார்களின் வழிதோன்றல்கள் பேசியது உண்டா? ஆடிட்டர் குரு மூர்த்தி ஒப்புக்கொள்ளுவாரா? போலி தமிழ்தேசியம் பேசுபவர்கள், குடிப்பெருமை என்று சொல்கிறார்கள். அவர்கள் சாதி ஒழிப்பை பற்றி பேசுவது இல்லை. அவர்களின் நோக்கம் திமுகவை வீழ்த்திவிட்டு பாஜக வலிமை பெற்று வர வேண்டும் என்பதுதான். திமுக கூட்டணியை சிதறடிப்பதன் மூலம் இங்கே சனாதன சக்திகளை வலிமை பெற செய்ய வேண்டும் என்பது தான்.
கர்நாடகாவிலே, ஆந்திராவிலே அவர்களால் சாதிக்க முடிந்தது. கேளராவிலும் கூட அவர்களால் ஒரு எம்.பியை பெறக்கூடி சக்தியை பெற்றிருக்கிறார்கள். மகராஷ்டிராவிலே அவர்களால் ஆட்சியில் பங்கு பெற முடிகிறது. அவர்களால் இன்றைக்கு ஒரு அங்குளம் கூடம் அசைய முடியவில்லை. இங்கே அவர்கள் வாலாட்ட முடியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் அவர்கள் தொடர்ந்து மூக்கறுபட்டும், பல்லுடைபட்டும் நிற்கிறார்கள். தாமரை மலர்ந்தே தீரும் என்று அண்ணாமலைக்கு முன்பு எத்தனையோ பேர் சொன்னது உண்டு. ஆனால் அது நடக்கவில்லை. இந்த சாதி பெயரை சொல்லிக்கொண்டு நமக்கு எதிராக சில கூலி கும்பல்கள் விமர்சனங்களை எழுதி கொண்டிருக்கிறார்கள். நான் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதை கொச்சை படுத்துகிறார்கள். அவர்களும் சனாதன கும்பலுக்கு விலைபோக கூடிய கூலி குமபல்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிமுக அணிக்கு திருமா வருவாரா? திமுகவோடு சண்டை நடக்குமா? நடக்காதா? வேங்கைவயல் பிரச்சினையை தூண்டிவிட்டால் உணச்சிவசப்பட்டு, முதலமைச்சருடன் சண்டை போட்டுக் கொண்டு வெளியே வருவாரா இவை எல்லாம் அவர்கள் எதிர்பார்ப்புகளாகும். இந்த பிரச்சினைகள் எல்லாம் உண்மைதான். நாங்கள போராடுவது உண்மைதான். திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற காவல்துறையை எதிர்த்தோம் உண்மைதான். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து போராடினோம். வேங்கை வயலுக்காக போராடினோம். இன்றைக்கும் போராடுகிறோம். நாளைக்கும் போராடுவோம். தொடர்ந்து போராடுவோம். ஆனாலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம். அது எங்களால் நிகழ்ந்தது என்கிற களங்கத்தை ஒருபோதும் நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் இடம்கொடுத்ததால் தான் தம்பி நீங்கள் கனவு காணுவது பழிக்கும். திருமாவளவன் பலவீனமானால் தான் நீங்கள் 2வது இடமா? முதலாவது இடமா? அல்லது பூஜியமா? என்று தெரியவரும்.
இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலின் ஒற்றை துருப்புச் சீட்டு விசிகதான். அதை நாங்கள் நிலைநாட்டுவோம். கூட்டணியில் இருப்பதால் நாங்கள் ஒருபோதும் கைகட்டி நின்றது இல்லை. பானையை உடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற எங்கள் பகைவர்களே. இந்த பானையை உடைக்கவும் முடியாது. சிதைக்கவும் முடியாது. அமைப்பாய் திரள்வோம் என்று சொன்னேன். திரண்டுவிட்டோம். அங்கிகாரம் பெறும்வோம் என்று சொன்னோம். பெற்றுவிட்டோம். அதிகாரம் வெல்வோம். வெள்ளிவிழா மாநாட்டில் சொன்னேன். கோட்டையில் கொள்கை வெல்ல களமாடுவோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்.
எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல், நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கிறது என்று தீர்மானிக்கிற தேர்தல் அல்ல. சனாதன கும்பல் வெவ்வேறு முகமூடிகளோடு இங்கே களத்தில் இருக்கிறார்கள். போலி தமிழ்தேசிய முகமூடி, அரசியல் வெற்றிக்காகவே கட்சியை தொடங்கியுள்ள ஜனநாயகன் படத்தின் கதாநாயகன் என்கிற முகமூடி. இவற்றை எல்லாம் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு விசிகவுக்கு இருக்கிறது. 2026ல் திமுக வெற்றி பெறுகிறதா? திமுக கூட்டணி வெற்றி பெறுகிறதா? என்பதைவிட விசிகவின் வியூகம், உத்தி வெற்றி பெறுகிறது. விசிகவால் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்டது என்கிற வரலாற்றை பதிவு செய்வோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.