திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருக பெருமானை வழிபட்டனர்.
தமிழ் கடவுளான முருக பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 12 நாட்கள் நடைபெறும் மாசித் திருவிழாவை ஒட்டி நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் 7ஆம் திருநாள் அன்று சுவாமிக்கு சிகப்பு சாத்தியும், தொடர்ந்து 8ஆம் நாள் திருவிழாவன்று பச்சை சாத்தியும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுவாமி எட்டு வீதிகளிலும் வலம் வந்தது.
மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பத்தாம் திருவிழா நாளான இன்று அதிகாலை திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5.30-க்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் குமரவிடங்க பெருமாள், வள்ளி தெய்வானுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முதலில் விநாயகர் தேர் நான்கு ரத வீடுகளிலும் வலம் வந்து நிலையை வந்தடைந்தது. காலை 7 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமான் எழுந்தருளிய பெரிய தேரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர். தேரானது நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து மீண்டும் நிலையை வந்தது. இதைத் தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்பட்டது.