நமக்கு என்ன வேண்டும்
நமக்கு என்ன வேண்டும் என்று சிந்திப்பதற்கு முன்பு எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
எனக்கு என்ன வேண்டும் என்ற கேள்வி மிகச்சாதாரணமானதுதான். ஆனால் இந்த கேள்வி இரண்டு மூன்று நாட்கள் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது.

என்னைப் போன்றே நீங்களும், நாம் எல்லோரும் எதையோ தேடி தினமும் ஓடுகிறோம். ஆனால் எதைத் தேடி ? எதற்காக ஓடுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
பணம், பொருள், பதவி, புகழ், கடற்கரை அருகில் ஒரு பங்களா , இவை எல்லாம் இருக்கின்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? இல்லையே!
உலகமே அமைதி இல்லாமல் நிம்மதியை தேடி, திருப்தியை தேடி கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் கூட்டங் கூட்டமாக போய் கொண்டு இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தேடியது கிடைக்கவில்லை. மீண்டும் சண்டை, சச்சரவு, வெறுமை, வெறுப்பு என்று அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறோம்.
நாம் எதைத் தேடுகிறோம்? நமக்கு என்ன வேண்டும்? இந்த கேள்வியை பின் தொடர்ந்து செல்லும்போது வாழ்க்கைக்கு தேவையான விடை கிடைக்கிறது.
உங்களுக்கும் எனக்கும் அடைப்படை தேவை, உண்பதற்கு உணவு, உடுத்திக்கொள்ள உடை, உறங்குவதற்கு ஒரு வீடு. இது மனித சமுதாயத்திற்கு அத்தியாவசியமானது. எல்லோருக்கும் இதுதான் தேவை. இதில் நாம் திருப்தி அடைந்து விடுகிறோமா?, ஆம், திருப்தி அடைந்து விடுகிறோம். ஆனால் மகிழச்சி அடையவில்லை.
திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. பிடித்த உணவை வயிறு நிறைய சாப்பிட்டு விட்டோம் என்றால் ஒருவித திருப்தி ஏற்படுகிறது. அடுத்த சில மணி நேரங்களில் பசி எடுக்க ஆரம்பித்து விட்டால் அந்த திருப்தியும் காணாமல் போய்விடுகிறது.
புதியதாக வீடு கட்டிவிட்டோம் அல்லது வாங்கிவிட்டோம் என்றால் திருப்தி ஏற்படுகிறது. சில நாட்களுக்கு பிறகு அந்த திருப்தியும் காணாமல் போய்விடுகிறது. திருப்தி என்பது தற்காலிகமானது. கூர்ந்து கவனித்தால் நாம் எல்லோரும் அதை நோக்கித்தான் சென்றுக் கொண்டிருக்கிறோம். நமது தேவை அதுதான் என்று முடிவிற்கு வந்து விடுகிறோம்.
சில நேரங்களில் மனம் அமைதியை விரும்புகிறது. அந்த அமைதி வேண்டி ஒரு கோயிலுக்கு போனால் கிடைத்து விடுகிறது. ஒரு சாமியாரின் அருள் வாக்கை கேட்டால் மனது அமைதி அடைந்து விடுகிறது. ஒரு கருத்தை கேட்டாள், ஒரு கொள்கையை சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டால் அமைதி கிடைத்து விடுகிறது. ஆனால் அதில் தீர்வு கிடைத்து விடுகிறதா என்றால் இல்லை. நெருப்பு மீது இருக்கும் சாம்பலைப்போல் அந்த நேரத்திற்கு மனம் அமைதியடைகிறது. ஆனால் நெருப்பின் கனல் அணையாது. அதுபோல் மனதும் குழப்பத்தில் இருந்துக் கொண்டே இருக்கும்.
ஆகையால்,நமக்கு என்ன வேண்டும் என்ற உண்மையை கண்டறிந்து விட்டோம் என்றால் தெளிவு ஏற்பட்டுவிடும். தெளிவு ஏற்பட்டு விட்டால் தேவையற்ற கருத்து, தேவையற்ற கொள்கை, தேவையற்ற சாமியார், கடவுள் என்று எங்கேயும் அலைய வேண்டியதில்லை. இப்போது நமக்கு நிரந்தரமான திருப்தி வேண்டும். நிரந்தரமான மகிழ்ச்சி வேண்டும். அதை தேடுகிறோம்.
நான் நிரந்தரமான மகிழ்ச்சியை தேடுகிறேன் என்று சொல்லும்போது, எதை தேடுகிறேனோ அதையும், “தேடுகின்றவரையும்“ அறிந்துக் கொள்ள வேண்டும்.இது மிகவும் முக்கியமானது.”தேடுகின்றவர்” யார் ? அவர் என்னவாக இருக்கின்றார் என்பதை அறிந்துக் கொண்டால் தேடுவது சுலபமாகிவிடும். அம்பானி போன்ற ஒருவர் வீட்டில் சம்பந்தம் செய்துக் கொண்டால் நிரந்தர மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.அல்லது அதுபோன்ற ஒரு பணக்கார வாழ்க்கையை தேடுகிறோம்.
அதுபோன்ற வசதியான வாழ்க்கையை தேடுவதில் தவறில்லை. தேடும் பொருளுக்கும் தேடுகின்றவருக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது அவசியம் இல்லையா?
நான் நிரந்தர மகிழ்ச்சியை தேடுகிறேன் என்றால் தேடுகின்ற நான், என் மனம், என் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம் தானே?
அதாவது, நான் என்னை அறிந்துக் கொள்ளாத வரையில் என் சிந்தனைக்கு எவ்வித அடிப்படை முக்கியத்துவமும் இல்லை. என் தேடல், என் கல்வி அனைத்தும் வீணானது. சில மாயைகளில் நான் தப்பித்து வெற்றியாளனாக தெரியலாம், பலர் என்னை பாராட்டலாம். ஆனால், நான் என்னைப் பற்றி அறியாமல் இருக்கும் வரை, என்னுடைய முழு இயக்கத்தையும், செயல்பாட்டையும் உணராதவரை என் சிந்தனைக்கும், அறிவுக்கும் எவ்வித முக்கியத்துவமும் இல்லை.
நம்மை அறிந்து கொள்வதில் இருந்துதான் நமது வாழ்க்கை அஸ்த்திவாரத்தின் மேல் கட்டிடங்களை எழுப்ப முடியும். நாம் என்னவோ அதுதான் உலகம். நாம் முட்டாள் தனத்தோடும், பொறாமையோடும், வீண் பெருமையோடும், பேராசையோடும் இருக்கிறோம் என்றால் அதைதான் நம்மைச் சுற்றி விதைக்கிறோம். அதையே உற்பத்தி செய்கிறோம். அதே சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்.
நாம் கடவுளைத் தேடி ஆன்மீகப் பயணத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, மகிழ்ச்சியை தேடுவதற்கு முன்பு, ஒரு இயக்கத்தில் இணைந்து பங்காற்றுவதற்கு முன்னர், ஒருவரின் உதவியை நாடுவதற்கு முன்னர், அதாவது அனைத்திற்கும் முன்பு நம்மை நாம் அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. இதில் அக்கறை உள்ள நபர், ஆர்வம் உள்ள நபர் மட்டுமே அனைத்து பொறுப்பிற்கும் தகுதி வாய்ந்தவர் என்று நான் கருதுகிறேன்.
நானும் நீங்களும் நம்மை அறிந்துக் கொள்ளாவிட்டால் இந்த சமூகத்தில், நடைமுறையில், உறவில், நாம் செய்கின்ற மற்ற காரியங்களில் எப்படி மாற்றத்தை கொண்டுவர முடியும்?
உங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் என்பது, உங்கள் தனிவழி சிந்தனையை, உங்கள் நாடு, உங்கள் தேசியம், உங்களின் நம்பிக்கைகளைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் பின்னணியை தெரிந்துக் கொள்ளாமல், உங்கள் சிந்தனையின் சாரத்தைப் பற்றி தெரிந்துக் கோள்ளாமல் நீங்கள் தேடுவது, பேசுவது முற்றிலும் பயணற்றது.
நாட்டில் நிலவிவரும் மதவாதம், போர், கலவரம், வன்முறை, நெருக்கடி, கம்யூனிசம் ஆகியவற்றை புரிந்து கொள்வதற்கு முன்பு, வாழ்வின் அடிப்படையை கண்டுப்பிடிப்பதற்கு முன்பு, அந்த ஆய்வை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். இது மிகவும் எளிதானதாக தோன்றும், ஆனால் கடினமானது.
தன்னைத் தானே பின் தொடர்ந்து பார்ப்பதும், நமது சிந்தனைகள் எப்படி செயல்படுகிறது என்பதை அறிவதும் மிகவும் முக்கியம். அதற்கு அதிகமான விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தன்னை அறிந்து கொள்வது என்பது, நமது செயல்பாடுகளில், நமது உறவை பற்றி முழுவதும் கற்றறிவதாகும். இந்த கற்றறிதல் பல நேரங்களில் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. அவசர உலகத்தில் பணம் சம்பாதிப்பது, குடும்பத் தலைவனாக, தலைவியாக, ஒரு நிறுவனத்தின், அமைப்பின் பொறுப்பாளராக இருந்து வருவதால் தன்னை அறிவதற்கோ, தன்னுடைய செயல்பாடுகளை உற்று நோக்குவதற்கோ, கற்பதற்கோ நமக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது.
அதனால் சுலபமாக ஆன்மீக குருக்களை பின்பற்றுகிறோம், முரண்பாடான கொள்கைகளில் சிக்கிக் கொள்கிறோம். அதுவே சிறந்தது என்று ஏற்றுக்கொள்கிறோம். கடைசியில் வெறுமை ஏற்படுகிறது. மீண்டும் நம்மிடத்தில் இருந்து தொடங்குகிறோம். இதுநாள் வரை தவறான கருத்தில், தவறான கொள்கையில், தவறான வழிப்பாட்டு முறையில் வாழ்ந்ததை நினைத்து வெட்கப்படுகிறோம். மீண்டும் நம்மிடம் இருந்து ஆரம்பிக்கின்றோம்.
உங்களைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு தெளிவான மனிதனாக மாறுகிறீர்கள். தன்னைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முடிவே இல்லை. அது ஒரு முடிவற்ற இயக்கம். அதை ஒருவர் கற்க கற்க, உள்ளே செல்ல செல்ல, ஒரு அமைதி காணமுடிகிறது. மகிழ்ச்சியை உணர முடிகிறது. அந்த மகிழ்ச்சியில் மெய்ப்பொருள் உணரமுடிகிறது. மாறுதல் ஏற்படுகிறது. அதுவே நம்மை சுற்றிலும் பரவுகிறது. அதுவே சமூக மாற்றம்!
(தொடர்ந்து பேசுவோம்…)
– என்.கே.மூர்த்தி