விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தொற்றுகளை தடுக்க மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை என சௌமியா சாமிநாதன் கருத்து.
இந்தியாவிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகமாகவும், உற்பத்தி குறைவாகவும் உள்ளது. இந்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மை ஆலோசகர் ஆலோசகர் சௌமியா சாமிநாதன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மை ஆலோசகர் சௌமியா சாமிநாதன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் கீழ் இயங்கி வந்த நிலையில், தற்போது பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையில் 60 இடங்கள் மாணவர்களுக்காக உள்ளது.
சௌமியா சாமிநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது,
பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை மிகவும் முக்கியமானது, நாம் மருத்துவ துறையில் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் 99 சதவீதத்திற்கும் மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஆனால் நமது தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் செயல்படுவதில்லை.
நமது கால சூழல் மற்றும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு மருத்துவ உபகரணங்களை நாமே உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வயதாகும் போது பயன்படுத்தப்படும் ((வீல் சேர் போன்ற))மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகம் உள்ளது. ஆனால் அவற்றின் உற்பத்தி குறைவாக உள்ளது மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியை இந்தியா முன்னெடுக்கலாம்.
காலநிலை மாற்றத்தால் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். அதிக அளவு வெப்பம், வெள்ளம் போன்றவைகளை சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது கால நிலைகளுக்கு ஏற்ப மருத்துவ தொழில் நுட்ப வளர்ச்சியின் தேவை உள்ளது.
மாசுபாடு குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தேவையும் உள்ளது. நீர் மாசுபாடு காற்று மாசுபாடு ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் மருத்துவ உபகரணங்களின் தேவை உள்ளது.
தற்போது மனிதர்களுக்கு வைரஸ் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் இருந்து ஜிகா வைரஸின் தாக்கம் அறியப்படுகிறது. ஜிகா வைரஸின் தாக்கம் கடுமையானதாக இல்லாவிட்டாலும் புனேவில் ஒருவருக்கு தாக்கம் ஏற்பட்டு மூளை பாதிப்பு உருவாகியுள்ளது. கேரளாவிலும் நிபா வைரஸ் தாக்கி ஒருவருக்கு உடல்நிலை மோசம் அடைந்ததாக தெரிகிறது.
மத்திய அரசின் “ஒன் ஹெல்த் மிஷன்”என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மனிதர்களுக்கு வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகளை பயன்படுத்துவது போல் பிற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க விலங்குகளின் நலனையும் பேணவேண்டிய சூழல் உள்ளது.