வங்கி, வருவாய் துறை, உள்ளிட்ட அரசுத் துறைகளை தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல் துறையும் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளது.


நீதிமன்றம் உத்தரவு மூலமாக உத்தரவு பெற்று அசையும் சொத்துக்களை முடக்கி ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் தொகையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்கான பத்தாயிரம் ரூபாய் அபராதத்தை எடுத்து கொண்டு மிச்ச தொகையை வாகன ஓட்டியிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை.

தமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து வழக்கில் 283 பேரின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளது சென்னை காவல் துறை
வங்கியில் பெறப்படும் கடன் மற்றும் அரசு துறையில் வாங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்த தவறினால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடன் வாங்கியவரின் அசையும் அசையா சொத்துக்களை வங்கி அதிகாரிகளோ அரசுத்துறை அதிகாரிகளோ ஜப்தி செய்து அதை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் தொகையில் கடனாளி தர வேண்டிய கடனை தீர்த்துக் கொள்வார்கள், இந்த நடைமுறையை முதல் முறையாக பின்பற்ற தொடங்கியுள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு காவல்துறை, குறிப்பாக சென்னை காவல்துறை செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் ரொக்கமாக அபராதத்தை கொடுப்பதன் மூலம் காவலர் லஞ்சம் பெறுவது அதிகரிப்பதாக கருத்தில் கொண்டு பணம் இல்லா பரிவர்த்தனையை சென்னை போக்குவரத்து காவல்துறை தொடங்கியது, போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிப்பதை தாண்டி ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலமாக தானாகவே போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் வசூலிப்பது, ரிமோட் மூலமாக சிக்னல்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களையும் சென்னை போக்குவரத்துக் காவல்துறை செயல்படுத்தி வருகிறது.
அதன் அடுத்த கட்டமாக தற்பொழுது விபத்தில்லா நகரமாக சென்னையை மாற்றுவதில் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகவும் கடந்த கால புள்ளி விவரங்களின் அடிப்படையில் உயிரிழப்புகள் ஏற்படும் அதிகப்படியான விபத்துக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நிகழுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் சரத்கர்.

குறிப்பாக புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு நேரடியாக 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்க முடியாது எனவும் வாகனத்தை முதலில் பறிமுதல் செய்து வைத்துவிட்டு நீதிமன்றத்தை நாடி பத்தாயிரம் ரூபாய் பணத்தை கட்டி விட்டு வாகனத்தை பெற்று செல்வதற்கான நடவடிக்கை உள்ளதாக தெரிவித்த அவர் அவ்வாறு போக்குவரத்து விதிமுறை ஈடுபடுபவர்கள் நீண்ட காலமாக அபராதம் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்தாண்டில் மட்டும் 28,000 குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 21 ஆயிரம் வழக்குகளில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை கால் சென்டர் மூலமாக அபராதம் செலுத்தாதவர்களை தொடர்பு கொண்டு அபராதம் செலுத்த வலியுறுத்தியும் பல்க் எஸ்எம்எஸ் என்று சொல்லக்கூடிய கூட்டு எஸ் எம் எஸ் மூலமாக தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டியும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது எனினும் கடந்தாண்டில் மீதமுள்ள 7000 வழக்குகளில் தற்போது வரை அபராதம் செலுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
எனவே போக்குவரத்து காவல்துறை அளிக்கும் பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது வரை குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அபராதம் செலுத்தாத நபர்களை முதற்கட்டமாக அடையாளம் கண்டு 283 பேருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடி அவர்களின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்வதற்கான அதிரடி உத்தரவை போக்குவரத்து காவல்துறை பெற்றுள்ளது.
முதற்கட்டமாக 283 பேரின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்வதற்கான உத்தரவை நீதிமன்றத்தில் பெற்றுள்ள போக்குவரத்து காவல்துறை இந்த உத்தரவு ஆணையை அவர்களிடம் சமர்ப்பித்து 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
14 நாட்களுக்குள்ளும் அபராத தொகையை செலுத்தாவிடில் நேரடியாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு பணம் செலுத்தாத நபரிடம் இருந்து ஏதாவது ஒரு அசையும் சொத்தை ஜப்தி செய்வதற்கு போக்குவரத்து காவல்துறைக்கு அதிகாரம் உண்டு, அவ்வாறு ஜப்தி செய்யப்படும் அசையும் சொத்து வாகனமாக மட்டும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் எந்த வகையான அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பொதுவாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று ஆனால் அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அபராதம் செலுத்தி விட்டாலோ அல்லது அதற்கு நிகரான நடவடிக்கைகளில் வாகன ஓட்டி ஈடுபட்டாலோ வாகனம் திருப்பி ஒப்படைக்கப்படும், ஆனால் தற்பொழுது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் ஜப்தி செய்யப்படும் வாகனங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட மாட்டாது மாறாக ஜப்தி செய்யப்பட்ட அசையும் சொத்தை பொது ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தில் அபராத தொகை 10,000 போக மீதம் உள்ள தொகையை வாகன ஓட்டியிடமே ஒப்படைக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
283 பேருக்கு எதிராக சொத்துக்களை ஜப்தி செய்வதற்கு உத்தரவு பெற்றுள்ள சென்னை போக்குவரத்து காவல்துறை இதில் முதற்கட்ட 180 பேரிடம் ஜப்தி உத்தரவு ஆணையை அளித்துள்ளது ஜப்தி ஆணை பார்த்து திகில் அடைந்த 140 குடிமகன்கள் உடனடியாக அபராத தொகையை செலுத்தி விட்டதாகும் மீதம் உள்ள 40 பேரும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள 14 நாட்களுக்குள் செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பொதுவாக சொத்துக்களை பறிமுதல் செய்து அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு காவல்துறையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் அதனை தொடர்ந்து தற்பொழுது கிரிமினல் குற்றம் அல்லாத போக்குவரத்து விதிமீறல்களில் சொத்துக்களை ஜப்தி செய்யும் வரை சென்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது தமிழகத்திலேயே சென்னை போக்குவரத்து காவல்துறை தான் முதல்முறை என தெரியவந்துள்ளது


