Homeசெய்திகள்ஆன்மீகம்கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகல கொண்டாட்டம்..

கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகல கொண்டாட்டம்..

-

கோகுலஷ்டமி  நாடெங்கும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணன் அவதரித்த நாளான இன்று கிருஷ்ணஜெயந்தி நாட்டின் பல பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.

நம்முடைய சமய மரபில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி பண்டிகைகள் உண்டு. அந்தந்த தெய்வத்திற்கு தனித்தனி சிறப்புகளும் உண்டு. ஆனால் குழந்தைகள் கூட குதூகலமாகக் கொண்டாடுகின்ற பண்டிகைகளில் ஒன்று “கிருஷ்ண ஜெயந்தி”. மற்றொன்று விநாயகர் சதுர்த்தி.

தேசிய அளவில், அனேகமாக எல்லா மாநிலங்களிலும், எல்லா மொழி பேசுபவர்களும், கொண்டாடும் ஒரு பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி என்பது மற்றுமொரு விசேஷம்.

கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்ற பெயரில் அழைப்பார்கள். கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைகளை கண்ணன், ராதை போல வேடமிட்டு வழிபடுவது நன்மைகளை தரும். அப்படி வேடமிடும் குழந்தைகள் புத்தி கூர்மையுடன் இருப்பார்கள். பெண்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று மனம் உருகி வழிபட்டால் திருமணம் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்.

குழந்தைகளுக்கான மிகச் சிறப்பான பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. அன்று தயாரிக்கப்படும் பிரசாதங்கள் எல்லாமே குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுகின்ற சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணெய், பால்திரட்டு, நாட்டு சர்க்கரை வடை போன்ற பிரசாதங்கள். இவைகள் விரும்பாத குழந்தைகள் உண்டா? அடுத்து, எந்தக் குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தையை ஆசையோடு அழைக்கின்ற பொழுது வைக்கும் பேர் “கண்ணா”. இந்தப் பெயர் கிருஷ்ணனுக்கு உரியது அல்லவா.

அடுத்து அந்த விழாவில் குழந்தைகளுக்கு கிருஷ்ணனாக வேடமிட்டு பெரியவர்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அன்றைக்கு குழந்தைகளை கிருஷ்ணனாகவே பாவிக்கிறோம். ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும், மயில் கிரீடம் வைத்து ஒரு புல்லாங்குழல் கொடுத்துவிட்டால் கிருஷ்ணனாக மாறிவிடும் மகிழ்ச்சியைக் காண்கின்றோம்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் அவதார வைபவத்தைக் கொண்டாடுகிற விழாவாகும். இது இந்தியா முழுதும் கொண்டாடப்படும் தேசிய அளவிலான விழா. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் மாலை நேரத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. 1982 ம் ஆண்டு முதல் தமிழக ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. பல இடங்களில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல், கோ பூஜை என கோலாகலமாக நடக்கிறது. கிருஷ்ணன் கோயில்களில் மட்டுமல்லாது, எல்லா பெருமாள் கோயில்களிலும், விசேஷ திருமஞ்சன அலங்காரங்கள், வீதி உலா நடைபெறும்.

கேரளாவில் குருவாயூர் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோயிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் – சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு பார்ப்பது பக்தியை வளர்க்கும். வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை. கண்ணனை வழிபட்டால் சொன்னது பலிக்கும். மனதில் உள்ள கெட்ட எண்ணங்களும், அகந்தையும் அழியும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். “ஓம் நமோ பகவதே வாசுதேவாயா” போன்ற கிருஷ்ண மந்திரங்களை ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம்மீது படும்.

பதினெண்கீழ்கணக்கு நூற்களில் ஒன்றான திரிகடுகம் கடவுள் வாழ்த்து மாயோனைப் போற்றுகிறது.

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி

ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.

இந்நாளில் கிருஷ்ணனை வழிபட்டு அவரின் அருளைப் பெற்று அனைவரும் மகிழ்வோடு வாழ்வோம்.

 

MUST READ