தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த நவ 26ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தற்போது தொடர்ந்து அதே இடத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு (நவ. 3 வரை ) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரித்துள்ளது போலவே சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.